Header Ads



சவூதி அரேபியாவில் ஒரேநாளில் 4915 பேர் பிடிபட்டனர்

(inne) 2013  அல்லது துல்ஹஜ் 1434 உடன் சவூதி அரசு அளித்திருந்த பொதுமன்னிப்புக் காலம் முடிவடைந்ததையடுத்து, சட்ட மீறலாகத்தங்கியுள்ள வெளிநாட்டவரைப் பிடிக்கும் பணியை சவூதி காவல்துறை முன்னெடுத்துள்ளது.

நேற்று ஒரே நாளில் ஜெத்தா நகரில் மட்டுமே 4915 பேர் பிடிபட்டுள்ளதாக சவூதியிலுள்ள அரபு நாளேட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயினும் சவூதி கெஸட் போன்ற ஆங்கில நாளேடுகளில் 1899 பேர் கைது என்றுகூறப்பட்டுள்ளது. எனினும் தலைநகர் அர்ரியாத் நகரில் சோதனைகள், கைதுகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

நான்கு மற்றும் ஆறு மாதங்கள், ஆக.. பத்து மாதங்களாக அளிக்கப்பட்டு வந்த பொதுமன்னிப்பு மேலும் நீட்டிக்கப்படும் என்று வந்த செய்திகள் பொய்த்துப்போயின. பொது மன்னிப்புக் காலத்தைத் தாண்டியும் சட்டமீறலாகத் தங்கியிருப்பவர்கள் பிடிபட்டால் அவை குற்ற வழக்காகக் கருதப்பட்டு இரண்டாண்டு காலம் வரை சிறைத்தண்டனையும் இலட்சம் சவூதிரியால்கள் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது நினைவு கூரத்தக்கது.

சவூதி அரேபியாவின் பிரதான நகரங்களான ஜெத்தா, அர்ரியாத், அத்தமாம் நகர சாலைகளில் வெளிநாட்டவர் போக்குவரத்துக் குறைந்து காணப்படுகிறது. பல நிறுவனங்களும், ஆவணங்களைச் சரிப்படுத்திக் கொள்ள இயலாமற் போன பணியாளர்கள் எவரும் சோதனையைத் தவிர்க்கும்பொருட்டு பணிக்கு வராதிருக்கப் பணித்துள்ளன. சவூதி அரேபியாவின் வணிகச் சந்தைகளிலும் கூட்டமின்றி காணப்படுகிறது. இதற்கிடையே, சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சகத்தின் பெண் ஆய்வாளர்களை வைத்து வீடு வீடாகச் சோதனை நடத்தப்படும் என்று சொல்லப்பட்ட செய்தியை அந்த அமைச்சக அதிகாரிகள் அழுத்தமாக மறுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.