மாணவர், மாணவிகளின் வாழ்வில் பேஸ்புக் ஏற்படுத்தும் பாதிப்பு (உண்மைச் சம்பவம்)
பேஸ்புக்கில் பழகிய நண்பர் காதலித்து பலாத்காரம் செய்த பின் கைவிட்டதால், 9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டாள். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஷிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பேஸ் புக் பிரியை. கடந்த செப்டம்பர் மாதம் பி.காம் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர் எம்.மனோஜ்குமார் என்பவர், தன்னை நண்பராக ஏற்கும்படி பேஸ் புக்கில் ஷிகாவிடம் கேட்டிருந்தார்.
அதை ஷிகா ஏற்றார். இருவரும் பேஸ் புக் மூலம் தொடர்பு கொண்டு மணிக்கணக்கில் பொழுதை கழித்தனர். ஹாலிவுட் ஹீரோக்கள் பாணியில் தனக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட முடியும், ரேஸ் கார்களை ஓட்ட முடியும் என்று ரீல் விட்டு ஷிகாவை தன் வலையில் வீழ்த்தினார் மனோஜ்குமார். பின்னர் அவரை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.
அந்த அழைப்பை ஏற்று நந்தினி லே அவுட் பகுதியில் உள்ள மனோஜ்குமார் வீட்டுக்கு ஷிகா சென்றாள். சிறுமியிடம் நைசாக பேசி வசீகரித்த மனோஜ்குமார், தனது ஆசைக்கு இணங்கும்படி கூறி பலாத்காரம் செய்தார். பின்னர் உனது தோழிகளின் பேஸ் புக் முகவரி, செல்போன் நம்பர்களை எனக்கு கொடு என்று மனோஜ்குமார் வற்புறுத்தினார்.
தன்னை எப்படியும் திருமணம் செய்து கொள்வார் என்று எண்ணிய ஷிகா அவர் கேட்டபடி எல்லாவற்றையும் செய்தார். திருமணம் பற்றி பேசிய போது, ‘நாம் பழகியதெல்லாம் ஒரு ஜாலிக்காகத்தான். இதை சீரியசாக எடுத்து கொள்ளாதேஎன்று தட்டி கழித்துள்ளார். பேஸ் புக் மூலம் பேசுவதையும் நிறுத்தி கொண்டார். இதனால் ஷிகா அதிர்ச்சி அடைந்தாள். கடந்த செவ்வாய்க்கிழமை பெற்றோர் வேலைக்கு சென்றதும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாள். மாலையில் வீடு திரும்பிய தாய், கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்ததால் தட்டி பார்த்தார்.
கதவு திறக்காததால் உடனடியாக தனது கணவருக்கு போன் செய்து வரவழைத்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டாரும் திரண்டனர். கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது ஷிகா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து பெற்றோரிடம் விசாரித்த போது அவர்களுக்கு காதல் விவகாரம் பற்றி எதுவும் தெரியவில்லை.
படிப்பில் மந்தமாக இருந்ததால் மகள் மன உளைச்சலில் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். போலீசார் வீட்டை சோதனையிட்ட போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஷிகா எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதில், மனோஜ்குமார் தன்னை ஏமாற்றிய விவரம் குறித்தும், பலாத்காரம் செய்தது பற்றியும் குறிப்பிட்டிருந்தாள். தனது தற்கொலைக்கு அவர்தான் காரணம் என எழுதி இருந்தாள். இதையடுத்து மனோஜ்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment