சாரை பாம்பை சமைத்து சாப்பிட்டவர்களுக்கு அபராதம்
இந்தியா - கோவை மாவட்டம் வால்பாறையில் சாரை பாம்பை சமைத்து சாப்பிட்ட நண்பர்கள் 2 பேருக்கு (இந்தியா ரூ) 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை மானிக்கா எஸ்டேட் பழையகாடு டிவிசன் தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் வசிப்பவர் அருண்குமார் (25). இவரது நண்பர் ஜான்வெஸ்லி (25). திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாட வால்பாறை வந்திருந்தனர்.
நேற்று முன்தினம் குடியிருப்பு பகுதிக்கு வந்த சாரை பாம்பை அருண்குமாரும், ஜான்வெஸ்லியும் அடித்து கொன்றனர். பிறகு அதன் தோலை உரித்து குழம்பு வைத்து சாப்பிட்டனர். தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் அறிவொளி தலைமையில் வன அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனையிட்டனர். பாத்திரத்தில் பாம்பு இறைச்சி துண்டுகளுடன் இருந்த குழம்பை கைப்பற்றினர். பாம்பை கொன்று சமைத்து சாப்பிட்ட அருண்குமாருக்கும், ஜான்வெஸ்லிக்கும் தலா ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வனச்சரகர் அறிவொளி தெரிவித்தார்.
Post a Comment