நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அரசியல் பணி, கம்பஹா மாவட்டத்திற்கு விஸ்தரிப்பு (படங்கள்)
கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் குறித்து கலந்துரையாடல் ஒன்று நேற்று (12.11.2013) செவ்வாய்க்கிழமை திஹாரிய ஊர்மனைப் பிரதேசத்தில் இப்பிரதேச அரசியல் செயற்பாட்டாளர் எம்.எம். முனாஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கம்பஹா மாவட்ட அரசியற் செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்ட மேற்படி கலந்துரையாடலின்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரதிநிதிகளான அதன் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் (நளீமி), சூறாசபை உறுப்பினர் எம்.ஐ.எம். இர்ஷாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கடந்த 7 வருட கால அரசியல் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வந்த கம்பஹா மாவட்ட அரசியற் செயற்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கையின் தற்போதைய முஸ்லிம் அரசியல் சூழலில் முஸ்லிம் அரசியலை முன்மாதிரி மிக்கதாகவும் மக்களுக்கு விசுவாசமானதாகவும் விழுமிய அரசியலைக் கொண்டதுமாக முன்னெடுப்பது தொடர்பான கடந்த கால அரசியல் அனுபவங்கள் தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகளால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் எதிர்காலத்தில் கம்பஹா மாவட்டத்திலுள்ள 42 முஸ்லிம் கிராமங்களிலிருந்தும் இவ்வாறான அரசியல் செயற்பாடுகளின் மீது ஆர்வமிக்க செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து அரசியல் விழிப்பூட்டல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதற்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக இதன்போது அதன் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
wish you all the best
ReplyDelete