துரோகிகள்..!
(ஜுனைட் நளீமி)
அகன்று கிடக்கும் பாலைவன ஏகாந்தரம். தூரத்து வெளிகளில் நதிகளாய் மின்னிக்கொண்டிருக்கும் கானல் நீர். மூக்குத்துவாரத்தினுள் நுழைந்து உச்சி மண்டை வரை ஏறிச்செல்லும் உஷ்ணக்காற்று வெப்பநிலை ஐம்பது பாகை செல்சியசிற்கும் அதிகம் என்பதை உணர்த்துகின்றது. கிடைத்த ஒரு மணி நேர இடைவேளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 'புல்டோசரின்' உடம்புக்குள் மறைத்துக்கொண்ட உடல். இஸ்ரேலின்; எதுவும் தேவை இல்லாமல் இருக்க முடியும் ஆனால் 'பெப்சி' இல்லாமல் சவூதி இல்லைதான். பெரிய லீட்டர் போத்தலை மடக்கென்று குடித்து விட்டு ஒரு ஏப்பம். சவூதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து 'தரிகுள் ஈராக்' பகுதியில் புதிய எண்ணெய் வயலை நோக்கி அமைக்கப்படும் காபட் வீதி நி;ர்மாணப்பணியில் ஆறு மாதங்கள் கடந்த நிலையில் அன்சாரும் பாருக்கும். இருபது வருடங்களுக்கு மேலாக இந்த பாலைவனப்பூமிதான் அன்சாருக்கு வாழ்க்கை.
இன்னுமரை மணி நேரம் கால் நீட்டி இருக்கலாம் என ஆறுதல் கூறும் கைக்கடிகாரம். மடித்து வைத்திருந்த பத்திரிகையினை எடுத்து சற்று மூழ்கி விடுகின்றான் அன்சார். சுதந்திரப்போரில் காணாமல் போன எத்தனையோ தியாகிகளது பெயரைப்போன்று சவூதியின் சாலைகளில் மறைந்து கிடக்கும் எத்தனையொ அன்சார்களின் உழைப்புக்கள் சீனப்பெருஞ்சுவராக நீண்டு கிடக்கின்ரன.
இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து படைவிலகல் செய்யும் காலப்பகுதி. புலிகளையும் மீறி வரதராஜப் பெருமாள் வடகிழக்கைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தியதற்காக புலிகள் பாசையில் துரோகிகளான தமிழ்த்தேசிய இராணுவம் பொலித்தீன் பைகளில் உயிரோடு இட்டு இருக்க கட்டி வெயிலில் தொங்கவிட்டு ஊனம் உருகும் வரை பட்சிகள் தின்னும.; அருகில் இருக்கும் 'இவன் துரோகி' பதாகைகள் . மாவடி ஓடைக் கடற்கரை. பாளடைந்த மொட்டை மாடிக்கட்டடம். பாரிய இடத்தைச் சுற்றி பனை ஓலைகளால் மறைக்கப்பட்ட பயிற்சி முகாம். ஐம்பது பேர் கொண்ட பதினோராவது பயிற்சி முகாம். என்னுடன் சேர்த்;து ஓரிரு முஸ்லிம் சிறார்களும் ஈழப்போராட்டத்தின் பங்காளியாகும் ஆசையில் பயிற்சிலிருக்கின்றொம். எச்.ஐ.மொஹமட் தம்பி வீட்டில் இஸ்ஹாக் மௌலவி போட்டுக்காட்டிய 'ஈகிள்' ஈரானிய திரைப்படக் கதா நாயகனாக மாறவேண்டும் என்ற அடிமனது ஆசைகளும், அவ்வப்போது கப்பம் பெறுவதற்காக கடைகளுக்கு முன் வந்து நிற்கும் பிக்அப்; வாகனங்களும், ஏ.கே.47 துப்பாக்கி போராளிகளும் இயக்கத்தில் சேருவதற்கென்ற முற்கோடுகளாயின.
