செல்வங்களில் மிகச் சிறந்த செல்வமே குழந்தைச் செல்வம் - பகுதி - 1
(வெலிகம - மூஆஸ் ஸித்தீக்)
இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கும் செல்வங்களில் மிகச் சிறந்த செல்வமே குழந்தைச் செல்வம். குழந்தைகள் இன்றி தனிமையில் வாழும் தம்பதிகளிடம் வினவிப் பார்த்தால் அதை அறிந்துகொள்ளலாம். எனினும் குழந்தைப் பாக்கியமற்றவர்கள் தமக்கொரு குழந்தை கிடைக்கவில்லையே என்று ஏங்கித் தவிக்காது அல்லாஹ்வின் விதி எனக்கு நன்மையாகவே இருக்கும் என பொறுமை செய்து கொள்ளல் வேண்டும். அளவிலா அன்போடும், அரவணைப்போடும் வளர்க்கப்பட்ட எத்தனையோ குழந்தைகள் வாலிப வயதை அடைந்த பின் தான் கொண்ட காதலுக்காக, தன் மனைவிக்காக, அற்ப விடயங்களுக்காக பெற்றோரைப் பகைத்துக்கொள்வதனையும், வீட்டை விட்டும் துறத்துவதையும், உள்ளம் புண்படும் கரடுமுரடான வார்த்தைகளால் ஏசுவதையும், சிலவேளை அடிப்பதையும், (மாற்று மதங்களில்) கொலைகூடச் செய்து விடுவதனையும் பலமுறை கேள்விப்பட்டுள்ளோமல்லவா! அக்குழந்தைகள் பெற்றோருக்கு பயனளிக்கவில்லையே.
''வானங்கள், பூமியின் ஆட்சி ஆல்லாஹ்வுக்கே சொந்தமானது. அவன் நாடியதைப் படைக்கின்றான். சிலருக்கு பெண் குழந்கைளைக் கொடுக்கின்றான், வேறு சிலருக்கு ஆண் குழந்தைகளையே கொடுக்கின்றான்., மற்றும் சிலருக்கு ஆண், பெண் குழந்தைகளைக் கலந்தும் கொடுக்கின்றான், இன்னொரு சாராரை குழந்தைப் பாக்கியமற்றவர்களாக வைத்துவிடுகின்றான். அவனே மிக அறிந்தவனும், வல்லமை கொண்டவனுமாகும்'' (அஷ்ஷூரா: 49-50)
''நீங்கள் ஒரு விடயத்தை வெறுப்பீர்கள், அது உங்களுக்கு நன்மையுள்ளதாக இருக்கும். நீங்கள் ஒரு விடயத்தை விரும்புவீர்கள், அது உங்களுக்குத் தீயதாக இருக்கும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன், நீங்கள் அறியமாட்டீர்கள்". (அல் பகரா:216)
11 மனைவியருடன் வாழ்க்கை நடாத்திய நமது உயிரிலும் மேலான உத்தமத் தூதர் (ஸல்) அவர்களைப் பாருங்கள். விதவைப் பெண்ணாக மணமுடித்த கதீஜா (ரழி) அவர்களைத் தவிர்ந்த 10 மனைவியருக்கும் குழந்தையே கிடைக்கவில்லையே.
குழந்தைக்கான அத்திவாரம்:
தம்பதியினர் தமக்கொரு குழந்தை வேண்டும் என்ற கற்பனையோடு களமிறங்கும் பொழுதே இறைவனிடம் பாதுகாப்பை வேண்ட வேண்டும் என இஸ்லாம் பணிக்கிறது.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்: உங்களில் ஒருவர் தன் மனைவியிடம் (உறவுகொள்ளச்) சென்று ''பிஸ்மில்லாஹ், அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வஜன்னிபிஷ் ஷைத்தான மா ரதக்தனா'' (பொருள்: அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு….. இறைவா! ஷைத்தானை எம்மை விட்டும் தூரப்படுத்திடுவாயாக, எமக்கு நீ அளிக்கும் சந்ததியிலும் ஷைத்தானைத் தூரப்படுத்திடுவாயாக.) என ஓதி, அதன் மூலம் இறைவன் குழந்தைப் பாக்கியமளித்தால் ஒருபோதும் அக்குழந்தையை ஷைத்தான் தீண்டமாட்டான். (புகாரி, முஸ்லிம்)
உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியிடம் சிறந்தவரே
இறைவனருளால் மனைவியின் கற்பத்தில் குழந்தை தரித்துள்ளது என அறிந்தால், கணவன் மனைவிக்கு முடிந்தளவு ஒத்துழைப்பும், உதவியும் வழங்கவேண்டும்.
குழந்தை கிடைத்த நாளிலிருந்து பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் மனைவியைப் பற்றி சில கணவன்மார் பொருட்படுத்துவதில்லை. தன் மனைவிக்கு தன்னின் மூலமாகக் குழந்தை தரித்துள்ளதே என சிந்திப்பதில்லை.
9 மாதங்கள் தன் வயிற்றில் குழந்தையைச் சுமக்கும் ஒரு தாய் அன்றாட சுக போகங்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிடுகின்றாள். மனவிருப்பத்தோடு உண்ணவோ, பருகவோ முடிவதில்லை. நிம்மதியாகத் தூங்க முடிவதில்லை. பயணங்களை ரத்துச் செய்துவிடுகின்றாள். அடிக்கடி வாந்தி எடுப்பதும், மயங்கி விழுவதும்...... என எத்தனையோ. இவ்வாறான சந்தர்ப்பங்களில் நன்மனம் படைத்த கணவனாக இருந்தால், தமது அன்றாட நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். வழமையாக மனைவி செய்யும் சில வேலைகளையாவது தான் செய்து ஒத்துழைக்க வேண்டும். வீட்டைச் சுத்தம் செய்தல், உடைகளைத் துவைத்தல், அயன் பன்னல் போன்ற சிறிய வேலைகளை தமது பொறுப்பிற்கு மாற்றிக்கொள்ளலாம். தமக்குரிய வேலைகளில் ஏதேனும் குறைகளைச் செய்து விட்டால் சீரிப் பாயாமல் பொறுமை செய்ய வேண்டும். இவைகள் கணவன், மனைவிக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பையும், பண்பையும் வளர்க்கும் செயல்களாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியிடம் சிறந்தவரே. நான் எனது மனைவிமார்களிடம் சிறந்தவனாவேன்'' (திர்மிதி)
மேலும், இவ்வாறான சூழ்நிலையில் கணவன் தன்னோடு இணைந்திருப்பதையே மனைவியர்களில் அதிகமானவர்கள் விரும்புவர். அது பெண்ணின் இயல்பு. அதிலும் விஷேசமாக தனிக் குடும்பமாக இருந்தால் அவ்விடயத்தில் கணவன் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
(தொடரும்)
Post a Comment