Header Ads



கல்முனையும், கத்தனாவும்..!

(ஏ.எல்.ஜுனைதீன்)

முஸ்லிம் ஆண் குழந்தைகளுக்கு கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சன்மார்க்க கடமைகளில் ஒன்று அவர்களுக்கு ( கத்னா ) விருத்தசேதனம் செய்வதாகும். இது சுன்னத்தான விடயமும் கூட.

 தற்காலத்தில் ஆண் குழந்தைகள் பிறந்து சில தினங்களிலேயே எதுவித சடங்குகளுமின்றி ஆங்கில வைத்தியர்களினால் கத்னா செய்யப்படுகின்றது.

அம்பாறை மாவட்டக் முஸ்லிம் பிரதேசங்களில் குறிப்பாக கல்முனைப் பிரதேசத்தில் சுமார் 50 வருடங்களுக்கு முன் இக் கத்னா நிகழ்வுகள் எவ்வாறு நடைபெற்றிருக்கிறது என்பதை எமது இன்றைய இளைஞர்கள் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு தருகின்றோம்.

கத்னா வைபவம் அன்று இப் பிரதேசத்தில் திருமண வைபவங்கள் போன்று வெகு விமர்சையான வைபவமாக நடத்தப்பட்டுள்ளது. இச் சடங்கை நிறைவேற்றுவதற்கான பிள்ளைகளின் வயதெல்லை 7, 9, 11 ஆக இருந்தன.

இந்நிகழ்வு நடைபெறும் வீட்டிற்கு மை பூசுதல், புதிய கிடுகுகளைக் கொண்டு அழகாக வேலி கட்டுதல், வீட்டிலுள்ள பாத்திரங்கள் அனைத்தையும் மினுக்கி சுத்தமாக்குதல் என்பன போன்ற நடவடிக்கைகளைச் செய்து வீட்டையும் வீட்டைச் சூழவுள்ள இடங்களையும் அலங்காரம் செய்து வைப்பார்கள்.

வீட்டில் விருத்தசேதனம் செய்யப்போகும் ஆண் பிள்ளைக்கு புத்தாடை வாங்குதல், சுத்தமான வெள்ளியினால் செய்யப்பட்ட காறை, கரண்டைக் காலில் பூட்டுத்தண்டைகள், வெள்ளி அரைஞான்கொடி, என்பன போன்றவற்றை செய்து தயார்படுத்துவார்கள்.

கத்னா வைபவம் நிகழ்வதற்கு முன்னுள்ள தினங்களில் சில தினங்களை ஒதுக்கி வைத்து அந்நாளில் திருமணத்திற்கு அழைப்பது போன்று விருத்தசேதனம் செய்யவிருக்கும் ஆண் பிள்ளையின் தாயும் தகப்பனும் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் ஆகியோர்களின் வீடுகளுக்குச் சென்று மகனின் சுன்னத்திற்காக அழைப்பர்.

விருத்தசேதனம் நடைபெறும் தினத்தன்று பகலில் அல்லது முதல் நாள் இரவில் மாடுகள் அல்லது ஆடுகள் அறுத்து போசனமும் வழங்கப்படும்.

உறவினர்கள் மாமி, மச்சி முறையான பெண்கள் வெகுமதிகள் முட்டை, அரிசி போன்ற பொருட்களையும் கொண்டு செல்வார்கள். கத்னா செய்யும் தினத்தன்று பறை அடிக்கும் வழக்கமும் அக்காலத்தில் இருந்தது.

விருத்தசேதனம் செய்யும் குறிப்பிட்ட தினத்தில் கத்னா செய்யப்படவிருக்கும் ஆண் பிள்ளை பட்டுச் சாறன், தொப்பி, கண்ணுக்கு கறுப்புக் கண்ணாடி அணிவிக்கப்பட்டு வர்ண அலங்கார கை விசிறியுடன் மாப்பிள்ளை அலங்காரமாகச் சோடிக்கப்பட்டு எல்லோர் பார்வைக்கும் வைக்கப்படுவார்.

