Header Ads



சாய்ந்தமருது தோணாவை உடனடியாக துப்பரவு செய்ய அவசர நடவடிக்கை

(பி.எம்.எம்.ஏ.காதர்)

கடந்த சில வாரங்களாக கடுமையாக துர்நாற்றம் வீசி வருகின்ற சாய்ந்தமருது தோணாவை உடனடியாக துப்பரவு செய்து நீரோட்டத்தை சீர்படுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காரைதீவில் தொடங்கி சாய்ந்தமருது பிரதேசத்தை ஊடறுத்து செல்லும் இந்த தோணா கடந்த சில வாரங்களாக கடுமையாக துர்நாற்றம் வீசி வருகின்றது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடும் நிலவுகின்றது. தொற்று நோய்கள் பரவும் அபாயமும் காணப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் மு.கா. குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களின் கவனத்திற்கும் இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணும் பொருட்டு அவரது அவசர ஏற்பாட்டில் 07-11-2013 மாலை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் உயர்மட்டக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இக்கூடத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சஹீலா இஸ்ஸதீன், கல்முனை மாநகர சபை ஆணையாளர் லியாகத் அலி, பொறியியலாளர் ஏ.எச்.எம்.ஜௌசி, மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.எம்.ஜெசூர், நீர்ப்பாசனத் திணைக்கள தொழில் நுட்ப உத்திரோகத்தர் எம்.நௌசாட் உட்பட மற்றும் சில அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது இப்பிரச்சினை குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் இதனை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் சம்பந்தபட்ட தரப்புகள் அனைத்தும் கூட்டிணைந்து நாளை தொடக்கம் இதனை துப்பரவு செய்து- நீரோட்டத்தை சீர்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.