இனம் சாரா அரசியலை நோக்கி இலங்கை..?
(லதீப் பாரூக்)
வித்தியாசமான இனங்கள், மதங்கள், மொழிகள் மற்றும் கலாசாரம் என்பன ஒரு புறமிருந்தாலும், இந்தியாவில் சிறுபான்மை இனத்தவர் ஒருவரினால் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வருவதற்கு இயலுமாக இருக்கிறது. சமூகம் சார்ந்த மற்றும் இனவாத அரசியல் காரணமாக, இலங்கையில் தொலை தூரக் கனவாகக் கூட இது இல்லை- மூத்த சிங்களப் பத்திரிகையாளர் ஸ்ரீ ரனசிங்க
குறுகிய பார்வை கொண்ட, அழிவுகரமான, சமூகம் சார்ந்த மற்றும் இனவாத அரசியலைக் கைவிட்டு, நாட்டைப் பாதுகாக்க அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என மூத்த சிங்களப் பத்திரிகையாளர் ஸ்ரீ ரனசிங்க கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
'வித்தியாசமான இனங்கள், மதங்கள், மொழிகள் மற்றும் கலாசாரம் என்பன ஒரு புறமிருந்தாலும், இந்தியாவில் சிறுபான்மை இனத்தவர் ஒருவரினால் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வருவதற்கு இயலுமாக இருக்கிறது. சமூகம் சார்ந்த மற்றும் இனவாத அரசியல் காரணமாக, இலங்கையில் தொலை தூரக் கனவாகக் கூட இது இல்லை என அவர் கவலை வெளியிட்டார்.
முன்னாள் தேசியப் பேரவை சபாநாயகர் தேஷமான்ய முஹம்மத் பாகிர் மாக்கார் அவர்களது வாழ்க்கை சரிதை நூலான 'வெத கெதர விப்லவய' என்ற நூல் வெளியிட்டு வைக்கப்படும் வைபவம், அண்மையில் ஸ்ரீ லங்கன் பவுண்டேஷனில் இடம்பெற்றது. இதன் போதே, சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்கருத்தைக் குறிப்பிட்டார்.
அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி என்ற இரு தரப்பு அரசியல் வாதிகளும் இதன் போது, சமூகளித்திருந்ததோடு, அவையில் முன் ஆசனங்களில் அமர வைக்கப்பட்டிருந்தனர். சிரேஷ்ட அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா, சிஆம் நிகாயவின் பதிவாளர் சங்கைக்குரிய கொடபிடிய ரா{ஹல தேரர், முன்னாள் கல்வி அமைச்சர் கருணாசேன கொடிதுவக்கு எனப் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டோரில் அடங்குவர்.
கலந்து கொண்டவர்கள் அனைவரும் இனம் சார்ந்த அரசியலை ஒரே குரலில் நிராகரித்தனர். நாட்டைக் கூறுபோட்டு, கிட்டத்தட்ட அழித்து விட்ட இனவாத அரசியலை இவர்கள் அனைவரும் நிராகரித்தமை சபையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் சங்க நாதமாகவே இருந்தது.
இலங்கை சுதந்திரம் அடைந்த போது, சம காலத்தில் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்கப் பிராந்தியங்களில் சுதந்திரம் பெற்றிருந்த ஏனைய வளர்ந்து வரும் நாடுகளுக்கு இலங்கை ஒரு முன்மாதிரியாக இருந்தது. அரசியல் ஸ்திரத்தன்மை, இனங்கள் மத்தியிலான சக வாழ்வு, பொருளாதார உறுதிப்பாடு, உயர்ந்த கல்வி அறிவு வீதம் எனப் பல்வேறு துறைகளில் இலங்கை முன்னணியில் இருந்தது. இலங்கைப் பல்கலைக்கழங்களின் பட்டங்களுக்கு பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவ நாடுகளில் மிகுந்த மரியாதை இருந்தது. சுகாதாரத் துறையும் மிக உயர்ந்த படித்தரத்தில் இருந்தது. இந்தியர்கள் கூட பல போது சிகிச்சைக்காக இலங்கைக்கு வந்து சென்றனர்.
இந்த வகையில் முன்னேற்றப் பாதையில் நடைபோடுவதற்குரிய அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியான சகல உள்ளடக்கங்களையும் நாடு கொண்டிருந்தது. ஆனால், தூர நோக்கோடு நாட்டை வழி நடாத்தக் கூடிய தலைமைத்துவமொன்று நாட்டுக்குக் கிடைக்கவில்லை. சுதந்திரத்தைத் தொடர்ந்து, இனவாத அரசியலின் அசிங்கமான முகம் மெது மெதுவாகத் தென்பட ஆரம்பித்தது.
சிறுபான்மையினர் அந்நியமாக்கப்பட்டார்கள். இது நாட்டுக்கு பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தியது. பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளுக்காக மாத்திரம் இத்தலைவர்கள் வேலை செய்யவில்லை. சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் சலுகைகளை அடக்கி ஒடுக்கும் அளவுக்கு இவர்கள் சென்றார்கள்.
உதாரணமாக, சுதந்திரம் கிடைத்த கையோடு, 1948 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்கக் குடியுரிமை சட்டம் அமுலுக்கு வருகிறது. 1949 ஆம் ஆண்டு 3 ஆம் இலக்க இந்திய, பாகிஸ்த்தான் குடியிருப்பாளர்கள் சட்டமும், பாராளுமன்றத் தேர்தல் சட்டமும் அமுலுக்கு வருகிறது. இவற்றின் விளைவாக, இந்தியர்கள் பெருந்தொகையானோர் (தோட்டத் தொழிலாளர்கள் உட்பட) தமது குடியுரிமை மற்றும் வாக்குரிமையை இழக்கிறார்கள். சிலரைப் பொறுத்த வரை, உள்நாட்டு வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய முஸ்லிம் வியாபாரிகளைக் கையாள்வதும் இச்சட்டத்தின் நோக்கமாகும்.
தூரநோக்கற்ற நமது அரசியல் தலைமைகள் இனம் சார்ந்த சுலோகங்களோடு அரசியல் நடாத்தின. இது விடயத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றோடொன்று போட்டியிட்டன. விளைவாக, தமிழ் தரப்பினரின் பிரிவினைவாதக் கோரிக்கைக்கு இது வித்திடுகிறது. அந்த நிலையில் கூட, வளர்ந்து வருகின்ற அபாயத்தின் உக்கிரத்தைப் புரிந்து கொள்கின்ற சாணக்கியம் அற்ற நிலையில்தான் தென்னிலங்கைத் தலைமைகள் இருந்தன.
ஆறு தசாப்தங்கள் கடந்த நிலையில், உலகில் மிக அதிகளவில் முறையற்ற நிர்வாகம் இடம்பெறும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் இன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையைத் தோல்வி அடைந்ததொரு அரசு என சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் லீ அவர்கள் கூட 2007 இல் குறிப்பிட்டிருந்தார். இவர்தான் அறுபதுகளில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு, இலங்கை ஒரு சிறந்த முன்மாதிரியாகும் எனக் கூறியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மேலும் குறிப்பிடுகிறார்:
'இலங்கையினதும், புதிதாக சுதந்திரம் அடைந்து 'தோல்வி அடைந்த அரசுகளினதும்' தவறுகள், சிங்கப்பூரை ஒரு வித்தியாசமான திசையில் நடைபோட வைத்தது. 1965 இல் தோல்வி அடைந்த நாடுகளில் இருபது ஆண்டு கால அனுபவம் எம்மிடம் இருந்தது. எதனைத் தவிர்க்க வேண்டும் என நாம் அறிந்திருந்தோம். இலங்கையில் இன, மத ரீதியான முரண்பாடுகளையும், மொழி ரீதியான சகஜமின்மையையும் நாம் கண்டோம். மர்மம் நிறைந்த கடந்த காலத்தை முன்னுறுத்தி, கலாசாரம், மேன்மையை மீள் கட்டமைப்பது போன்ற சிந்தனைகள் எம்மைப் படுகுழியில் தள்ளிவிடுமென்பதை நாம் அறிந்திருந்தோம். எனவே, ஆங்கிலத்தை உத்தியோக மொழியாக்கினோம். அதன் மூலம் சகல சமூகங்களையும் ஒன்றாக வைத்திருந்தோம். அதன் மூலம் சிங்கப்பூர் இன்றிருக்கும் நிலையை அடைந்திருக்கிறது'.
எவ்வளவு தெளிவான செய்தி?
இன்று இலங்கையின் அரசியல் முறைமை மொத்தமாக ஊழல் மயப்பட்டு, குற்றவாளிகளின் புகலிடமாகி, வணிக மயமாகியுள்ளது. எனவே, சீரியஸான அபிவிருத்திக்கான வாயில்கள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. நாட்டை ஆளும் உயர் வர்க்கம், நாட்டின் அரசியலில் மிக மூர்க்கமான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்றமைதான் ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான முறையற்ற முகாமைத்துவத்திற்கான காரணமாகும்.
'அரசியலுக்குள் நுழையும் அறுபது வீதமானவர்கள், தமது வியாபார நடவடிக்கைகளுக்காகவே அவ்விதம் செய்கிறார்கள்' என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ஒரு முறை குறிப்பிட்டார்.
இவ்விதம் அரசியல் ரீதியான ஸ்தீரத்தன்மையின்மை, பிரிந்திருக்கின்ற இனங்கள் என ஆரம்பித்து, இன ரீதியான யுத்தத்திற்குள் நாடு இறுதியில் தள்ளப்பட்டது. உலக மயப்பட்ட பொருளாதார அபிவிருத்தி காரணமாக, உருவாகியிருக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, பிராந்தியத்தின் எல்லா நாடுகளும், தமது மக்களுக்குச் சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக விரைந்து கொண்டிருக்கின்றன. வியட்நாம் கூட, தனது கடந்த காலத்தை ஒரு புறம் வைத்து விட்டு, பொருளாதார அவிவிருத்தியை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.
எழுபதுகளில் இந்திய ரூபாயொன்று, இலங்கைப் நாணயத்தில் 40 சதத்திற்கு சமமானதாக இருந்தது. இன்று இந்திய ரூபாயொன்றுக்கு எதிரான இலங்கை ரூபாயின் வெளிநாட்டு நாணய மாற்றுப் பெறுமதி, சுமார் இரண்டு ரூபாய் ஐம்பது சதமாகும்.
வறிய முக்கியத்துவமற்ற நாடாகவும், கல்வியில் இருந்து, மருத்துவத் தேவைகள் வரை சகல தேவைகளுக்கும் இலங்கைக்கு வர வேண்டிய தேவையிலும் இருந்த மாலைத்தீவு, இன்று பொருளாதார ரீதியாக பெருமளவிலான அடைவுகளை அடைந்திருக்கின்றது. அதன் தலா வீத வருமானம் இலங்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும். ஆசியாவிலேயே மிகவும் செல்வந்த நாடுகளில் ஒன்றாகக் கூட மாலைத் தீவைச் சிலர் வர்ணிக்கிறார்கள்.
நாம் சுதந்திரம் அடைகின்ற காலத்தில், டுபாய் என்பது அறியப்படாததொரு பெயர். பாரம்பர்ய மண் வீடுகள் தவிர, ஒழுங்கு முறையான கட்டிடங்களோ, பாதைகளோ, பாடசாலைகளோ, வைத்தியசாலைகளோ அடிப்படை வசதிகளோ அங்கிருக்கவில்லை. மின்சாரம் என்பதே கேள்விப் படாததோர் அமசமாக அன்று இருந்தது. முழு சனத்தொகையுமே கல்வியறிவற்றதாக இருந்தது. பெரும்பாலானவர்கள் கடினமான கால நிலையிலும் கூட மீன்பிடி மற்றும் கறுவாட்டுக் கைத்தொழிலில்தான் ஈடுபட்டார்கள். இனம், மதம், மொழி, கலாசாரம் கடந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யக் கூடிய நபர்களை நாட்டுக்குள் அனுமதித்து, அவர்களுக்கு சம வாய்ப்புக்களை வழங்கியதன் மூலம் இன்று பிரம்மிக்கத்தக்க வளர்ச்சியை அது அடைந்திருக்கிறது. 2008, ஏப்ரல் வரை, டுபாய் நிறுவனமொன்றுதான் எமது 'எயார் லங்காவை' (ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸின் பழைய பெயர்) நிர்வகித்தது. சிறியதொரு நகர அரசாக இருந்த போதிலும், டுபாயின் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் எவ்வளவோ இருக்கின்றன.
ஆனால், இவற்றில் இருந்து பாடம் படிப்பதும், எமது சொந்த வரலாற்றில் இருந்து பாடம் படிப்பதும் ஒரு புறம் இருக்க, அரசாங்கத்திலும் வெளியிலும் இருக்கின்ற 'தேசியவாதிகள்', ஒரு ஒரே ஒரு இனம் மட்டுமே இங்கு இருக்கிறது, அது சிங்கள இனம் மட்டுமே என்றும், ஏனையவர்கள் பெரும்பான்மையினரைப் பின்தொடரக் கற்றுக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
முப்பது ஆண்டு கால யுத்தத்தின் பாடங்களைப் புறந்தள்ளி விட்டு, மே 2009 இல் யுத்தம் நிறைவடைந்ததில் இருந்து, சிறுபான்மையினரை ஓரம்கட்டும் முழு அளவிலான சிங்கள மயமாக்கல் நிகழ்ச்சி நிரலொன்று வேகம் பிடித்துள்ளது. சகவாழ்வு, சமூக நல்லிணக்கம், புனர் வாழ்வு என்பதெல்லாம் வெறும் சுலோகங்களாக நின்று விடுமோ என்ற அச்சம் அதன் மூலம் இன்று உருவாகியுள்ளது.
எதிர்காலத் தலைமுறையாவது அமைதியாக வாழ வேண்டுமானால், அதற்குரிய முன்னெடுப்புக்கள் இப்போது ஆரம்பிக்கப்பட வேண்டும். இது இமாலய இலக்காக இருந்தாலும், சாத்தியமில்லாததல்ல.
இந்த வகையில் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டிய ஒரு பகுதிதான் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையாகும். தோல்வியடைந்துள்ள இம்முறைமை மாற்றுவதற்கு, கடந்த மூன்று தசாப்தங்களாக எல்லா சமூகங்களும் விருப்பம் கொண்டிருக்கின்றன. இதே வாக்குறுதியோடுதான் 1993 தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க வெற்றி பெற்றார். ஆனால், துரதிஷ்டவசமாக அதிகாரத்தின் சுவை தெரிந்த பிறகு, அதனை மாற்றியமைக்க அவர் விரும்பவில்லை. இரண்டு முறை அவர் பதவிக் கட்டிலில் அமர்ந்திருந்த போதும் கூட, இம்முறைமையை மாற்றி அமைக்க அவர் எதுவும் செய்யவில்லை.
இவ்விதம் தனிநபர் ஒருசிலரின் தலையில், பாராளுமன்றத்திற்கோ, நாட்டிற்கோ பொறுப்புக் கூற வேண்டிய கடமைப்பாடும் அற்ற நிலையில் அதிகாரம் குவிந்த கிடக்கின்றமை இந்நாட்டிற்கு கிடைத்திருக்கின்ற சாபக் கேட்டுக்கான முக்கியமான காரணங்களுள் ஒன்றாகும்.
நோபல் பரிசு வென்ற இந்திய எழுத்தாளர் அமார்த்தியா சென் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: இலங்கை நெருக்கடியில் இருக்கிறது.... இலங்கை இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை எனப் பல்வேறு சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது. இது அந்நாட்டின் சமாதானத்திற்கு பங்களிப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், பௌத்தம் மற்றும் சிங்களவர்களின் முழுமையான சமுதாயப்படி நிலையை மாத்திரம் தூக்கிப் பிடிப்பதன் மூலம், சமூகத்தின் அடுத்த பகுதிகளை, அவர்கள் தேசிய அடையாளத்துடன் தம்மை அடையாளம் காண்பதில் இருந்து அந்நியமாக்கியது. இன்று அந்த நிலைக்கு இலங்கை திரும்பிச் செல்லும் என்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. இலங்கை தனது பன்மைத்துவத்தின் செழுமையைப் புரிந்து கொள்ளவில்லை'
அரசியல்வாதிகள் தமது சொந்த நலங்களுக்காக அல்லாமல், நாட்டின் ஒட்டுமொத்த நலன்களுக்காக செயற்பட வேண்டும் என்ற ஸ்ரீ ரனசிங்கவின் கருத்துக்கள், இந்தப் பின்னணியில் இருந்துதான் நோக்கப்பட வேண்டும்.
Post a Comment