இலங்கையில் பிரித்தானியா மேற்கொண்ட போர்க்குற்றம் குறித்தும் விசாரணை வேண்டும்
இலங்கையில் 1818 ஆம் ஆண்டு பிரித்தானியா மேற்கொண்ட மாபெரும் போர்க்குற்றம் தொடர்பில் முதலில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரித்தானியர்கள் இலங்கையில் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் பற்றி அறியாததால் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் இலங்கையில் நடைபெற்ற போரில் நடக்காத குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்துமாறு கோருகிறாரா என கேள்வி எழுப்புகிறேன்.
இலங்கை மக்கள் 1818 ஆம் ஆண்டு மேற்கொண்ட சுதந்திரப் போராட்டத்தின் போது பிரித்தானியர்கள் இந்த நாட்டு மக்களை கண்மூடித்தனமாக கொலை செய்தனர். மேல் நாட்டு அரச பரம்பரையை கொன்றொழித்தனர். பௌத்த பிக்குகளை கொலை செய்தனர். பலன் தரும் மரஞ்செடி கொடிகளை வெட்டி அழித்தனர்.
நாட்டின் விவசாயத்தை அழித்தனர். பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தினர். வெள்ளையர்கள் இலங்கையில் இப்படியான பாரிய குற்றங்களை இழைத்தனர். அந்த காலத்தில் இலங்கையில் இருந்த அப்பாவி மக்கள் காடுகளிலும் குகைகளில் ஒழிந்து வாழ்ந்ததுடன் உண்ணவும் குடிக்கவும் இல்லாது மண்ணை உண்டு வாழ்ந்தனர்.
ஊவா வெல்லஸ்ஸ, சத்கோரளை, பின்தென்ன, ஹங்குராங்கெத்த, பதுளை, வெல்லவாய போன்ற பிரதேசங்களில் பிரித்தானியர் மிலேச்சத்தனமான அழிவுகளை செய்தனர். தமது ஆட்சிக்காலத்தில் செய்தவற்றை வெட்கமும் அருவருப்புமின்றி பேச முடியாது என்று பிரித்தானிய அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
இதனால் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் இலங்கையில் போர் காலத்தில் நடக்காத சம்பவங்கள் குறித்து சர்வதேச விசாரணையை கோருவதற்கு பதிலாக 1818 ஆம் ஆண்டு இலங்கையில் அவர்கள் மேற்கொண்ட மாபெரும் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தி இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றார்.
Post a Comment