Header Ads



நாடு சுதந்திரமான காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறது - கிழக்கு முதலமைச்சர் சொல்கிறார்

இலங்கைக்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகளின் போலியான பிரசாரங்கள் மற்றும் சவால்களுக்கும் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளுமை மிக்க தலைமைத்துவ கட்டமைப்பினாலும் தான் 23 வது பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது உச்சி மாநாட்டை நமது நாட்டில் நடத்துவதற்கு  கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர ஆசிரியர் சங்கத் தலைவர் அதிபர், ஏ.ஜே.எம்.றூமி தலைமையிலான அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பின் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

 நாட்டின் அரசியல் ஸ்திரதன்மையும் மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டெடுத்த பின்னர் இலங்கையின் வட - கிழக்கு  மாகாணங்களில் ஜனநாயக ரீதியான மாகாணசபை  தேர்தலை நடாத்தி அங்குள்ள மக்கள் தற்போது  சுதந்திரமான காற்றை  சுவாசித்துக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நாடு முழுவதும்  ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளையும் முன்னேற்றங்களையும்  வெளிநாட்டுத் தலைவர்களுக்கு நேரடியாகக் கண்டு கொள்ளக் கூடிய வாய்ப்பை இம் மாநாடு பெற்றுக்கொடுத்துள்ளது.

மேலும் இம் மாநாட்டை யொட்டி இலங்கைக்கு வரும் வெளிநாட்டு முதலீட்டர்கள் இங்கு ஏற்பட்டுள்ள சாதகமான  சூழ்நிலையை நேரில் அவதானித்து வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும்  கூடுதலான முதலீடுகளைச் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதோடு பொது நலவாய  நாடுகளின் உச்சி மாநாடு இலங்கையின் கீர்த்தியை உலக நாடுகளுக்கு  வெளிப்படுத்தும்  என்பது யாவரும் அறிந்த உண்மை எனவும் கூறினர்.

அழகும் பசுமைமிக்க இந் நாட்டில் பௌத்தர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்  அனைவரும் சகோதரத்துடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருவதையும் இம் மாநாட்டுக்கு வரும் அனைவரும் கண்டு கொள்ளக்கூடிய நிலைமையுள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர்)
ஜே.எம்.இஸ்மத்


No comments

Powered by Blogger.