இன்றொடு மூன்று மாதங்கள் கடந்தாகி விட்டது. பயிற்சி முகாம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. இப்போதெல்லாம் ஈழ இலட்சியங்களைத்தவிர எதுவும் மனதில் இல்லாத சுத்தமாய் சலவை செய்யப்பட்ட போராளி. த்மிழர் பொராட்டத்திற்கு நாமேன் உரமென நினைக்கத்தூண்டாத வகுப்புக்கள். வெற்றிலைக்கடை அலியார், புஹாரி விதானையார், மம்மது முத்துச்சேமன், ஷரிப் அலி ஆசிரியர் என புலிகளால் கொல்லப்பட்ட ஊர்த்தலைமைகளது இழப்புக்கள் இயக்க மொழியில் 'துரோகிகள்' என்ற திரை போட்டு எமக்கு நியாயம் கற்பித்தது ;சரியாகத்தான் இருந்தது பயிற்சி முடிவில். 'இரவைக்கு அம்மான் வாரவராம். பாசவுட் முடிஞ்சதோட இவங்கள கல்குடா ஆமி கேம்ப அட்டக்பண்ண அனுப்புரதுன்டு சொன்னவர். இந்த பெட்சுக்கு நேரடியா களச்சமர்தான்' டிக்ஷன் கூறிக்கொண்டு முகாமின் வரவேற்பறையில் நுழைகின்றான். 'புதுப்பொடியனுகள், என்ன பன்னுவாங்கள்ன்டு தெரிய இல்ல. அம்மான்ட குரூப் நிக்கிரதால கொஞ்சம் நிண்டு பிடிப்பானுகள்' தேனீரை உள்ளே உறிஞ்சி இழுத்துக்கொண்டு ஜெயம் டிக்ஷனை நோக்குகிறான்.
மனதுக்குள் ஒரே குதூகலம். மூன்று மாதமும் பயிற்சி பயிற்சி என பட்ட அடி உதைகளுக்கு இன்று இரவோடு விடுதலை கிடைக்கப்போகின்றது. பயிற்சியின் போது ஒரு ரவை மேலதிகமாக துப்பாக்கியிலிருந்து சென்றாலும் 'உங்கப்பனா ரவுன்ட்ஸ் தார' என 'ட்ரெய்னிங் மாஸ்டர்' ஒப்பாரி வைத்து நடு வெயிலில் மஸ்கட் வெட்டவென இழுத்துச்செல்வது. 'அப்பாடா.. சண்டையில எல்லா வெப்பனையும் சுட வாய்ப்பு கிடைக்கும்' மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள்.
'அல்பா டூ ஓவர்.. அல்பா டூ ஓவர்..' 'வோக்கி டோக்கியில்' மறுமுனைப் பதிலுக்காக காத்திருக்கின்றேன். 'அல்பா டூ ஓவர்.. என்ன பிரச்சின' மறுமுனையில் கரகரத்த குரல். 'குளிச வேனும்' ரவைகள் முடிந்து விட்டதை சங்கேத மொழியில் குறிப்பிடுகின்றேன். 'இருக்கிறத வச்சி சமாளிங்க. கட கடப்பான் வந்து மழை பெய்யிரான். சப்போடிங் டீம் மூ பண்ண முடியல. கொஞ்சம் சமாளிங்க' பேசிலிருந்து தகவல்; நிலைமை மோசமாக இருக்கின்றது என்பதைக் குறிப்பிட்டது. வானில் வட்டமிடும் எம்.ஐ. 24 ஹெலிகப்டர் கலிபர்90 மூலம் சரமாரியாக குண்டு மழை பொழிவது அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பயிற்சியின் போது இருந்த போராட்டம் குறித்த ஆர்வம் கள நிலையில் குறைந்து கொண்ட அச்ச உணர்வு இழையோடுவது உணரக்கூடியதாக உள்ளது. முதல் களச்சமர் அனுபவம். நான் தொடர்பாடலுக்குப் பொறுப்பானவன் என்ற வகையில் எனக்கென பிரத்தியேக ஒருவன் பாதுகாப்புக்காக. இயக்கம் ஊருக்குள்ள வரத்தொடங்கிய காலத்தில் 'பிலிப்ஸ் ரேடியோவின்' இரைச்சலுடன் கலந்து வரும் ஒரு அரபு அலைவரிசையைப் பிடித்துக்கொண்டு இரவினில் கொள்ளையடிக்கச் சென்று 'அந்தா நிக்கிரம், இந்தா நிக்கிரம்' என்று கதை விட்டு ஊர்ச் சனங்களைப் பயம் காட்டி கொள்ளையடித்து பிடிபட்ட தாஹிர் காக்காவின் ஞாபகங்கள் அடிக்கடி இந்த வோக்கி டோக்கியை கண்டவுடன் வருவதுண்டு.
