Header Ads



ஜனாதிபதி பிறந்த மாவட்டத்தில் 28 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச மாநாட்டு மண்டபம் (படங்கள்)


அம்பாந்தோட்டை மாகம ருஹுணுபுரவில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச மாநாட்டு மத்திய நிலையம் (MRICH) நேற்று (07) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

28 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச மாநாட்டு மத்திய நிலையம் இலங்கையின் இரண்டாவது மாநாட்டு மத்திய நிலையமாகும். இதில் நடைபெறும் முதலாவது சர்வதேச மாநாடு- பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை இம்மாநாட்டு மத்திய நிலையத்தில் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

கொரிய சர்வதேச கூட்டுத்தாபனத்துடன் நகர அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து நிர்மாணித்துள்ள இந்த மாநாட்டு மண்டபத்தின் கட்டுமானச் செலவு சுமார் 15.3 அமெரிக்க டொலர் என கணிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிரதான மண்டபம் 1500 இருக்கைகளைக் கொண்டது. இதுதவிர 250 இருக்கைகளைக் கொண்ட 3 மண்டபங்களுடன் அதி நவீன தொழில்நுடபத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச மாநாட்டு மத்தியநிலையத்தில் ஒரே தடவையில் 670 கார்கள், 12 பஸ்கள், 245 மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை நிறுத்தும் வசதிகள் காணப்படுகின்றன.

சர்வதேச மாநாட்டு மத்திய நிலைய திறப்பு விழாவிற்கு சித்துல்பவுவ ரஜமஹா விகாரை பீடாதிபதி வணக்கத்துக்கரிய மெதரம்ப ஹேமரத்ன தேரர்- இலங்கைக்கான கொரிய தூதுவர் ஜொனக்மூன் சொய், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அமைச்சர் மஹிந்த அமரவீர, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட பலர் கலந்துகொண்டனர்.



No comments

Powered by Blogger.