Header Ads



வெள்ளிக்கிழமை வசூலில் மஞ்சள் குளிக்கும் ஜமாஅத் தலைவர்கள்

(வைகை அனிஷ்)

"தீண்டாமை என்பது இல்லை. அரசன் முதல் ஆண்டிவரை இறைவன் முன் அனைவரும் சமம்" என்பதே இஸ்லாத்தின் கோட்பாடு.

ஆனால் தமிழகத்திலுள்ள முஸ்லிம் சமூகத்தில் இன்னமும் பிற சமூகங்களிலுள்ளதுபோன்று தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதே போன்று இஸ்லாத்தில் பிரிவுகளும் இல்லை. ஒரே இறைவன். உருவ வழிபாடு கூடாது போன்ற பல நெறிமுறைகளை உலகிற்கு அடையாளப்படுத்தியது இஸ்லாமிய மதம் தான். ஆனால் தமிழகத்தில் முஸ்லிம்களிடத்தில் யாராலோ விதைக்கப்பட்டு சாதிகளின் உட்பிரிவுகளாக முஸ்லிம்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருவது தொடர்கிறது.

தமிழ் முஸ்லிம், உருது முஸ்லிம் என்ற பாகுபாடும் ராவுத்தர், லெப்பை, மரைக்காயர், தக்கினி என உட்பிரிவுகளும் அவர்கள் செய்த தொழிலை அடிப்படையாக வைத்து பிரிக்கப்பட்டு முஸ்லிம் சமூகத்துள்ளும் சாதி அமைப்பாக செயல்பட்டு வருகிறது. 

தமிழகத்தின் குக்கிராமங்களிலும் ஜமாஅத் என்ற அமைப்பு முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பெரும்பாலான ஊர்களில் உள்ளது. மனிதன் ஜனனம் முதல் மரணம் வரை ஜமாஅத் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. ஜமாஅத்தை பகைத்துக் கொண்டால் ஊர் விலக்கம், இறந்தால் பிணம் புதைக்ககூடாது. அவர்கள் வீட்டில் நல்லது, கெட்டதுக்கு யாரும் வரமாட்டார்கள் என்ற அளவிற்கு இன்னும் நாட்டாமை படத்தில் உள்ளது போன்று நாட்டாண்மை செய்து கொண்டு இருக்கிறார்கள். 

நாட்டாமை படத்தில் வரும் நாட்டாமை ஒரு செம்பை வைத்து வாயில் வெற்றிலை மென்று கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பார். அவருடைய அல்லக்கைகள் குற்றத்தைப் பற்றி எடுத்துரைப்பார்கள். இறுதியில் நாட்டாமை கழுதையைக் குதிரை என்பார். குதிரையைக் கழுதை என தீர்ப்பு கூறுவார். அவர் தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும். ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஊர் தள்ளிவைப்பது உள்பட பல மனித உரிமை மீறல்கள் அமல்படுத்தப்படும். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படும். சினிமாவில் காட்டப்பட்டது போன்று நடைமுறையிலும் இன்றும் தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் இந்தக் கட்டப்பஞ்சாயத்துமுறை நடைபெறுகிறது.  

ஜமாஅத்:

பள்ளிவாசலை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜமாஅத் அமைப்பு, ஆரம்ப காலம் முதல் செயல்பட்டு வரும் ஒரு சக்தி மிக்க அமைப்பாகும். ஜமாஅத் என்றால் ஒன்றுபடுதல் அல்லது ஐக்கிய படுதல் என்பது பொருளாகும். குர்ஆனையும், முஹமது நபி அவர்களின் வழிமுறைகளையும், நன்கு கற்றறிந்த ஒருவர் ஜமாஅத்தில் இருக்கும் போது, வேறு ஒருவரை பொறுப்பில் அமர்த்துவோர் நிச்சயமாக அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஸ்லிம் ஜமாஅத்தினரையும் ஏமாற்றியவராவார் என்று முஹம்மது நபி கூறியதாக வருகிறது.

செல்வாக்குடையோரும், கட்டப்பஞ்சாயத்து செய்வோரும், குடும்பங்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளை கையில் எடுத்து ஒரு குடும்பத்திற்குச் சாதகமாகவும், மற்றொரு குடும்பத்திற்குப் பாதகமாகவும் இருந்து கட்டப்பஞ்சாயத்து செய்வது, உயர் பதவியில் அமர்ந்து அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பதவியாசை பிடித்தவரை பதவியில் அமர்ந்துவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. பள்ளிவாசல்களை முத்தவல்லிகள் என்றழைக்கப்படும் ஜமாஅத்தின் தலைவர்கள் அவர்களுக்குக் கீழ் இயங்கும் நிர்வாகக் குழுக்களின் மூலம் நிர்வாகம் செய்கின்றனர்.

ஜமாஅத் தலைவர் தகுதிகள்:

பள்ளிவாசல் நிர்வாகிகள் நேர்மையானவராக இருக்கவேண்டும். இஸ்லாமிய மதத்தில் தடைசெய்யப்பட்ட வட்டி போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது. ஐந்து நேரமும் பள்ளிவாசலில் ஜமாஅத்தோடு தொழ வேண்டும். மார்க்க அறிவு இருக்க வேண்டும். மக்கா சென்று ஹஜ் கடமை செய்தும், திருமணமானவராகவும் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என பல சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

பதவி ஆசை:

