சோதனைகளில் நாய்கள் பயன்படுத்தப்படுவதை உலமா சபையும், சம்மேளனமும் கண்டிக்காதிருப்பது ஏன்..?
கடந்த மாதம் 31ம் திகதி 'வார உரைகல்' பத்திரிகையின் பிரதம ஆசிரியருடைய வீட்டில் கஞ்சா இருப்பதாகக் கூறி நாயுடன் சென்று சோதனை செய்த விவகாரத்தில் 'நாய்' பயன்;படுத்தப்பட்டிருப்பதால், அந்த நாயினுடைய பாகங்கள் பட்ட இடங்களையெல்லாம் ஆறு தடவைகள் தண்ணீரால் கழுவி ஒரு தடவை மண் சேர்த்துக் கழுவ வேண்டும் எனும் ஷரீஆச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிரமங்களைக் கருத்தில் எடுத்து, இப்பெரிய நகரிலுள்ள ஜம்இய்யதுல் உலமா சபையும், பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீ.ல.மு. காங்கிரஸின் ஊடகப் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி கேள்வி எழுப்பியுள்ளார்.
'வார உரைகல்' பிரதம ஆசிரியர் தனது வீட்டில் கஞ்சா எனும் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் காத்தான்குடி பொலீசாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் பற்றி அறிந்த அஷ்ஷெய்க் ஹனீபா மதனி, கடந்த 06ம் திகதி புதன்கிழமை காத்தான்குடியிலுள்ள பிரதம ஆசிரியரின் இல்லத்திற்கு நேரில் சென்று நடந்த விடயங்களைக் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். அவரது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காத்தான்குடி என்பது கிழக்கின் முதுபெரும் நகரமாகும். மட்டுமல்ல முழு இலங்கையிலும் அதிகூடிய முஸ்லிம் குடிமக்களைக் கொண்டுள்ள தனித்துவமான ஒரு இஸ்லாமியப் பிரதேசமுமாகும். இந்நகரத்தில் அமைந்துள்ள மசூதிகள் அளவில் பெரிதாக இருப்பது மட்டுமல்லாது இஸ்லாமியக் கட்டிடக் கலையம்சங்கள் நிறைந்ததாகவும் காட்சியளிக்கின்றன.
அறபு மொழியும், இஸ்லாமியக் கற்கை நெறிகளும் இங்குள்ள பல்வேறு இஸ்லாமிய நிறுவனங்களினூடாக திறன்பட போதிக்கப்படுகின்றன.
இலங்கையிலுள்ள உலமா சபைகளில் மிகப் பெரும்பான்மையான உலமா அங்கத்தவர்களைக் கொண்ட ஜம்இய்யதுல் உலமாவும் இப்பதியில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
தென்னிந்தியாவின் காயல்பட்டினத்திற்கு நிகரான இஸ்லாமிய விழுமியங்களும், கலாசாரப் பண்பாடுகளும் இந்த மண்ணில்தான் இன்றளவும் பிரகாசிப்பதாகவும் தெரிகின்றது.
இவ்வாறான அரும்பெரும் இஸ்லாமியப் பொக்கிஷங்களை எல்லாம் தன்னகத்தே கொண்டுள்ள இந்நகரில், தற்போதைய ஈமானிய நடவடிக்கைகள் உண்மையாகவே தாக்கம் செலுத்துகின்றனவா? அல்லது எல்லாமே வெறும் சடங்குகளாகவும், சம்பிரதாயங்களாகவும், வியாபாரங்களாகவும் மாறியிருக்கின்றனவா? என்ற வினாவுக்கு விடை தேட வேண்டிய பொறுப்பு இந்நகரிலுள்ள அனைவர் மீதும் கடமையாகி விட்டது.
உண்மைகளை வெளியிடும் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் மிலேச்சத்தனமாகத் தாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும், பழிவாங்கப்படுவதும்,
பத்திரிகைகள் பற்க்கப்படுவதும், நெருப்பு வைத்து எரிக்கப்படுவதும் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலான மிகப் பெரிய குற்றங்களாக இருக்கின்ற நிலையில் இந்நகரிலுள்ள இஸ்லாமிய நிலையங்களும், ஜம்இய்யதுல் உலமா சபையும், பள்ளிவாசல்கள் சம்மேளனமும் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாது மௌனித்திருப்பது மிக வேதனை தரும் விடயமாகும்.
நீதிக்கும், நேர்மைக்குமாகக் குரல் கொடுப்பதனை முடக்கவும், அநீதியான அரசியல் அதிகாரங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்குமாக இவ்வாறெல்லாம் மௌனம் காப்பதும், துணை போவதும் இஸ்லாமிய நடைமுறையல்ல என்பதனை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் உலமாப் பெருமக்களும், பள்ளிவாசல்கள் சம்மேளனமும் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும்.
கடந்த 31ம் திகதி 'வார உரைகல்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி றஹ்மதுல்லாஹ்வுடைய வீட்டுக்கு காத்தான்குடிப் பொலீசார் நாயுடன் சென்று சோதனை செய்த விவகாரத்தில் 'நாய்' ஒன்றும் பயன்படுத்தப்பட்டிருப்பதால், அந்த நாயின் பாகங்கள் பட்ட இடங்களையெல்லாம் ஆறு தடவைகள் நீரால் கழுவி ஒரு தடவை மண் சேர்த்துக் கழுவ வேண்டும் எனும் ஷரீஆச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு இப்பெரிய முஸ்லிம் நகரிலுள்ள ஜம்இய்யதுல் உலமா சபையும், பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் ஏன் இவ்வாறான தேடுதல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கண்டனம் தெரிவிக்கவில்லை?
இந்த நகரத்தை முழுமையான இஸ்லாமிய நகரமாக மாற்றுவதற்கு அயராது பாடுபட்டு முயற்சித்து வரும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் இவ்வாறு நாய்களை முஸ்லிம்களின் வீடுகளுக்குள் கொண்டு வந்து தேடுதல் நடத்தும் நடைமுறையைத் தடுத்து நிறுத்துமாறு ஏன் கோரிக்கை விடுக்கவில்லை?
'வார உரைகல்' பிரதம ஆசிரியரின் மீதும், அவரது பத்திரிகை அலுவலகத்தின் மீதும் ஏற்கனவே பல தடவைகளில் பலவகையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. அவையனைத்திலும் இறுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மோசமான குற்றச்சாட்டுடன் கூடிய தாக்குதலும், பழிவாங்கலும் மிகவும் கேவலமான ஒரு நடவடிக்கையாகும் என்பதுடன், இவ்வாறான தாக்குதல்களையும், அரசியல் பழிவாங்கல்களையும் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அஷ்ஷெய்க் ஹனீபா மதனி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மோப்ப நாய்கள் பயன்படுத்தப் படுவது உலகளாவிய நடைமுறை. அதனை மாற்ற முடியாது.
ReplyDeleteஎனினும், புவி ரஹ்மத்துல்லாஹ் விவகாரம் ஒரு அரசியல் வாதியின் தனிபப்ட்ட பழிவாங்கல் ஆகும்.