புவி ரஹ்மத்துல்லாஹ்வின் கைது - நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கண்டனம்
அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
நேற்றுக் காலை வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவிரஹ்மத்துல்லாஹ்வை கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பெயரில் காத்தான்குடி பொலீசார் கைது செய்த சம்பவமானது, அவர் மீது பழி தீர்த்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமிட்ட நடவடிக்கையே என நம்ப முடிகிறது. மாத்திரமன்றி காத்தான்குடி பிரதேசத்தின் முக்கிய அரசியல்வாதியொருவரின் தேவைக்காகவே இப்பழிவாங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பதனையும், இக்கைது சம்பவம் நிகழ்ந்த விதமும் அதன் பின்புலங்களும் நிரூபிக்கின்றன. பொது மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பொது மக்களின் சேவகர்களாய் இயங்க வேண்டிய பொலீசார், இவ்வாறு அரசியல்வாதிகளின் கட்டளைகளை நிறைவேற்றும் சேவகர்களாக இயங்குவதனை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
புவி ரஹ்மத்துல்லாஹ்வின் கைது தொடர்பாக எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி, நேற்று 31.10.13 காலை 07.40 மணியளவில் மோப்ப நாய்கள் சகிதம் புவி ரஹ்மத்துல்லாஹ்வின் வீட்டிற்கு சென்ற காத்தான்குடி பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர், அவரது வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், வீட்டைச் சோதனை இட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். தாராளமாக சோதனையிட முடியும் என புவி ரஹ்மத்துள்ளாஹ் கூறியதனைத் தொடர்ந்து வீட்டின் உள்ளும் வெளியும் பல இடங்களிலும் சோதனை நடத்திய போதும், அவ்வாறு எதனையும் பொலீசாரினால் கண்டு கொள்ள முடியவில்லை. புவி ரஹ்மத்துல்லாஹ்வின் வீட்டிற்கு வெளியே அமைந்துள்ள வராந்தாவின் வீதியோர சுவரில் தொங்கிய திரைச்சீலைக்குள் இருந்து கஞ்சாப் பொட்டலம் ஒன்றைத் தான் கண்டெடுத்ததாக அப்பொலீஸ் குழுவில் வந்த ஒருவர் திடீரெனக்கூறி அப்பொதியினையும் காட்டியிருக்கிறார். இதனைத் தொடர்ந்தே புவியைக் கைது செய்த பொலீசார், அவரை காத்தான்குடி பொலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்கு மூலத்தைப்பதிவு செய்து, பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர் செய்தனர். இருந்த போதிலும் குறித்த கஞ்சாப்பொதியானது, “வார உரைகல்” ஆசிரியரிடம் இருந்தேதான் கைப்பற்றப்பட்டது என்பதனை பொலீசார் உறுதியாகக் கூறவில்லை என்பதனால் அவரை நீதி மன்றம் பிணையில் விடுவித்திருக்கிறது. இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட பல அவதானங்கள் இது காத்தான்குடி பொலீசாரினால் நடாத்தப்பட்ட நாடகம் என்பதினை நிறூபிப்பதாக அமைந்துள்ளன.
உதாரணமாக, புவி ரஹ்மத்துல்லாஹ்வின் வீட்டை சோதணையிட வந்த பொலீஸார் கொண்டு வந்த மோப்ப நாய் அக்குழுவில் வந்த பொலீசார் ஒருவரை நோக்கி, பாய்ந்து பாய்ந்து குரைத்துக்கொண்டு வந்ததனை வீதியில் நின்ற பொது மக்கள் பலரும் அவதானித்திருக்கின்றனர். அக்குறித்த பொலீஸ் உத்தியோகத்தர் மூலமாகவே புவியின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த கஞ்சாப்பொதி கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகமும், அதன் காரணமாகவே மோப்ப நாய் அவரைப் பார்த்துக் குரைத்துக்கொண்டே வந்ததோ எனும் சந்தேகத்தினையும் இது உருவாக்கியிருக்கின்றது. மேலும் புவியின் வீட்டிற்கு வெளிப்புறமாக அமைந்துள்ள வீதியோர சுவரில் தொங்கிக்கொண்டிருந்த திரைச்சீலைக்குள்தான் குறித்த கஞ்சாப்பொதி ஒளித்து வைக்கப்பட்டிருந்தது என்ற பொலீசாரின் தகவலும் பகுத்தறிவுடன் சிந்திக்கின்ற எவருக்கும் மேலும் சந்தேகத்தினை வலுப்படுத்துகின்றது. அத்தோடு ஒரு அடி நீளமும் 3 அங்குல வரியான விட்டமும் உடைய உருளை போன்று சுற்றப்பட்டிருந்த பொதியொன்றைக் காண்பித்தே அதில் கஞ்சா இருப்பதாக குற்றம் சாட்டிய காத்தான்குடி பொலீஸார், இறுதி வரை அப்பொதியினைப் பிரித்து, அதற்குள் இருந்தது என்னவென யாருக்கும் காட்டவே இல்லை. மாத்திரமன்றி புவியைக் கைது செய்தவுடன் இரண்டு கிலோக் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த பொலீஸார் பின்னர் அதனை 198 கிராம் என நீதி மன்றத்திற்கு தெரிவித்துள்ளனர். இவ்வடிப்படைத் தகவலில் காணப்படும் இக்குளறுபடிகளைப் பார்க்கும்போது பொலீஸார் புவி மீது தாம் சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பில் தடுமாறுவதை அவதானிக்கமுடிகிறது. மேலும் புவியின் விட்டிற்கு தேடுதல் வேட்டைக்காக வந்த பொலீஸ் குழுவில் வந்த எவரும் நேற்று அவரை நீதி மன்றத்தில் ஆஜர் செய்யும் வேளை அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை. இச்சம்பவத்துடன் தொடர்பு படாத சில பொலீஸ் உத்தியோகத்தர்களே காத்தான்குடி பொலீஸாரினால் நீதி மன்றத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
இந்த அவதானங்களின் அடிப்படையில் பார்க்கின்ற பொழுது, இச்சம்பவம் காத்தான்குடி பொலீஸாரினால் வேண்டுமென்றே திட்டமிட்டு நடாத்தப்பட்ட பழி தீர்க்கும் நடவடிக்கை என்றே நம்ப முடிகின்றது. மாத்திரமன்றி கடந்த சில நாட்களாக காத்தான்குடி பொலீஸார் புவி ரஹ்மத்துல்லாஹ் மீது மேற்கொண்டு வருவதாக சொல்லப்படும் அழுத்த நடவடிக்கைகளின் அடிப்படையில் நோக்குகின்ற பொழுது, காத்தான்குடி பிரதேசத்தின் அதிகாரமிக்க அரசியல்வாதி ஒருவரின் கட்டளைக்கமைவாகவே, இது மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என நம்ப வேண்டியிருக்கிறது.
எமது பிரதேசத்;தின் அதிகாரமிக்க அரசியல் வாதிகளினால் மேற் கொள்ளப்படும் நிதி மோசடிகள் அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளை புவி ரஹ்மத்துல்லாஹ் கடந்த காலங்களில் மிகவும் துணிச்சலுடன் அம்பலப்படுத்தி வந்திருக்கிறார். அதன் விளைவாக கடந்த காலங்களில் பல முறை அவர் மீது தாக்குதல்களும் கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டும் வந்துள்ளன. அவ்வாறு அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் இருந்த அரசியல் வாதிகள் யார் என்பதும் பொது மக்கள் அறிந்த விடயமாகும். அந்த வகையிலேயே சில நாட்களுக்கு முன் இப்பிரதேச அரசியல் வாதி ஒருவரின் புதல்வர் தொடர்பான சர்ச்சைக்குரிய செய்தி ஒன்றினை புவி ரஹ்மத்துல்லாஹ் பகிரங்கமாகவும், ஆதாரபூர்வமாகவும் எழுதியிருந்தமையும் அதனைத் தொடர்ந்து, காத்தான்குடி பொலீஸாரினால் அவர் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் தொந்தரவுகள் என்பனவும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கனவாகும். எனவேதான் இதன் குறித்த அரசியல் வாதியின் கட்டளைக்கு அமைவாகவே கஞ்சா வைத்திருந்தார் எனும் பொய்க்குற்றச்சாட்டின் பெயரில் பொலீசாரினால் புவி ரஹ்மத்துல்லாஹ் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று நம்ப வேண்டியிருக்கின்றது.
சட்டத்தையும் ஒழுங்கையும் மக்கள் மத்தியில் நிலை நிறுத்த வேண்டிய பொலீஸார், நீதியாகவும் பாரபட்ஷமின்றியும் தமது கடமைகளை மேற்கொண்டால் மட்டுமே பொது மக்களின் நம்பிக்கையினையும் மரியாதையினையும் வெல்ல முடியும். இந்த விடயத்தில் காத்தான்குடிப் பொலீசார் தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றனர் என்றே நாம் நம்புகிறோம். அதிகார மிக்க அரசியல் வாதிகளின் கட்டளைகளுக்கு கட்டப்பட்டு தமது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்கின்ற அவர்களின் நடவடிக்கைகள் காரணமாகவே இந்த நிலமை ஏற்படுகின்றது. பொது மக்களின் வரிப்பணத்தில் இருந்தே பொலீசாருக்கு சம்பளம் வழங்கப்படுகின்றதே தவிர அரசியல் வாதிகளின் சொந்தப்பணத்தில் இருந்தல்ல என்பதினையும் பொதுமக்களுக்கு பாதுகாப்பை வழங்கி, அவர்களின் சுதந்திரமான வாழ்வினை உத்தரவாதப்படுத்துவதே பொலீசாரின் அடிப்படைக் கடமை என்பதினையும் எவரும் மறந்து விடக்கூடாது.
எனவே இது போன்ற பொலீசாரின் பாரபட்சமான, அநீதியான நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இவ்வாறான நடவடிக்கைகளிலிருந்து காத்தான்குடிப்பொலீசார் உடனடியாக தவிர்ந்து கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றது. அத்தோடு தமது கடமைகளை நீதியாகவும் நடு நிலையாகவும் நிறைவேற்றுவதன் மூலம் பொது மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு காத்தான்குடி பொலீசார் இனிவரும் காலங்களிலாவது முயற்சிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது. இந்நாட்டின் சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் பொறுப்பான பொலீசார் மீது பொது மக்கள் நம்பிக்கை இழக்கும் சூழ்நிலையானது, மிகவும் ஆபத்தானது என்பதினை பொலீசார் புரிந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது. அத்தோடு குறித்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் புவி ரஹ்மத்துல்லாஹ்விற்கு முழுமையான நீதி கிடைக்கும் வகையில் தமது கடமைகளை நிறைவேற்று வதற்கு காத்தான்குடி பொலீசார் முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்திக்கொள்கின்றது.
மேலும் பொதுமக்கள் வழங்கிய அதிகாரத்தை அம்மக்களின் குரல்களாக ஒலிக்கும் ஊடகவியலாளர்களின் குரல்களை நசுக்க நினைக்கும் அரசியல் வாதிகளின் இது போன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளையும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. அத்துடன் கருத்துக்களையும் விமர்சனங்களையும் நேருக்கு நேர் எதிர் கொள்கின்ற தைரியத்தினை இச்சம்பவத்தின் பின்னணியிலிருக்கும் அரசியல்வாதிகளுக்கு எல்லாம் வல்ல இறைவன் வழங்குவதோடு சகல விடயங்களிலும் நேர்மையாக நடந்து கொள்கின்ற வழி காட்டுதலும் இவர்களுக்கு கிடைக்க வேண்டும் என எமது இயக்கம் பிரார்த்திக்கின்றது.
அதாவது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனி நபர்கள் பெண்களுடன் படுக்கைகளை பகிர்ந்துகொள்ளும் விடயங்களை அம்பலப்படுத்துவதை வரவேட்பதுடன் கஞ்சா அடிப்பதை ஆதரிக்கிறது? புவியை மட்டும் அல்ல நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் அணைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினால் அவர்களின் இரத்தங்களில் உள்ள நிகோடின் கபின் தனின் போன்ற இரசாயனங்கள் எந்த வீதத்தில் கழந்து இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தலாம் 198 கிராம் கஞ்சாதான் 25 வருடகாலமாக 30 எஞ்சினியர்கள் 25 வைதியர்கள் 300 மேட்பட்ட பல் துறை பட்டதாரிகளின் பிரச்சாரங்களை எதிர்த்து அரசியலில் வீறு நடை போடும் ஹிஸ்புல்லாஹ் என்ற நரிக்கி பழிவாங்க கிடைத்த ஆயுதமா? புத்தி உள்ளவர்களே உங்கள் புத்திக்கி என்னாகிவிட்டது? காத்தான்குடிக்கி நேர்மையான எந்த ஊடகமும் வந்து புவி குறித்து கருத்து கேட்டால் விளங்கும் அங்குள்ள சமூக சமய தனி நபர் கருத்துகளில் 90 வீததிட்கு மேட்பட்டோர் புவியை வெறுத்து கருத்து உரைப்பது? உண்மைகளை உண்மையாக கூறாமல் அரசியல் செய்யும் வரை அநீதியை வெள்ளமுடியாது
ReplyDelete