'டும்' என்ற பாரிய சத்தம். புகை மண்டலம் கண்ணை மறைக்கின்றது. காதுகளுக்குள் வண்டு உறுமிக்கொள்ளும் இரைச்சல். காது வெடித்து விட்டதோ எனத் தடவிக்கொள்ளும் கை விரல்கள் மண் கலந்த பிசு பிசுப்பு. 'உம்மா.. உம்மா' என அருகில் இருந்து பரீச்சயமான அழுகுரல். அது யாசீனாகத்தான் இருக்க வேண்டும். ஜே.வீ.பீயினரின் வகுப்புக்களில் கலந்து கொண்டதினால் அடக்கப்பட்ட சமூகத்திற்காகப் போராட முற்பட்டதாக அவன் அடிக்கடி கூறிக்கொள்ளும் சக போராளி. இந்த சில மாதங்களில் என் உறவு என்று சொல்லிக்கொள்ள அவன் மட்டும்தான். என்னை விட சில வயதுகள் மூத்தவன் என்ற போதும் இயக்க வரலாறு நிறையப் படித்தவன். முஸ்லிம்களுக்காகவும் சேர்த்தே எமது போராட்டம் எனக்கூறிக்கொண்டு முஸ்லிம் நாடுகளில் தமிழ் இயக்கங்கள் பயிற்சி பெற்ற வரலாறு அவன் கூறித்தெரிந்தவைதான். புகை நாசைக்கரித்துக்கொண்டு மெது மெதுவாக விலகுகிறது. எமது தற்காலிக பதுங்கு குழியின் மண் மூட்டைகள் சிதறிக்கிடக்கின்ரது. யாசீன் இரத்த வெள்ளத்தில் முண முணுத்துக்கொண்டு இருக்கின்றான். அவனது ஆன்மா மூச்சையாகும் நிமிடங்கள் முதன் முறையாக என் வீட்டினையும் உறவுகளையும் கண் முன் கொண்டு வருகின்றது. ஒரு குரூர மரணத்தை கண் முன் காணும் வக்கிர அனுபவம்.
'கிபீர்' விமானத்திலிருந்து வீசப்பட்ட குண்டு எமது பதுங்கு குழியைப் பதம் பார்த்து இருக்கின்றது என்பதனை ஊகிக்க முடிந்தது. எனது உடலில் காயங்களைத் தடவித்தேடிக்கொள்ளும் விரல்கள். 'வீட்ட ஓடத்தான் வேண்டும். இது சரிப்பட்டு வராது' மனசு பதைத்துக்கொள்கிறது.
பத்து அடி சதுரப்ரப்பு அறை. சுவரிலும், தரையிலும் கோலம் போட்டுள்ள இரத்தக் கோடுகள். சிறுநீர் வாசத்துடன் குருதி வாசம் இது ஒரு வதை முகாம் என்பதற்கு அறிகுறி கூறியது. பக்கத்து அறையிலிருந்து வரும் மனித ஓலங்கள் நெஞ்சில் கலி கொள்ள வைக்கிறது. 'க்ரீச்' என்று அறைக்கதவு திறக்கின்றது. பரட்டை முடி, கட்டையான் மீசை, கத்தியால் கறிவிட்டது போன்று முகத்தில் பெரிய தழும்பு. அண்ணாhந்து பார்க்கச்சொல்லும் உயரம். 'எல்லாத்தயும் சொன்னா பிரச்சண இல்ல. இலாட்டி நமக்குத்தெரியும் எப்படி எடுக்கிறன்டு' அவனது கொச்சையான தமிழ் ஒரு சிங்கள சிப்பாய் என்பதை உணர்த்தியது. அவனது முடிக்கும் முகத்துக்கும் அவ்வளவு நிற வித்தியாசம் இல்லை. மரண வெறி அவன் கண்களில் தெளிவாகத் தெரிகின்றது. அவனது கையில் இருந்த 'பைநட்' கத்தி அவனைக் கசாப்புக்கடைக்காரன் போல் காணச்செய்தது. சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுந்த கதையாகி விட்ட எனது நிலை.
1990களில் இலங்கைப்படையுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட யுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்த சண்டைகள் பாரிய நிலைமையை முடுக்கி விட்டிருந்தது. இராணுவ முகாம்கள் அவ்வப்போது புலிகளால் சுற்றிவளைத்துத் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. புலிகளிடம் சரணடைந்த பொலிஸார் கொல்லப்பட்டதும், எரியூட்டப்பட்டதும் நடந்தேறிய அம்சங்கள். 'வெலிக்கடைச் சிறையில குட்டிமணி அண்ணன் ஆக்கள இப்பிடித்தான் கொண்டவனுகள்' என்று கூறிக்கொண்டு டிக்ஷன் அண்ணன் கல்குடா பொலிஸில் சரணடைந்தவர்களை வீடொன்றுக்குள் பூட்டி வைத்து சுட்டெரித்ததும் அதனைப்பார்த்திருந்து இரண்டு நாள் சாப்பிட முடியாமல் நொந்து கொண்டதும் நினைவுகளில்.
'எல்லாரும் லைன் ஆகுங்க. அம்மான் வரப்போரார்' 'பெய்ரூட்' தள பொறுப்பாளர் ரெஜி உரத்துச்சத்தமிடுகிறான். 'கொமாண்டோ ரெய்னிங்' என்று கூறி இங்கு வந்து ஒருவாரம் முடியவில்லை. இருநூறு பேருக்கும் மேற்பட்ட போராளிகள் அணிவகுத்து நிற்கின்றனர். கட்டையான உருவம், சாதாரண மீசை, 'கௌ போய்' தொப்பி, இடுப்பில் 9எம்.எம் துப்பாக்கி இரண்டாவது முறையாக அம்மானைச் சந்திக்கின்றேன். பயிற்சி முடிவில் சயனைட் குப்பிகளைக் கழுத்தில் செருகி விட்டுத் தட்டிக்கொடுத்த முதல் சந்திப்பு. 'எல்லாரும் கவனமா கேளுங்க. காத்தன்குடில சிங்கள ராணுவம் முஸ்லிம் ஆக்கள பள்ளிக்குள்ள வச்சி சுட்டு கொன்டு போட்டு இயக்கத்திட தலையில போட்டிருக்கினம். அதால் இங்க இருக்கிற முஸ்லிம் பெடியன்கள் உங்கட வீடுகளுக்கு போய் இயக்கத்துக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லன்டு சொல்லவேனும். முஸ்லிம் பெடியன்கள் இந்தப்பக்கம் வந்து நில்லுங்க'. அம்மான் சுருக்கமாகப் பேசி முடிக்கிறார். 'ஊருக்குள்ள என்னவோ நடக்குது நாம ஒன்னும் தெரியாம காட்டுக்குள்ள கிடக்கம்' மீண்டும் வீடு, உறவுகள் பற்றிய அச்சம் தொற்றிக்கொள்கிறது. பதினைந்து பேரளவில் அணிவகுப்பை விட்டுப் பிரி;ந்து நிற்கின்றனர். எனது உள்மனம் ஏதோ குழப்பத்தில் இருக்கின்றது. பயிற்சியில் கற்பித்த போராட்ட ஒழுங்கு விதிகளுக்கப்பால் இயக்கம் நடந்து கொள்வது எனக்கு இயக்கம் பற்றிய சில கேள்விகளை இப்போதெல்லாம் தூண்டியிருந்தது. கல்குடாவில் சரணடைந்த பொலிஸார் கொல்லப்பட்ட போது இன்னும் சந்தேகங்கள் வலுவடைந்துதான் உள்ளது. கால்கள் அணியை விட்டுப் பிரிய மறுக்கின்றது. நடப்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்ற உள் மன தீர்மானம். எனது இயக்கப் பெயர் ஆங்கிலப் பட நடிகனின் பெயர் என்பதனால் இலகுவில் என்னை எவரும் அடையாளம் கண்டு கொள்ளமுடியாமல் போனது வாஸ்த்தவம்தான். பிரிந்து நின்ற முஸ்லிம் போராளிகளின் துப்பாக்கிகள் ரெஜியினால் வாங்கி எடுக்கப்படுகின்றது. கைகள் கட்டப்பட்டு முகாமின் ஒரு பகுதிக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர்.
கும்மிருட்டு படர்ந்து கிடக்கின்றது. கானகத்தின் மயான அமைதிக்குள் சில் வண்டுகளின் ரீங்காரம். தூரத்தில் ஓநாய்களின் ஊளை. நேரம் எப்படியும் நடு நிசியைத் தாண்டி இருக்க வேண்டும். எப்படியும் இன்று தப்பித்தே ஆகவேண்டும் என்ற அங்கலாய்ப்பு. எனது காவலரணில் என்னோடு சேர்த்து காவலுக்கு இருந்தவன் துப்பாகியை மண் மூட்டையில் சய்த்துவைத்து காலாற தூங்குகிறான். பகலில் விஷேட பயிற்சியின் உக்கிரம் உடலின் தாங்க முடியாத அசதியினால் தூங்குகிறான். அரவமின்றி அவனது துப்பாகியையும் என்னோடு எடுத்துக்கொள்கிறேன். துனியாகத் தப்பித்துச்செல்வது உசிதமாக எனக்கு தோணவில்லை. கைகட்டப்பட்ட தோழர்களின் ஞாபகம் வருகின்றது. அவர்களையும் எடுத்துக்கொண்டு தப்பித்தே ஆகவேண்டும். கற்றுக்கொண்ட தவளைப்பாய்ச்சல் பயன்படுவதாக இருக்கின்றது. இந்த பரந்த முகாமில் விளக்குகள் அணைக்கப்பட்டதனால் எங்கும் கும்மிருட்டு. தவறியும் எவர்து கண்களில் தென்பட்டால் நானும் செல்லுக்குள் அடைபட்டுகச் சாக வேண்டியதுதான். ஒருவாறு தூரத்திலிருக்கும் கொட்டிலின் வெளியில் துப்பாக்கியை அணைத்துக்கொண்டு தூங்கிவழியும் ஒருவன். மெதுவாக உள்ளே சென்றாகிவிட்டது. கைகளும் கால்களும் கட்டுப்போட்ட நிலையில் ஒருவன் படுத்துக்கிடக்கிறான். மெதுவாகத் தட்டி எழுப்புகின்றென். எனது சைகைகளை விளங்கி கொண்டவன் போல் எனக்குச் ;சாதகமாகச் செயற்படுகின்றான். கட்டுக்களிலிருந்து விடுதலையாகிவிட்டவனுடன் மெதுவாக அரவமின்றி வெளியேறுகின்றேன். முகாமிலிருந்து எத்திசையில் நகர்வது என்ற கேள்விகளுக்கப்பால் கிழக்குப்பக்கமாக நடக்க ஆரம்பிக்கின்றோம். ஒரு மணி நேரம் பாறைகளும் மேடு பள்ளங்களும், தாண்டி வயற்பரப்பை வந்தாகிவிட்டது. 'உங்கட பேரென்ன' இதுவரை இருவருக்குமிடையில் இருந்த மரண பயத்தையும் அமைதியையும் விளக்கி கொண்டு அவனிடம் வினவுகின்றேன். 'என்ட பேர் மன்சூர். ஏறாவூர். ரெயினிங் முடிஞ்சி ஒரு மாசம்தான். மாஸ்ட்டர்ர குரூப்ல இருந்த. கொமான்ட ரெயினிங்குக்கு வந்த. இப்ப முஸ்லிம் பிள்ளைகளையும் சுடச்சொல்லி இயக்கதில கட்டளையாம்.அதான் நேத்து எங்கள கட்டிப்போட்டவனுகள்'. எனது கேள்விகளுக்கு இடமின்றியே கூறிமுடிக்கின்றான். 'ஆமிக்காரன் முஸ்லிம் ஆக்கள சுட்டன்டா ஏன் இவனுகள் ஈழத்துக்காக போராட வந்த நம்மளயும் கொல்லனும். இவனுகள்ர இயக்கமும் கொள்கையும்' எனது ஆதங்கத்தின் யதார்த்தம் புரிந்தவன் போல் அவன் ஆமென தலையசைக்கிறான். 'துவக்கோட ஊர்க்குள்ள போனா ஆமி சுடுவான். சில வேள நம்மள பிடிக்கச்சொல்லி பேஸ்ல இருந்து தகவல் போயிருக்கும். எதுக்கும் நாம இந்த துவக்குகள அந்த ஓடையில தூக்கி எறிவம்' எனது கருத்துக்குக் காத்திருந்தவன் போல் எனக்கு முன்னரே தூக்கி எறிகின்றான். ஆயுத மோகம் இவ்வளவு விரைவில் விட்டுப்போகும் என்பது பட்ட பின்பே புரிய ஆரம்பிக்கிறது. 