அந்தவேளை கத்னா மாப்பிள்ளைக்கு விரும்பிய பலரும் வெகுமதிகள் செய்வர். இவ்விழா மாலையாகும் வரை நடைபெறும். மாலையானதும் கத்னா செய்வதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும். இங்கு குடும்பத்தவர்கள் அனைவரும் ஒன்று கூடியிருப்பார்கள்.

கத்னா செய்யும் ஒஸ்தா மாமா என்பவர் தமது உதவியாளருடன் சமூகம் தருவார். கத்னா செய்யும் நேரத்தில் பிள்ளையை ஆடாமல் அசையாமல் வைத்துப்பிடிக்கக் கூடிய ஒரு பலசாலியும் அழைக்கப்பட்டிருப்பார். கத்னாவுக்கு தேவையான உபகரணங்களாக உரல், சாம்பல் தட்டு, கொட்டப்பாக்கு, வெள்ளைச் சீலை, நூல் என்பன தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.

கத்னா செய்யும் போது பிள்ளையின் அழுகைச் சப்தம் வெளியாகாமல் இருப்பதற்கு பெண்களின் குரவை, வெடி, பறை என்பன கிடுகிடுப்பாக ஓசை எழுப்பப்படும். கத்னா முடிந்த பின்னர்தான இந்த ஓசைகள் நிறுத்தப்படும். ஏதோ ஒரு சாதனையை நிலைநாட்டிய மனப்பாங்கு அங்கு கூடியிருந்த எல்லோர் மனதிலும் ஏற்படும்.

கத்னா செய்த மாப்பிள்ளைக்கோ பெரும் சோதனையும், வேதனையும் இரவு முழுவதும் கண் மூடாக் காவல். அவருக்கு உப்பில்லாத உணவு, கட்டுப்பாடான நீர் ஆகாரம் வழங்கப்படும். போசாக்கின்மையை ஈடு செய்வதற்கு முட்டை, பிட்டு, நல்லெண்ணெய் சேர்ந்த உணவுகள் கொடுக்கப்படும்.

அக்காலத்தில் நவீன மருந்துகள் பாவனையில் இல்லாததால் சுரட்டைக்கரி, வேப்பிலைத்தூள், கடைச் சரக்குகளின் சேர்வை என்பன போன்றவை மருந்தாகப் பாவிக்கப்பட்டதால் சுகமாக நீண்ட காலம் எடுக்கும்.

கத்னா முடிந்து சிரங்கு காயும் வரை ஒஸ்தா மாமா பல தடவைகள் சென்று காயத்திற்கு மருந்து போடுவார். கடைசியாக காயத்திலிருந்து சீலை கழற்றுதல் மிக வேதனையாக உணரப்பட்டது. இதன் பின்னர் கத்னா மாப்பிள்ளைக்கு தண்ணீர் வார்த்து வாகனம் ஒன்றில் ஊரைச் சுற்றி வலம் வருவர்.

தற்காலத்தில் இச் சடங்குகள் மறைந்து விட்டன. குழந்தை பிறந்து சில தினங்களிலேயே எந்த விதமான சடங்குகளுமின்றி கத்னா செய்யப்படுகின்றது.

3 comments:

  1. மக்களின் மார்க்க அறிவு மற்றும் பொது அறிவு வளர்ச்சியடையும் பொழுது மடத்தனங்களும், மூடப் பழக்க வழக்கங்களும், இஸ்லாத்துடன் தொடர்பற்ற அனாச்சாரங்களும் மறைந்து வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

    இந்த அனாச்சரங்களில் இருந்து தப்பித்தவர்கள் அல்லாஹ்வுக்கு அதிகம் நன்றி சொல்ல வேண்டும். நாலு பேருக்குத் தெரிய வேண்டிய விடயத்தை, நாடு முழுக்க பறையடித்த மடத்தனத்தை ஒழிக்க பாடுபட்ட தலைவர்கள், உலமாக்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.

    ReplyDelete
  2. மெய்சிலுர்கும் ஒரு அனுபவம் இது. சீலை களதும் போது ஒஸ்தா மாமாவுக்கு எட்டி காலால் ஊதைதது இன்றுபோல் எனக்கு ஜாபஹம்

    ReplyDelete
  3. இது நபி அவர்களின் சுன்னாவா

    ReplyDelete

Powered by Blogger.