Header Ads



சவூதி அரேபியாவில் எதியோப்பிய நாட்டினர் மீண்டும் போராட்டம் (வீடியோ)

(Inne)  சவூதி தலைநகர் ரியாத்தில் எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்தவர்களால் நேற்று நடத்தப்பட்ட திடீர் கலவரத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சவூதி நிதாக்கத் விதிப்படி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த சனியன்று சவூதி தலைநகர் ரியாத் மன்ஃபூஹாவில் சட்டமீறல் செய்யும் வெளிநாட்டவரைத் தேடி காவல்துறை மேற்கொண்ட சோதனையில் வன்முறை ஏற்பட்டதால், பலரும் படுகாயமுற்றனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்துபோனார். அப்போது பலர் கைது செய்யப்பட்டனர். எனினும் அப்பகுதி பரப்ரப்பாகவே காணப்பட்டது.

இந்த நிலையில் அப்பகுதியில் நேற்று (13.11.2013) புதன்கிழமை அன்று எத்தியோப்பிய நாட்டினர் மீண்டும்  திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கலவரம் உருவானது. அவ்வழியே  சென்ற வாகனங்கள் மற்றும் பொதுமக்களை அவர்கள் தாக்கத் தொடங்கினர். மேலும் அருகில் உள்ள கண்ணாடி கட்டிடங்கள் மீதும் கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் சில கட்டிடங்களும் சேதமடைந்தன. சிலர் வழிப்பறி கொள்ளையிலும் ஈடுபட்டனர்.

புதனன்று ஏற்பட்ட இப்புதிய வன்முறையில் சூடான் நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐந்து நாள்களில் இரண்டாம் முறை கலவரம் ஏற்பட்டது பற்றி ஆய்ந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான சட்டவிரோதக் குடியேறிகள் வாகனங்களில் செல்வோர் மீதும், பாதசாரிகள் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுவரை 23,000 எத்தியோப்பியர்கள் தாமாக முன்வந்து சரணடைந்துள்ளனர் என்றும் அவர்கள் பேருந்துகள் மூலமாகத் திருப்பி அனுப்பப்படுவர் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான பேருந்துகளில் அவர்கள் ஏற்றப்பட்டுள்ளனர். எனினும், முப்பது நாற்பது ஆண்டுகளாக தாய்நாடு பற்றியே அறியாமல் அயல்நாட்டில் பிறந்துவளர்ந்தவர்களை திருப்பியனுப்புவதில் அரசாங்கச் சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிகிறது. எந்தவித சட்ட ஆவணங்களும் இல்லாத இந்த எத்தியோப்பியர்கள் உள்ளிட்ட கிழக்கு ஆஃப்ரிக்க மக்கள் தினக்கூலிக்கு சவூதியின் மிகப்பெரும் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் அறிந்த சிறப்பு பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடம் விரைந்துவந்து கலவரக்காரர்களைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது காவல் படையினர் கலவரக்காரர்கள் மீது துப்பாகிச் சூடும் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக காவல்துறை அறிவித்திருப்பினும் ம்ன்ஃபூஹா பகுதி தொடர்ந்து பதற்றமாகவே காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



No comments

Powered by Blogger.