உடல் பருமனான பயணியை விமானத்தில் ஏற்ற பிரிட்டிஷ் விமான நிறுவனம் மறுப்பு
பிரான்ஸ் நாட்டிலிருந்து கெவின் செனைஸ் என்ற இளைஞனும் அவனது பெற்றோர்களும் மருத்துவ காரணங்களுக்காக அமெரிக்கா வந்தனர். 20 வயதான கெவினுக்கு உடலில் ஏற்பட்ட ஹார்மோன் கோளாறு காரணமாக உடல் பெருத்து 500 பவுண்டு எடையுடன் இருந்தார்.
இதற்காக சிகிச்சை பெறவேண்டி அமெரிக்கா வந்த அவர்கள் கெவினை மேயோ மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்ததும் தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்வதற்காக அவர்கள் மீண்டும் பிரிட்டிஷ் விமான நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் பயணத்தேதியன்று விமான நிலையத்திற்கு வந்த கெவினையும் அவரது மருத்துவ அறிக்கைகளையும் பார்த்த விமான நிறுவன அதிகாரிகள் அவரை தங்கள் விமானத்தில் ஏற்றிக் கொள்ள மறுத்துவிட்டனர்.
கெவினுக்கு எந்த நேரமும் மருத்துவ உதவியும், பிராணவாயுக் கருவியும் தேவைப்பட்டது. இதனால் பயணம் செய்யும்போது ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் சமாளிக்க முடியாது என்ற எண்ணத்தில் விமான நிறுவனம் அவரது பயணத்தை மறுத்துவிட்டது. வேறு விதமான பயண முறைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திய பிரிட்டிஷ் விமான நிறுவனம் அவர்கள் தற்காலிகமாகத் தங்கிக் கொள்வதற்கும் ஏற்பாடு செய்துகொடுத்தது.
ஒரு வாரம் ஓட்டலில் தங்கியிருந்த கெவினின் குடும்பம் மேற்கொண்டு செலவு செய்வதற்கு இயலாமல் ரெயில் மூலம் நியூயார்க் சென்று அங்கிருந்து கப்பல் மார்க்கமாக பிரான்ஸ் செல்ல முடிவெடுத்துள்ளது. வரும்போது கெவினை அழைத்து வந்த பிரிட்டிஷ் விமான நிறுவனத்தினர் திரும்ப செல்லும்போது மறுப்பது குறித்து அவரது தாயார் அந்நாட்டுத் தொலைக்காட்சியிலும் முறையிட்டார்.
பிரான்ஸ் நாட்டுத் தூதரகமும் இதுகுறித்து பேசிப்பார்த்தது. ஆயினும், பாதுகாப்பு கருதி அந்தப் பயணியை அழைத்துச் செல்ல பிரிட்டிஷ் விமான நிறுவனம் மறுத்துவிட்டது.
Post a Comment