மஹிந்த ராஜபக்ஷவை மின்சார நாற்காலியில் உட்காரவைக்க முயற்சி - கெஹெலிய ரம்புக்வெல
(vi) இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக பிரசாரம் செய்யும் கெலும் மெக்ரேயை ஐ.தே.கட்சி எம்.பி மங்கள சமரவீர அக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் சந்தித்தமையானது தேசப்பற்று கொண்ட டி.எஸ்.சேனநாயக்கவின் 'கன்னத்தில் அறையும்" செயலாகும் எனத் தெரிவிக்கும் அரசாங்கம் மெக்ரே தனது வரையறையை மீறி செயற்பட்டால் அச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமென்றும் அரசு அறிவித்தது.
கிருலப்பனையில் உள்ள தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று புதன்கிழமை அவசரமாக இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மின்சார நாற்காலியில் உட்கார வைக்க வேண்டுமென்றும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டங்கள் நடைபெறும் போதும் வேறு முக்கியமான மாநாடுகள் நடைபெறும் போதும் இலங்கைக்கு எதிராக சோடிக்கப்பட்ட கதைகளை தயாரித்து அதனை செனல் -4 தொலைக்காட்சியில் செய்திகளாக ஒளிபரப்புச் செய்பவரே கெலும் மெக்ரே ஆவார்.
அத்தோடு வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்களின் 'சம்பளப் பட்டியலிலும்" மெக்ரேயின் பெயர் உள்ளது. இவ்வாறு பிரச்சினைக்குரிய மெக்ரேயிற்கு விசா வழங்கியமை தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், செனல் -4 இன் மெக்ரே இலங்கைக்கு நேரடியாக வந்து உண்மையை தெரிந்து கொள்ளட்டும் தனது மனச்சாட்சியின்படி நடக்கட்டும் என்ற ஜனாதிபதியின் பரந்த மனப்பான்மை காரணமாகவே விசா வழங்கப்பட்டது.
ஏனென்றால் மெக்ரே ஒளிபரப்புச் செய்த செய்திகளில் பெரும்பாலானவை மூன்றாம் தரப்பின் ஆலோசனைக்கும் தரவுகளுக்கும் அமையவே வெளியாகின. இச் செயற்பாட்டை கைவிட வேண்டுமென்றும் அரசாங்கம் எண்ணியது. இதனை பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் பல தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக உலகளவில் செயற்படும் கெலும் மெக்ரேயை ஐ.தே.கட்சி எம்.பி மங்கள சமரவீர ஐ.தே.கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் சந்தித்துள்ளதோடு மங்கள எம்.பி.யின் வீட்டுக்கு அழைத்தும் பேசியுள்ளார்.
இது அரசாங்கத்தை சவாலுக்குட்படுத்தும் செயலாகும்.ஆனால், மெக்ரே ஆகட்டும், நவிப்பிள்ளை ஆகட்டும் எவரது சவாலுக்கும் முகம் கொடுக்க அரசாங்கம் தயாராகவே உள்ளது.
இலங்கை எமது தாய் நாடு. இதற்கு திட்டமிட்டு அபகீர்த்தியை எற்படுத்தும் கெலும் மெக்ரேயை மங்கள எம்.பி. சந்தித்தது அதுவும் ஐ.தே.கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் சந்தித்தமையானது. ஐ.தே.கட்சியை ஸ்தாபித்த தேசப்பற்று கொண்ட டி.எஸ்.சேனநாயக்கவின் கன்னத்தில் அறைந்ததற்கு சமமாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் மெக்ரேயை சந்திப்பது சம்பிரதாய பூர்வமானதா என்பது தெரியாது. ஆனால் நாட்டுக்கு எதிராக தேசத்துரோகச் செயலில் ஈடுபடுபவரை சந்தித்து ரணில் என்ன பேசப் போகிறார் என்பதே முக்கியமானதாகும்.
ஜனாதிபதி மெக்ரேயை சந்தித்தால் அது நாட்டின் நலன் தொடர்பான பேச்சுவார்த்தைகளாகவே அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், ரணிலும் மங்களவும் சந்திப்பதுதான் கேள்விக்குறியாகவுள்ளது.
விடுதலைப் புலிகள் கொடூரமான கொலையாளிகள் அவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்த வேண்டுமெனக் கூறியுள்ளார். புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டனர். அங்கு விசாரணை செய்வதற்கு யாரும் அவ்வாறான நிலையில் இவ்வாறான கருத்தை வெளியிட்டதன் பின்னணியில் மறைக்கப்பட்ட இரகசியத்திட்டம் உள்ளது.
அதுதான் புலிகளை விசாரிப்பது மட்டுமல்ல, அரசாங்கம் செய்த குற்றங்களையும் விசாரிக்க வேண்டுமென்பதையும் சூட்சுமாக வக்கிரமாக கூறியுள்ளார். கெலும் மெக்ரே தனது வரையறையை மீறி செயற்பட்டால் அரசாங்கம் அச்சந்தர்ப்பத்தில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமென்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
Post a Comment