ஜப்பானில் திருமணங்களை நடத்தி வைக்கும் 'ரோபோ'
திருமணங்களில், "ரோபோ'க்களை பயன்படுத்தும் புதிய முறை, ஜப்பானில் அதிகரித்து வருகிறது. இரண்டு அடி முதல், நான்கு அடி உயரம் வரை உள்ள இந்த ரோபோக்கள், மணமகன் தோழனாகவும், புரோகிதராகவும் செயல்பட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் செயல்படுகிறது.
ரோபோக்களை வடிவமைப்பதில் ஜப்பானியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறிய ரக கார்களை ஓட்டும் மினி ரோபோக்கள், மனிதனின் கட்டளைகளுக்கு ஏற்ப சிறு சிறு பணிகளை செய்து முடிக்கும் வகையிலான ரோபோக்கள் போன்றவற்றை வடிவமைத்து, ஜப்பானியர்கள், உலகின் பார்வையை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர். இந்நிலையில், திருமணங்களில், மணமக்களின் நண்பனாகவும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியாளராகவும் செயல்படும், அதிநவீன ரோபோக்களை, ஜப்பானிய நிபுணர் வடிவமைத்துள்ளார். ஜப்பானை சேர்ந்த இளம் ஜோடிகள் பலரும் தங்கள் திருமணத்தில் இந்த அதிநவீன ரோபோக்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஜப்பானை சேர்ந்த நிபுணர், ஜான் ஷிமிங், பல்வேறு சாகசங்களை செய்யும் அதிநவீன ரோபோவை, கடந்த ஆண்டு வடிவமைத்து வெளியிட்டார். ரோபோக்களின் செயல்பாடுகளில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த பலரும், ரோபோக்களை விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். அதிக அளவில், "ஆர்டர்' குவிந்துள்ளதால், பல்வேறு ரோபோக்களை வடிவமைக்கும் பணியில், ஜான் மூழ்கியுள்ளார்.
இதுகுறித்து ஜான் ஷிமிங் கூறியதாவது: சிறு வயது முதலே, ரோபோக்கள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். அனைத்து வீடுகளிலும் ரோபோக்களின் பயன்பாடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வீட்டு வேலைகளை செய்யும் ரோபோவை வடிவமைத்தேன். அதற்கு, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அந்த ரோபோவை, என் நண்பன், அவனின் உறவினர்களின் திருமண நிகழ்ச்சிகளில் அறிமுகப்படுத்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினான். திருமணங்களில் பயன்படும் வகையிலான ரோபோவாக அதை மாற்றி அமைக்கும் புதிய திட்டம் தீட்டினேன். இதன் மூலம் தற்போதுள்ள, இந்த புதிய ரோபோ தயாரானது. இது திருமணங்களில், மணமகனின் தோழன் அல்லது மணமகளின் தோழியாக செயல்படும் திறன் படைத்தது. திருமணச் சடங்குகளை நடத்தி வைக்கும் புரோகிதராகவும் பயன்படுத்தலாம். அனைவரையும் மகிழச்சி அடையச் செய்யும் இந்த ரோபோவுக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. விரைவில், பெரும்பாலான திருமணங்களில் இந்த ரோபோ பயன்படுத்தப்படும் சூழல் உருவாகும். இவ்வாறு, அவர் கூறினார்.
Post a Comment