சவூதி அரேபியாவில் மரணமடைந்த மூவரின் சடலங்களை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை
(Tm) சவூதி அரேபியாவில் தொழில் வாய்ப்புக்காக சென்று அங்கு மரணமடைந்த மட்டக்களப்பை சேர்ந்த மூவரின் சடலங்களை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சவூதிக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றவர்களில் மூவர் இயற்கை மரணமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்ததை அடுத்து அவர்களின் சடலங்களை கொண்டு வர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.
சவூதி அரேபியாவின் றியாத் நகரிலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு நாவற்காட்டைச் சேர்ந்த ஞானச்செல்வம் சிவரூபன் என்பவரின் சடலம் அப்ஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள கல்லடி, வேலூர் பிரதேசத்தைச் சேர்ந்த நாகமணி பத்மநாதன் என்பவரின் சடலம் மற்றும் ஜித்தாவிலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நற்பிட்டிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ரமணி ஆகியோரின் சடலங்களையே இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவற்றில், இருவரின் சடலங்கள் ஒரு மாதகாலமாகவும் மற்றொருவரின் சடலம் இரண்டு மாதகாலமாகவும் வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இச்சடலங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இலங்கையிலுள்ள வெளிநாட்டமைச்சு மற்றும் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதுவராலய அதிகாரிகளுடன் பேசி இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொன் செல்வராசா மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment