நிந்தவூர் குறித்து பைசல் காசிம் எம்.பி.யின் வேதனைமிகு கருத்துக்கள்..!
(சுலைமான் றாபி)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிகாரத்தில் உள்ள நிந்தவூர் பிரதேச சபை இன்று அதன் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகளிலிருந்து விலகி விட்டது என பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்கள் தெரிவித்தார். நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனர்களாக கடமை புரிந்தவர்களுக்கு நேற்றைய தினம் (06.11.2013) நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் பட்டதாரிப் பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கி வருகின்றது. அந்த வகையில் இங்கு வருகை தந்திருக்கின்றவர்கள் சமூகங்கள் மத்தியில் ஒரு படி உயர்ந்தவர்களாக காணப்படுகிறீர்கள். எனவே எதிர்காலத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பினை சரிவர நிறைவேற்ற வேண்டும்.
மேலும் எமதூர் இன்னும் பல்வேறு துறைகளில் அபிவிருத்தி அடைய வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மறைவிற்குப் பிறகு பல்கலைக்கழகதிற்கு தெரிவாகும் பொறியியலாளர்கள் மற்றும் வைத்தியர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர். இவைகளை இன்னும் நாம் அதிகரிக்க வேண்டும். மேலும் நிந்தவூர் வன்னியார் வீதி காபட் இடப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டு காணப்படுகிறது. இந்த பாதை மீது இன்னமும் யாருக்கும் அக்கறை வரவில்லை. நிந்தவூர் மக்களை பார்த்தால் எல்லோரும் சுயநல வாதிகளாகவே காணப்படுகின்றனர். பொது நல வாதிகள் அல்ல.
நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலில் இயங்கிய நிர்வாகத்தினை மாற்றி புதிய நிர்வாக சபையினை நியமித்தோம். இருந்தாலும் பழைய நிர்வாக சபையினர் உறுதிகளை எடுத்துச்சென்று விட்டார்கள். மேலும் எமது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்திலிருந்து நிந்தவூர் வைத்தியசாலை வீதி புனரமைப்புக்காக சுமார் 12 இலட்சம் ரூபாய்க்களை ஒதுக்கினோம். ஆனால் இப்போது அந்த வீதியின் புனரமைப்பு வேலைகளை தொடர்ந்து செய்வதற்கு உலக வங்கி மறுத்து விட்டது. அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு உலக வங்கியின் திட்டத்தின் கீழ் 05 பாடசாலைகள் வழங்கப்பட்டது. அதில் அட்டாளைச்சேனைக்கு ஒரு பாடசாலையும், அக்கரைப்பற்றிக்கு 04 பாடசாலைகளும் வழங்கப்படுள்ளது. இதனை மாகாண சபை உறுப்பினர் கவனத்தில் எடுக்காமல் விட்டு விட்டார். இது இவ்வாறு இருக்க நிந்தவூர் பிரதேச சபை தற்போது தன்னிச்சையாக இயங்கிக்கொண்டு வருகிறது. அங்கு ஒரு முறையான நிர்வாகம் இல்லை. நெல்சிப் திட்டத்தின் கீழே அனைத்து வேலைகளும் இடம்பெற்று வருகின்றது. நிந்தவூர் 1ம் குறுக்குத்தெரு வீதி மற்றும் 2ம் குறுக்குத்தெரு வீதிகள் புனரமைப்பு செய்ய வேண்டிய தருவாயில் காணப்படும் போது குளத்திலிருந்து பரவட்டைப்பிட்டிக்கு கொங்கிரீட் வீதி போடப்படுள்ளது. மிக முக்கியமாக துவிச்சக்கர வண்டியில் செல்பவர்களுக்கே பாதை புனரமைக்கப்படுகிறது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிகாரத்தில் உள்ள நிந்தவூர் பிரதேச சபை இன்று அதன் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகளிலி இருந்து விலகி விட்டது. மேலும் நிந்தவூரில் இடம்பெறும் எந்த பிரதேச மட்ட அபிவிருத்திற்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவைகளுக்கு நாங்கள் பொறுப்பாளிகளும் அல்ல. இதற்கு பிரதேச சபை தவிசாளரும், ஒரு சில வங்குரோத்து பிடித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்களும் தங்கள் சுய நலனுக்காக முக்கிய வீதிகளை விட்டு விட்டு வேறு இடங்களில் வீதிகளை புனரமைப்பு செய்கிறார்கள். அரசாங்கம் பிரதேச மட்ட அபிவிருத்தி, மாகாண மட்ட அபிவிருத்தி, தேசிய மட்ட அபிவிருத்தி என நாடு பூராகவும் தனது பணியினை செய்து கொண்டு வருகின்றது. இதில் நாங்கள் எந்த அபிவிருத்திகளை செய்ய வேண்டுமோ அந்தந்த அபிவிருத்திகளை செய்து கொண்டு வருகின்றோம். அண்மையில் ஜனாதிபதி அவர்களுக்கு எமது ஊரின் வீதிகள் பற்றி அறிவித்த போது அதற்கான வேலைகளை தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டு வருகின்றது. எனவே எமதூரை நாம்தான் அபிவிருத்தி அடைய செய்ய வேண்டும். அதற்காக எமதூருக்கு உண்டான பாராளுமன்ற உறுப்பினரை யாராவது எந்த சந்தர்ப்பத்திலும் வெளியில் கொண்டு செல்ல வேண்டாம். அப்படி நடந்தேறினால் நாம் அக்கரைபற்றிக்கோ, சம்மாந்துறைக்கோ அல்லது கல்முனைக்கோ சென்று கையேந்திய நிலைமை ஏற்படும்.
எனவே இன்று நிரந்தர நியமனம் பெறும் எமது பட்டதாரிகள் உங்களுக்கு வழங்கப்பட இந்த சமூகப் பொறுப்பை அமானிதமாக ஏற்று எல்லோரும் சரிவர நிறைவேற்றி, இந்த ஊரின் கல்வி, கலாச்சாரம் இன்னும் இதர விடயங்களை அபிவிருத்தி செய்ய முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Post a Comment