'நாம நேரா எங்கட ஊருக்கு போவம். அங்க போய் ஆமிகிட்ட சரணடையிரத தவிர வழி இல்ல' எனது முடிவுகளுக்கு அவன் எந்த மறுப்பும் சொல்வதாக இல்லை. பல மணி நேர நடைப் பயணத்தின் பின் ஊர்ப் பெரியவர்கள் மூலம் பிரிகேடியர் ஷஹீட் முன்னிலையில் சரணாகதி அடைகின்றோம். 'முனாஸ் குரூப் வரும் உங்கள விசாரிக்க உண்மையெல்லாம் செல்லிடுங்க' குறுக்கறுத்து ஒருவன் சொல்லிச்செல்கின்றான். அவன் ஒரு ஊர்காவல் படைவீரன் என்பதை அவனது சீருடை சுட்டிக்காட்டியது. முஸ்லிம்களை கூட்டுச்சேர்த்துக்கொண்டுதான் எந்தப் போராட்டமும் முன்னெடுக்கப்படுகிறது என்பது நிலைமைகளை வைத்து அனுமானிக்க முடிகிறது. 'ஐ பரகொட்டியோ.. கியபங்.. சொல்லு எங்க துவக்கு வச்சிருக்கிறது. சொல்லு..' சிந்தனைச்சிதறலிலிருந்து மீளுகின்றேன். எதனையும் அவன் செய்வான் என்பது போல் அவனது கண்கள். சிங்கக் கூட்டில் எலியாக எமது நிலை. புpரபாகரனைப் பிடித்து விட்டதாக அவனது வீறாப்பு. 'நாங்க ஸ்கூலுக்கு போககுள்ள புடிச்சிட்டு போன சேர். நாங்க தப்பித்தான் வந்த'. நாங்கள் ஏற்கனவே பேசி வைத்ததனை அப்படியே திரும்பத் திரும்ப சொல்கின்றொம். ஒரு பெரிய வரைபடத்தை விரிக்கிறான். எமக்குத்தெரிந்த தெரியாத இடங்களைக் கேட்டு கேள்விகளால் துழைத்தெடுக்கிறான்.
ஒரு மாத முகமூடி வாழ்க்கையாக இராணுவ முகமுக்குள் காலம் கழிகின்றது. உறவினரின் முயற்சியுடன் எனது நடவடிக்கைகள் என்னைப் படிப்பிற்காக விடுதலை செய்ய பிரிசேடியர் ஷஹீட் இணக்கம் தெரிவிக்கின்றார். 'நல்லா படிக்கோனும் என. இந்தா இந்த பேனைய வச்சிக்கோ'. இன்று அவர் நினைவுகள் மட்டும் இருக்கின்றது. அந்த பேனாவைத்தான் தொலைத்துவிட்டேன்.
'டேய் பேப்பர் பாத்த போதும் எனக்கும் கொஞ்சம் தாடா. என்ன நாட்டு நடப்புன்டு பாப்பம்'. ஓசிப்பேப்பர் படிக்கும் பாறூக். 'கொஞ்சம் இருடா நல்ல சிறுகத ஒன்டு. தலைப்ப பாத்திட்டு தாரன்' ஜெயினின் கண்கள் தலைப்பை மேய்கின்றது. 'என்ன கதடா. நம்மலும் ஆமில இருந்து நாட்டுக்காக யுத்தத்துக்கு போய் சம்பலம் போதாம வெளிநாடு வந்து.. ஊருக்கு போனா அப்சன்டு ஆமி புடிக்க.. இதெல்லாம் யாருடா எழுதுர??..' பாரூக்கின் ஆதங்கம். 'துரோகின்டு கத. நல்லா இருக்கிடா.. வாசிச்சிப்பாரு..' ஜெயின் கூறிக்கொண்டே முன்பக்கத்தை புரட்டுகின்றான். 'இலங்கை இராணுவத்தின் விஷேட படையணியை உருவாக்கிய கேனல் லாபிரின் 21வது சிரார்த்த தினம்' கட்டமிடப்பட்ட செய்தி ஒரு மூலையில். மறு புறம் தடித்த எழுத்துக்களில் 'முஸ்லிம்களின் துரோகத்தனமே வடக்கு வெளியேற்றத்துக்குக் காரணம்;. புலிகளின் குரல் பத்திரிகை செய்தி உண்மையானதேயென பொதுபல சேனா தெரிவிப்பு'. யார் தியாகிகள் யார் துரோகிகள் என்பது சரியாகப்புரியப்படாத சொல்லாகிவிட்டது. ஜெயின் பத்திரிகையை பாரூக்கிடம் நீட்டுகின்றான். புல்டோசர் மீண்டும் இயங்க ஆரம்பிக்கின்றது.
Post a Comment