நாடு இறக்கும் முன்னர், நாங்கள் மரணிக்க தயாராக இருக்கின்றோம் - ஓமல்பே சோபித தேரர்
உண்மையான பௌத்த புத்திரர்களின் உயிர் மூச்சு இருக்கும் வரை இலங்கைக்குள் அரசாங்கம் அல்ல எவரும் பௌத்த விரோத செயற்பாடுகளில் ஈடுபட இடமளிக்க போவதில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். கசினோ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வரிப் பணத்தை தரகு பணமாக பெறும் நோக்கத்திலேயே ஜேம்ஸ் பாக்கருக்கு வரி சலுகையின் அடிப்படையில் கசினோ தொழிலை ஆரம்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. வரிகளை அறவிடாது ஜேம்ஸ் பாக்கருக்கு சிறப்புரிமைகளை வழங்குவதில் அரசாங்கத்திற்கு ஒரு நோக்கம் இருக்கின்றது.
அரசாங்கம் பணம் இல்லாத கடனில் தனது பணிகளை முன்னெடுத்து செல்கிறது என்றால், வரிகளை அறவிட வேண்டும். இந்த அரசாங்கம் பாரிளவில் பெறுமதியான பொருட்களை ஏற்றிய லொரியை போன்றது. பள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்த லொறிக்கு கொடுக்கப்பட்டுள்ள ஜாதிக ஹெல உறுமய என்ற சிறிய தடை கட்டையை நீக்கினால் லொறி கட்டாயமாக பள்ளத்தில் விழுந்து விடும்.
ஜாதிக ஹெல உறுமய என்பது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சி மாத்திரமல்ல தேசிய சக்திகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பு. மகிந்த சிந்தனை வழியாக எதிர்பார்த்தவற்றை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமானால் இந்த சிறிய தடை கட்டை இருக்க வேண்டும். எனினும் பிரச்சினைகள் ஏற்படும் பொழுது நாங்கள் எங்கள் நிலைப்பாடுகளை முன்வைப்போம்.
விபச்சாரத்தை சட்டமாக்கும் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டால் அதனை நாங்கள் எதிர்ப்போம். கசினோ, விபச்சாரம், போதைப் பொருள், ஆபாச திரைப்படங்கள் மற்றும் கசிப்பு ஆகியன ஊடாகவே தீமையான பஞ்ச மகா சக்திகளின் தலைமை நிலையம் உருவாகும். இவற்றை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சித்தால், நாடு இறக்கும் முன்னர் நாங்கள் மரணிக்க தயாராக இருக்கின்றோம் என்றார்.
Post a Comment