இஸ்லாம் மதத்தில் மன்னர் ஆட்சி அங்கீகரிக்கப்படமாட்டாது. பொதுமக்கள் தேர்தல் மூலமோ அல்லது குடவோலை மூலமோ ஜமாஅத் தலைவரைத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் சில ஊர்களை எடுத்துக் கொண்டால் இரண்டே இரண்டு குடும்பங்கள் திராவிட கட்சிகள் போல அ.தி.மு.க, தி.மு.க என மாறி மாறி வருவது போல இரண்டு குடும்பங்கள் தான் ஜமாஅத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவர். இந்தத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகளை விட அதிக முக்கியத்துவம் செய்து பணத்தை வாரியிறைத்தும், வக்பு வாரிய கண்காணிப்பாளர் முதல் வக்பு வாரிய தலைவர் வரை சரிகட்டி ஜமாஅத் அமைப்பின் தலைவர் பொறுப்பைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

யாருக்கு நன்மை: ஜமாஅத் தலைவர் பதவிக்கு வந்தவுடன் சமூக சீர்திருத்தமோ அல்லது தன்னுடைய ஜமாஅத்தில் மக்களின் அடிப்படை வசதிகளைப் பற்றி போராடும் எண்ணமோ அல்லாமல் திருமணத்திற்கு என்.ஓ.சி. கொடுப்பது, இறந்தால் கபர்ஸ்தான் என்ற மையவாடி கொடுக்கப்படக்கூடிய அதிகாரம் படைத்தவராக இருப்பார். வேறு ஒன்றும் சமூகத்தில் மாற்றம் செய்திருக்கமாட்டார். 

ஜமாஅத் சொத்துக்கள்:

பெரும்பாலான ஜமாஅத் தலைவர் வெள்ளிக்கிழமை வசூலிலும், வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடம் பள்ளிவாசலுக்கு அதை செய்கிறேன் இதை செய்கிறேன் எனக் கூறி வசூல் ஒன்றையே குறிக்கோளாக வைத்து ஜமாஅத் சொத்துக்களை அழிப்பது, ஜமாஅத் கட்டுப்பாட்டில் உள்ள நிலம், கடைகளை ஆக்கிரமிப்பு செய்வது போன்றவற்றைத் தான் முக்கிய வேலையாக வைத்துள்ளனர்.

கட்டப்பஞ்சாயத்து:

பெரும்பாலான ஜமாஅத் தலைவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் வசதி படைத்தவர்கள் மற்றும் தனக்கு வேண்டியவர்களுக்குத் தீர்ப்புகளை சாதகமாகவும், மற்றவர்களுக்குப் பாதகமாகவும் தீர்ப்பை எழுதுகிறார்கள். இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது.

ஊர்விலக்கம்:

ஜமாஅத் தீர்ப்பை எதிர்த்து கேள்வி கேட்டால் ஊர்விலக்கம், இறந்தவர்கள் பிணம் புதைக்க மறுப்பு என இந்து சமய சாயலில் தீண்டாமையைப் புகுத்தி வருவதும், ஒரு சில ஊர்களில் ஜமாஅத் தலைவர்கள் மையவாடிகளைப் பிரிப்பதும், சாகிபு, நவாப்களுக்குத் தனி மையவாடி அமைப்பதும் தீண்டாமையாக கருதப்படுகிறது.

உளவாளிகள்:

ஜமாஅத் தலைவரை எதிர்த்தவர்கள் அல்லது தேர்தல் நேரத்தில் வாக்களிக்காதவர்களை, ஊரில் ஏதாவது பிரச்சனை அல்லது கலவரம் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் காவல்துறையினருக்கு அவர்கள் குறித்த தவறான தகவலைக் கொடுப்பது; இன்னும் சில ஜமாஅத் தலைவர்கள் தனக்கு எதிரானவர்களை, தீவிரவாதிகளுடன் அவர்களுக்குத் தொடர்பு என்று  பள்ளிவாசல் லெட்டர் பேடில் எழுதிக் கொடுக்கும் அவலமும் உள்ளது.

ஜமாஅத் தலைவர்கள் செய்ய வேண்டியது:

பள்ளிவாசல் சொத்துக்களைப் பராமரிப்பது, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்பது, கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் பின்தங்கிய சமூகமாக இருக்கும் முஸ்லிம்களை முன்னேற்றப் பாடுபடுவது, கந்துவட்டி கொடுமையில் இருந்து விடுவிக்க வட்டியில்லா கடன் போன்ற சீர்திருத்தங்கள் போன்ற சமூக மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வந்தால்,   வரலாற்றில் பொன் எழுத்துகளில் அவர்களது பெயர் பதிக்கப்படும். இவற்றை செய்யாமல் வெள்ளிக்கிழமை வசூல் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பது அவர்களுக்கோ அல்லது சமுதாயத்திற்கோ நன்மையைப் பெற்றுத் தராது.  திருந்துவார்களா தவறு செய்யும் முத்தவல்லி என்றழைக்கப்படும் ஜமா அத் தலைவர்கள்?

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்..... இப்படி சிரு சிரு பதிவுகளை வைப்பதோ கூறுவதோ சுலபமான விடயம் தான் ஆனால், அவைகளை குர்ஆன் அஸ்சுன்னா அடிப்படையில் வைப்பது தான் மிக சிரந்த விடயமாகும். இங்கே அதை கடைப்பிடிக்காமல் வெறுமனே கட்டுரை ஒன்ரை முடிக்க வேண்டும் என்பதால் இதை பதிந்திருக்கிரார் என்று என்னுகிரேன். தயவு செய்து இப்படி மார்க்க விடயங்களை பகிர்ந்துக்கொள்ளும் போது அவைகளை தகுந்த ஆதாரங்களுடனும் குர்ஆன் சுன்னாவிற்க்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதை அனைவரும் மனதில் வைத்து இப்படி பட்ட பதிவுளை அமையுங்கள்.....

    ReplyDelete

Powered by Blogger.