Header Ads



மன்னிப்பு கேட்டது மெக்டோனால்ட்

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மெக்டோனால்ட் நிறுவனம் உலகின் மிகப் பெரிய சங்கிலித் தொடர் துரித உணவு உணவகங்களின் நிறுவனம் ஆகும்.119 நாடுகளில் செயல்படும் இந்த அமைப்பு தினம் 68 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிகின்றது. ஜப்பான் நாட்டிலும் இந்த நிறுவனத்தின் பல கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் வடக்கு டோக்கியோவில் உள்ள ஒரு உணவகத்தில் காணப்பட்ட அறிவிப்புப் பலகையானது இணையதளத்தில் விவாதம் எழுமளவிற்கு பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

மோசமான சுகாதாரம் கொண்டவர்களும், வீடற்றவர்களும் உள்ளே நுழையக்கூடாது என்று அந்தக் கடை வாசலில் இருந்த அறிவிப்புப் பலகையில் காணப்பட்ட வாசகங்களே பிரச்சினைக்குக் காரணமாயிற்று. திடீரென பெரிய நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளும், வாழ்நாள் வேலைவாய்ப்புகள் குறைந்ததுவும் ஜப்பானில் நடுத்தர வயது கொண்டவர்களைக்கூட வேலையில்லாதவர்களாக ஆக்கியுள்ளது.

பாரம்பரிய குடும்ப உறவுகளுக்கும், அதனை ஒட்டிய செல்வத்திற்கும் இந்நாடு முக்கியத்துவம் அளித்துவரும்போதும் இங்கும் வீடற்றவர்களைக் காண முடிகின்றது. இந்த ஆண்டு ஜனவரி மாதக் கணக்கெடுப்பின்படி ஜப்பானில் மொத்தம் 8,265 பேர் வீடற்றவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதனால் மற்ற நாடுகளைப் போல் இளவயதினர் மட்டுமில்லாமல் ஜப்பானின் தெருக்களில் வசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் முதியவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இத்தகைய நிலையில் வீடற்றவர்களைப் பற்றி அந்த உணவகத்தில் குறிப்பிட்டிருந்தது விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட புகார்களை அறிந்த மெக்டோனால்ட் நிறுவனம் இன்று ஒரு மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட வார்த்தையை அறிவிப்புப் பலகையிலிருந்து நீக்கியுள்ளதோடு உரத்த குரலில் பேசுதல், தூங்குதல் மற்றும் மோசமான சுகாதாரம் போன்றவற்றால் மற்றவர்களை அசவுகரியமாக உணரவைப்பவர்களுக்கு அனுமதி கிடையாது என்று மாற்றியுள்ளது.

இந்த அறிவிப்பின் நோக்கம் கடையில் உள்ள மற்ற வாடிக்கையாளர்கள் வசதியாக உணரவேண்டும் என்பதுதான். எனினும், இதற்காகத் தாங்கள் மன்னிப்புக் கோருவதாக ஜப்பானில் இயங்கும் மெக்டோனால்ட்ஸ் நிறுவனம் தங்களது மன்னிப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.