அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்த வேண்டும் - தெஹ்ரீக்-இ-இன்ஸாஃப் கட்சி
பாகிஸ்தானின் இறையாண்மையைச் சீர்குலைக்க முயலும், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்த வேண்டும் என்று அந்நாட்டு அரசை எதிர்க்கட்சியான தெஹ்ரீக்-இ-இன்ஸாஃப் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தெஹ்ரீக்-இ-இன்ஸாஃப் கட்சியைச் சேர்ந்த ஷிரீன் மஸாரி கூறும்போது, ""அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதன் மூலம், பாகிஸ்தானின் இறையாண்மையில் அமெரிக்கா தலையிடுவதை நாம் விரும்பவில்லை என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்த முடியும்'' என்றார்.
இதுகுறித்து அதே கட்சியின் எம்பியான தரிகுல்லா தெரிவிக்கையில், ""அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தும் அனைத்து தகுதிகளையும் பாகிஸ்தான் ராணுவம் பெற்றுள்ளது. இதற்கான ஆணையை அரசு பிறப்பித்திருந்தால், அதனை நிறைவேற்றியிருப்போம் என்று ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்'' என்று குறிப்பிட்டார்.
இருந்தபோதிலும், அமெரிக்காவுடனான மோதல் போக்குகளை அரசு குறைத்துக் கொள்வதன் மூலம், தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று சில எம்பிக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் (அக்டோபர்) 23-ஆம் தேதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தது
குறிப்பிடத்தக்கது.
Post a Comment