Header Ads



ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவோம் - அமைச்சர் அதாஉல்லா அழைப்பு


(ஜே.எம். வஸீர்)

50 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீரகெட்டிய பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டிடத் தொகுதி உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, தென்மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் சில்வா, பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, தென்மாகாண ஆளுனர் கௌரவ குமாரி பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, வி.கே. இன்திக, தேசிய பாதுகாப்பு மற்று நகர அபிவிருத்தி அமைச்pன் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர், ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க், வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவர் பியசேன லியனாரச்சி உள்ளிட்ட இன்னும் பல மக்கள் பிரதிநிதிகளும் அரச உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா,
 
எமது நாட்டிற்கு சுதந்திரத்தை அன்று டி.எஸ். சேனநாயக்கா அவர்கள் பெற்றுத்தந்தாலும், எமது ஜனாதிபதி அவர்கள் பெற்றுத்தந்த சுதந்திரம் போல் அது அமையவில்லை. காரணம் டி.எஸ். சேனாநாயக்க எமது ஜனாதிபதி அவர்கள் நமது நாட்டை மீட்க பட்ட கஸ்டமும் சிரமமும் போன்று அவர்கள் அன்று பட்டதுமில்லை. 30 வருட காலம் பீடித்திருந்த கொடூரப் பயங்கரவாதிகளிடமிருந்து நமது நாட்டை  மீட்ட எமது ஜனாதிபதி அவர்கள் அதன் போது உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பலவற்றின் எதிர்ப்பினையும்  முகம் கொண்டார். அதனையும் பொருட்படுத்தாது துணிச்சலுடன் செயற்பட்டு நமது தாய்நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டு நமது மக்களுக்கு நிலையான சுதந்திரத்தைப் பெற்றுத்தந்தார். 

நமது நாட்டை ஆண்ட எல்லாத் தலைவர்களும் அரசியில் இலாபம் கருதியே நாட்டை நேசித்தார்கள். இருப்பினும், அதற்கு மாறாக நமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதத்தை பிச்சைக்காரன் புண் போன்று வைத்து அரசியல் செய்யவில்லை. தாய் நாட்டின் மீது தூய்மை நிறைந்த அன்பு கொண்டவனாக நாட்டுப்பற்றுள்ளவராக செயற்பட்டு பயங்கரவாதிகளிடமிருந்து நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்ததை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.

நமது நாட்டைப் பொறுத்தவரையில் அபிவிருத்தி என்று ஒன்றை இப்போதுதான் நமது மக்கள் காண்கின்றனர். ஒரு நாட்டில் யுத்தமும் அதற்கான செலவீணங்களும் செய்து கொண்டிருக்கும் வேலையில் சமாந்தரமாக அபிவிருத்திப் பணிகளுக்கும் செலவு செய்த ஒரு அரசாங்கம் என்றால் அது மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கமே. என்பதை எவரும் மறுக்க முடியாது. இன்று எமது நாட்டைப் பாருங்கள். நகரம், கிராமம் என்று சமாந்தரமாக அபிவிருத்திப் பணிகள் நடைபெறுகிறது. ஒரு நாட்டின் முதுகெலும்பான பாதை அபிவிருத்தி உச்ச நிலைமையை அடைந்துள்ளது. வீரகெட்டிய பிரதேசத்திற்கு அன்று ஐந்து ஆறு மணித்தியாலயங்கள் கொழும்பிலிருந்து தேவைப்பட்டது. இன்று இரண்டரை மணித்தியாலயத்தில் வீரகெட்டியவை வந்தடைந்தோம். இதுதான் பாதை அபிவிருத்தியின் உச்சப் பயன்பாடு. எமது நாட்டில் காபட் இடப்படாத பாதைகளே இல்லை என்றளவிற்கு நெடுஞ்சாலை அபிவிருத்தி ஜனாதிபதி அவர்களின் தலைமையின் கீழ் வளர்ச்சியடைந்துள்ளது. 

இவ்வாறு பாதைகள் அபிவிருத்தி அடைந்ததனால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது. மீன்பிடி, விவசாயம் மேலும் நமது நாட்டில் வளர்ச்சியடைந்துள்ளது. நமது ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் மக்களுக்கு நெருங்கிய சேவைகளை வழங்கும் உள்ளுராட்சி சபைகள் பல இனங்காணப்பட்டு எனதமைச்சின் கீழ் செயற்படும் புறநெகும திட்டத்தின் ஊடாக நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளுக்கு உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் திட்டமிட்டு சிறிய நகரங்களை அமைத்து வருகின்றோம். இன்றும்  நாட்டில் காணப்படும்; உள்ளுராட்சி சபைகளை திட்டமிட்டு அபிவிருத்தி செய்வதற்காக இன்னும் பல வேலைத்திட்டங்களும் எனதமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

எனவே நமது தாய் நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தது போன்று பல அபிவிருத்தி புரட்சிகளுக்கு வித்திட்டு தலைமை தாங்கும் நமது ஜனாதிபதி அவர்களின் கரங்களை பலப்படுத்த ஜாதி இன மத கட்சி பேதமின்றி முன்வருமாறும் அமைச்சர் தனதுரையில் வேண்டிக் கொண்டார். 

No comments

Powered by Blogger.