ஸ்மார்ட் போனில் ஒலி மாசுகளை கட்டுப்படுத்தும் வசதி
நகரங்களில் ஒலி மாசுகளினால் ஏற்படும் இன்னல்களைக் கண்டறிந்து அதனை கட்டுப்படுத்தும் வகையிலான புதிய ஸ்மார்ட் போன்களை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி தலைமையிலான ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நியூசவுத் வேல்ஸ் பல்கலைக் கழகம் மற்றும் காமன்வெல்த் அறிவியல் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து டாக்டர் ராஜீப்ராணா தலைமையில், தற்போது செயல்பாட்டில் உள்ள ஸ்மார்ட் போன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயர்போன் என்ற பெயரில் ஒலி மாசைக் கட்டுப்படுத்தும் இந்த புரோகிராமை உருவாக்கியுள்ளனர்.
இதன்மூலம் நகரங்களில் ஒலி மாசு அதிகம் உள்ள இடங்களின் விரிவான வரைபடங்களைத் தயாரிக்க முடியும். மேலும், ஒலி மாசு ஆபத்து நிறைந்த பகுதிகளையும் கண்டறிய இயலும். இந்த தகவல்கள் நகரமைப்புத் திட்டத்திற்கு பேருதவியாக அமையும்.
நவீன கால வாழ்க்கையில் கேட்புத் திறன், தூக்கத் தொந்தரவு, உளவியல் ரீதியான பெரும் பாதிப்புகளை ஒலி மாசு ஏற்படுத்தி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் ஒலி மாசு வரைபடம் தயாரிக்கும் வழக்கம் இல்லை. ஆனால் பிரிட்டனில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலி மாசு வரைபடம் தயாரிக்கப்படுகிறது. இந்தக் கருவி ஒலி மாசை நேரடியாக அளவிடாது. போக்குவரத்து அடர்த்தி மாதிரிகள் மற்றும் ஒலியின் எதிரொலி போன்றவற்றின் அடிப்படையிலேயே அதன் செயல்பாடுகள் உள்ளன. இதனை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment