Header Ads



இசைப்பிரியா, பயிற்சிபெற்ற லெப்டினன்ட் கேணல் தரத்தைச் சேர்ந்தவர் - இராணுவம்

சிறுவர்களை களத்துக்கு அனுப்பிய பிரபாகரன் லெப்டினன்ட் கேணல் தரத்திலிருந்த இசைப்பிரியாவைப் போருக்கு அனுப்பாமல் விட்டிருப்பாரா?'' என்று கேள்வியயழுப்பினார் இராணுவப் பேச்சாளர். "சனல் 4' இயக்குநர் கெலும் மக்ரேயின் கருத்துத் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இசைப்பிரியா இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படும் காணொலியை இலங்கை இராணுவச் சிப்பாயே தன்னிடம் தந்தார் என்று "சனல் 4' ஊடகவியலாளர் கெலும் மக்ரே கூறியிருந்தார். 

இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிக சூரியவிடம் வினவிய போது,  அதற்குப் பதிலளிக் கையிலேயே இராணுவப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித் ததாவது:

"சனல் 4' இசைப்பிரியா தொடர்பில் வெளியிட்ட காணொலி கட்டமைக்கப்பட்ட பொய். அது ஒரு நாடகம். இது உலகம் முழுவதிலிருக்கும் மக்களுக்கும் தெரியும் தனது பொய் அம்பலமாகிவிட்டது என்பதற்காகவே கெலும் மக்ரே இவ்வாறு சொல்கிறார். தனது ஆவணப்படத்தின் மீதான சந்தேகத்தை இல்லாமல் செய்யவே இவ்வாறு சொல்லியிருக்கக் கூடும். அந்த காணொலியில் பாருங்கள். அதில் காட்டப்படும் பெண்ணின் முகத்தில் பயம் தெரிகின்றதா? புன்சிரிப்புத் தெரிகின்றதா? இவ்வாறு நான் கேட்கவில்லை. உலக மக்கள் கேட்கின்றனர். இராணுவச் சிப்பாய் தான் தந்தார் என்றால் உண்மையான ஆதாரங்கள் அவரிடம் இருக்குமானால் அதனை உரியவர்களிடம் கொடுக்கலாம் தானே. 

வெள்ளைத்துணி சரி, குறித்த காணொலியில் அந்தப் பெண் மீது வெள்ளைத்துணி போர்த்தப்படுகிறது. அந்த உச்சமாக நடைபெற்ற போர் நேரத்தில் எப்படி வெள்ளைத் துணி அங்கு வந்திருக்கும். அதுவும் சிறிதும் கறைபடாத புத்தம்புதிய துணியாக அது எப்படியிருக்கும். 

இசைப்பிரியா, இசைப்பிரியாவைப் பற்றி நான் சொல்ல வேண்டும். அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பயிற்சிபெற்ற ஒரு போராளி. அதுவும் லெப்டினன்ட் கேணல் தரத்தைச் சேர்ந்தவர். அவர்களின் தொலைக்காட்சியில் வேலை செய்தவர். போரின் இறுதிக்கட்டத்தில் அவர்களின் தொலைக்காட்சி இருக்கவில்லை. அப்பாவிச் சிறுவர்களையே ஒரு வாரப் பயிற்சியோடு போர்க்களத்துக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன். இதற்கு எம்மிடம் ஆதாரங்கள் உள்ளன. இறுதிக் கட்டத்தில் எங்களிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்கள் இதற்குச் சாட்சி. இந்த அப்பாவிச் சிறுவர்களையே இறுதிக்கட்டத்தில் போருக்கு அனுப்பிய பிரபாகரன், பயிற்சி பெற்ற இசைப்பிரியாவை போருக்கு அனுப்பாமல் விட்டிருப்பாரா? 

புலம்பெயர் தமிழர்கள் புலம்பெயர் தமிழர்களில் 90 சதவீதமானவர்கள், நல்லவர்கள். 10 சதவீதத்தினரே எல்லாக் குழப்பமும் செய்கின்றனர். இதுவரை காலமும் போருக்கு ஆயுதங்கள் வாங்கப் பணம் அனுப்பியவர்கள், இப்போது ஊடகங்களை வாங்குகின்றனர். கெலும் மக்ரேயின் மனைவி ஒரு தமிழ்ப் பெண். அவரை வைத்தே மக்ரேயை அணுகியுள்ளனர். மக்ரே வெறும் பொம்மை தான். புலம்பெயர் தமிழர்களின் ஆட்டுவிப்புக்கு அவர் ஆடவேண்டியது தான். பிச்சைக்காரன் எப்போதும் புண்ணைக் காட்டியே பிச்சை எடுப்பான். புண் மாறிவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அதேபோன்று தான் 10 சதவீதமான புலம்பெயர் தமிழர்களும். அவர்கள் இலங்கையில் மீண்டும் போரை உருவாக்கப்பார்க்கிறார்கள். அவர்கள் பாடுபடுவது தமது சொந்த நலனுக்காகவே அன்றி தமிழ் மக்களுக்காக அல்ல என்றார்.

1 comment:

  1. அவர் லெப்டினன்ட் ஆ இல்லையா என்பதல்ல இங்கே பிரச்சினை.

    நிராயுதபாணியாக உயிருடன் இருந்தவரை, எப்படி கற்பழித்துக் கொன்று நிர்வாணமாக போட முடியும் என்பதே கேள்வி?

    வெள்ளைத்துணி எங்கேயிருந்து வந்தது என்பதனை, அதனைப் போர்த்தும் இராணுவ வீரரிடம்தான் கேட்க வேண்டும்.

    குறித்த விடியோ போலியாக தயாரிக்கப் பட்டது என்றால், வெள்ளைத் துணி தொடர்பில் இவருக்கு வரும் சந்தேகம், தயாரிப்பளருக்கு வராமலா போயிருக்கும்? யாருடைய காதில் பூ சுற்றுகின்றார்களோ?

    நீதிக்குப் புறம்பான படுகொலையை புரிந்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படல் வேண்டும். காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை விடயத்திலும், கொலைகாரர்களுக்கு (அவர்கள் தற்பொழுதும் உயிருடன் இருந்தால்) மரண தண்டனை வழங்கப்படல் வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.