Header Ads



பிரதிக் கல்விப் பணிப்பாளர் முக்தாரின் குற்றச்சாட்டுக்களை, பதில் அதிபர் ஹம்ஸா மறுக்கிறார்

(ஏ.எல்.ஜுனைதீன்)

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் கடந்த 29 ஆம் திகதி நடைபெற்ற விரும்பத்தகாத அசம்பாவிதத்தைத் தொடர்ந்து கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார் கல்லூரியின் தரம் ஆசிரியர்களின் நடவடிக்கைகள்  மாணவர்களின் ஒழுக்கம் என்பன தொடர்பாக தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு கல்லூரியின் பதில் அதிபர் எம்.எஸ்.எம். ஹம்ஸா அவர்கள் பதில் விளக்கம் அளித்துள்ளார்.

இது சம்மந்தமாக அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கான விசேட கூட்டம் ஒன்றைக் கூட்டி பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரின் சகல குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளார். இக்கூட்டத்தில் பதில் அதிபர் எம்.எஸ்.எம்.ஹம்ஸா அவர்கள் தெரிவித்ததாவது,

சம்பவம் நடைபெற்ற அந்த நேரத்தில் குழப்பமான நிலையிலும் சுய நினைவும் இல்லாதிருந்த எமது பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் அவர்கள் எமது கல்லூரியைப் பற்றியும் ஆசிரியர்கள் மாணவர்கள் பற்றியும் பிழையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் பதட்டத்தோடும் இரத்தக் கறையோடும் இருந்ததினாலும் எமது கல்லூரியின் மீது கொண்டிருந்த குரோதத்தினாலும் இக் கல்லூரியில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்றும் கூறினார்.

அந்த நேரம் அவர் தெரிவித்த கருத்துக்களை வலயக் கல்விப் பணிப்பாளரிடம் நாம் முறையிட்ட போது  அந்தக் கருத்துக்கள் அனைத்தும் அவரின் சொந்தக் கருத்துக்கள் என வலயக் கல்விப் பணிப்பாளர் எம்மிடம் சொன்னார். அவர் கூறியது போன்று இக்கல்லூரியில் எது வித நிதி மோசடியும் இடம்பெறவில்லை. இது சம்மந்தமாக எமது வலய கணக்காளர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கல்லூரிக்கு வருகை தந்து இங்கு எதுவித நிதி மோசடியும் இல்லை. பாடசாலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறிவிட்டுச் சென்றார்.

இது குறித்த அறிக்கை வந்ததன் பின்னர்தான் பிரதிப் பணிப்பாளர் முக்தார் சொன்னது பொய்யான கல்லூரிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அபாண்டமான விடயம் என்பது தெரிய வரும். எங்களது ஆசிரியர்களின் வேண்டுகோள்களுக்கிணங்க எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து எமது வலயக் கல்விப்பணிப்பாளர் உடனடியாகச் செயல்பட்டு அதில் முக்கிய கோரிக்கை ஒன்று நிறைவேற்றப்பட்டிருப்பதாக என்னிடம் தொலைபேசியூடாகத் தெரிவித்துள்ளார். இதற்காக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு நன்றியைக் கல்லூரி சார்பாகத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து எமது கல்லூரி மாணவர்களிடம் ஒழுக்கம் இல்லை என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். யார் ஒழுக்கமில்லாதவர்கள் என்பது ஊருக்கே தெரியும். இக் கல்லூரியிலிருந்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றலாகிச் சென்றபின் எமது சிரேஸ்ட ஆசிரியர்கள் எமது கல்லூரி மாணவர்களின் ஒழுக்கத்தைப் பற்றிச் சிறப்பாகக் கூறுகின்றார்கள். இப் பிராந்தியத்திலேயே எமது கல்லூரி மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் என்பதை அந்த சிரேஸ்ட ஆசிரியர்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம். எங்கள் மாணவர்கள் எந்த விதத்திலும் ஒழுக்கத்தில் குறைந்தவர்கள் அல்ல. அது போன்று அறிவு குறைந்தவர்களும் அல்ல. இந்த வலயத்தில் அதிக திறமையை  இக் கல்லூரி மாணவர்கள் காட்டியிருக்கிறார்கள்.
பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் இக்கல்லூரி தொடர்பாக எடுத்து வைத்த குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் அவர் சுய நினைவு இல்லாமல் கூறியது என்பதை எமது ஆசிரியர்களின் சார்பாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

1 comment:

  1. நடைபெற்ற அசம்பாவிதம் குறித்து தனது தரப்பு நியாயத்தை முன்வைப்பதனை விடுத்து, சப்பைக் கட்டு கட்டியிருக்கின்றார் என்பது பிரிகின்றது. இவரை இடமாற்றம் செய்யாவிட்டால், பாடசாலை உருப்பட்ட மாதிரித்தான்.

    ReplyDelete

Powered by Blogger.