Header Ads



வல்லரசுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

அணு ஆராய்ச்சி தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், ஈரான் மற்றும் வல்லரசு நாடுகளுக்கிடையிலான இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை தொடங்கியது.

இந்த பேச்சுவார்த்தையில், ஈரானுடன் "பி5+1' எனப்படும் குழுவைச் சேர்ந்த பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷியா, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாடுகள் பங்கேற்றன. "பி5+1' குழுவின் தலைவர் கேதரீன் ஆஷ்டன், இந்தப் பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்தார்.

முன்னதாக, இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்று கருத்து தெரிவித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜரீப், பேச்சுவார்த்தையில் மிகவும் முக்கியமான கட்டத்தை தாங்கள் நெருங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

ஈரானின் அணு ஆராய்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அந்நாடு மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையால் அந்நாட்டின் எண்ணெய் வருவாய் பாதியாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை மூலம் பொருளாதாரத் தடை நீக்கம் பெறுவதில் ஈரான் மும்முரமாக உள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஈரானுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும், அதன்மூலம் சிரியா போன்ற பிரச்னைகளில் ஈரானை ஈடுபடுத்தித் தீர்வு காணவும் இந்த பேச்சுவார்த்தையைப் பயன்படுத்திக்கொள்வதில் ஆர்வமாக உள்ளன.

No comments

Powered by Blogger.