Header Ads



ஈரானின் அமைதிப் பேச்சு, சுமுகமாக முடியவில்லையென்றால் யுத்தம்தான் தீர்வாக இருக்கமுடியும்

லெபனானைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஷியா இஸ்லாமியப் பிரிவின் புரட்சி இயக்கம் ஹெஸ்பொல்லா ஆகும். பெரும்பான்மையான அராபிய மற்றும் முஸ்லிம் நாடுகளில் இந்த இயக்கம் செயல்பட்டு வருகின்றது. அமெரிக்கா, வளைகுடா நாடுகள் கவுன்சில், ஐ.நா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இதனைத் தீவிரவாத இயக்கமாக கருதுகின்றன. இந்த இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆவார்.

பரம எதிரியான இஸ்ரேலினால் தான் கொலை செய்யப்படுவோம் என்ற பயம் காரணமாகப் பொதுவாக வீடியோ மூலமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் நஸ்ரல்லா நேற்று பொது மேடை ஒன்றில் நேரிடையாகத் தோன்றினார். ஹெஸ்பொல்லாவினரின் கோட்டையாகக் கருதப்படும் தெற்கு பெய்ரூட்டில் ஷியா பிரிவினரின் அஷுரா விடுமுறை குறித்த பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசினார். அப்போது ஈரானின் அமைதிப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியவில்லை என்றால் யுத்தம்தான் தீர்வாக இருக்கமுடியும் என்று வல்லரசு ஆடுகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

சென்ற வாரம் உலக வல்லரசு நாடுகள் ஜெனிவாவில் ஈரானுடன் அந்நாட்டின் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொண்டன. இதில் ஏற்படும் முன்னேற்றம் பொறுத்து ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த உலக பொருளாதாரத் தடைகளும் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், இந்தப் பேச்சுவார்த்தை எந்த குறிப்பிடத்தக்க முடிவும் இன்றி அடுத்த கட்டத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈரான் பலமுறை மறுத்தபோதிலும், இஸ்ரேல் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஈரானின் ஆணு ஆயுத உற்பத்தி குறித்த சந்தேகத்தில் உள்ளன.

இதனைக் குறிப்பிட்ட நஸ்ரல்லா, இஸ்ரேல் சில அரபு நாடுகளின் செய்தித் தொடர்பாளராகச் செயல்படுகின்றது என்றார். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆதரவு காட்டும் சவுதி அரேபியா மற்றும் கத்தார் நாடுகளை இது நேரிடையாக குறிப்பிட்டது. சிரியாவில் அரசியல் தீர்வு ஏற்படுவதை இந்த நாடுகள் தடுக்கின்றன. அதுபோல் ஈரானுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையே ஏற்படவிருக்கும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் இந்த நாடுகள் எதிர்க்கின்றன. இந்த நிலை நீடித்தால் இதற்கு ஒரே தீர்வு போராகத்தான் இருக்கமுடியும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். மேலும், ஈரான் மற்றும் சிரியாவின் நட்பு கூட்டணி என்றும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.