மருமகளுக்கு சிறுநீரகத்தை தானம் அளித்த மாமியார்
மும்பையை சேர்ந்த வைஷாலி ஷாவுக்கு, 35, காய்ச்சல் காரணமாக இரு சிறுநீரகங்களும் பழுதுபட்டது. உடனடியாக, மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரின் கணவர், மணிஷ் மனம் உடைந்து போனார். அவரின் சிறுநீரகம் பொருந்தவில்லை. இதனால், அவர் மிகுந்த வருத்தம் அடைந்திருந்த நேரத்தில், வைஷாலியின், மாமியார் சுரேகா ஷா, 59, தன் சிறுநீரகத்தை, மருமகளுக்கு தானம் கொடுக்க முன்வந்தார்.
இதை கேட்டு, வைஷாலியும், அவரது குடும்பத்தாரும் திக்கித்து போயினர். கணவன், மனைவி, சகோதரர், சகோதரி என்ற உறவு நிலையில் தான் சிறுநீரக தானம் கொடுக்க முன்வருவர். ஆனால், மருமகளுக்கு, மாமியார் சிறுநீரகத்தை தானமாக கொடுக்க வந்தது, டாக்டர்களையே பிரமிப்பில் ஆழ்த்தியது. சிறுநீரகவியல் மருத்துவர்கள், சுரேகா ஷாவை பரிசோதித்து பார்த்தனர். அவரது சிறுநீரகம், வைஷாலிக்கு பொருத்தமாக இருக்கும் என, தெரியவந்தது. இதையடுத்து, கடந்த மாத இறுதியில் மும்பையில் அறுவை சிகிச்சை நடந்தது. இதில், வைஷாலிக்கு வெற்றிகரமாக மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. மருமகளும், மாமியாரும், சிகிச்சை முடிந்து சில நாள் ஓய்வுக்கு பின் இல்லம் திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து சுரேகா ஷா கூறுகையில், ''என் சிறுநீரகம், மருமகளுக்கு பொருந்தியதற்காக ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மருமகளுக்கு புது வாழ்க்கை கிடைத்துள்ளது. உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு, மக்கள் தயங்க கூடாது. உயிர்களை காப்பாற்ற முன்வர வேண்டும்,'' என்றார்.
புத்துயிர் பெற்றுள்ள வைஷாலி, பேசுவதற்கு வார்த்தை வராமல் கண்ணீர் மல்க,''எனக்கு உயிர் பிச்சை அளித்துள்ள, என் மாமியாரை தெய்வமாக பார்க்கிறேன். அவருக்கும், டாக்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்,'' என்றார்மாமியார் என்றாலே, வில்லியாக சித்தரிக்கப்படும் நிலையில், சுரேகா அந்த எண்ணத்தை மாற்றி, தன்னை போன்ற மாமியார்களுக்கு முன் உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்.
Post a Comment