2 கட்டிடங்களுக்கு இடையில் சிக்கிய மாணவன் - 2 நாட்களுக்கு பின் மீட்பு
அமெரிக்காவில் 2 கட்டிடங்களுக்கு இடையில் சிக்கிய கல்லூரி மாணவர் மீட்கப்பட்டார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பல்கலை கழகத்தில் படித்து வரும் மாணவர் ஆஷர் வொங்க்தாவ் (19). இரண்டு நாட்களுக்கு முன்பு வகுப்புக்கு சென்ற ஆஷர் வீடு திரும்பவில்லை. அவரது தாய் பல்வேறு இடங்களில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. வகுப்பு தோழர்களிடம் விசாரித்த போது மாலையில் வகுப்பு முடிந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து ஆஷர் காணாமல் போனது குறித்து நியூயார்க் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மறுநாள் ஞாயிற்று கிழமை என்பதால் பல்கலை கழகம் விடுமுறை.
திங்கட்கிழமை காலை வழக்கம் போல் வகுப்புக்கு வந்த மாணவர்கள், மாடியின் உச்சியில் இருந்து பார்த்த போது 2 கட்டிடங்களுக்கு நடுவே சுமார் 24 அங்குல இடைவெளியில் ஆஷர் வொங்க்தாவ் சிக்கி கிடப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசாருக் கும், மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு படையினர் பார்த்தனர். அங்கு ஆட்கள் செல்ல முடியாத அளவுக்கு 2 கட்டிடங்களுக்கு இடையில் ஆஷர் சிக்கியிருப்பதை பார்த்தனர்.
பின்னர் 2வது மாடியில் இருந்து விழுந்து சிக்கியுள்ள இடத்துக்கு ஒரு அடி மேலே சுவரில் துளையிட்டு ஆஷரை மீட்டனர். எதிர்பாராத விதமாக 2வது மாடியில் இருந்து விழுந்த ஆஷருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதில் மயங்கியதால் சத்தம் போடவில்லை. மீட்கப்பட்ட மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Post a Comment