பிலிப்பைன்ஸை தாக்கிய 'ஹையான்' - 10 இலட்சம் மக்கள் வெளியேற்றம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் சமர் தீவு உள்ளது. இது தலைநகர் மணிலாவில் இருந்து தென் கிழக்கில் 600 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த தீவை 'ஹையான்' என்ற புயல் நெருங்கி வந்து மிரட்டிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் இந்த புயல் பிலிப்பைன்ஸ் நேரப்படி இன்று அதிகாலை 4.40 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்று இரவு 8.40-க்கு) கடுமையாக தாக்கியது.
இதனால் மணிக்கு 185 கி.மீட்டர் வேகத்தில் கடுமையான சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்புகளும் துண்டானது. இதனால் டெலிபோன் மற்றும் செல்போன்கள் இயங்கவில்லை. சமர் தீவில் தங்கியிருந்த சுமார் 10 லட்சம் மக்கள் புயல் பாதித்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் காரணமாக விமான போக்குவரத்தும், கப்பல் மற்றும் படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் சுமார் 5 ஆயிரம் பேர் சிக்கி கொண்டனர்.
இந்தப் புயல் தாக்குதலில் சமர் தீவில் வடக்கு லூஷான் பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு தான் கடந்த 2011–ம் ஆண்டில் கடும் புயல் தாக்கியது. கடந்த மாதம் 7.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 222 பேர் பலியாகினர். பல வரலாற்று சிறப்புமிக்க கிறிஸ்தவ தேவாலயங்களும், பாலங்களும் இடிந்தன. ரோடுகள் சேதமடைந்தன.
புயல் தாக்கிய பகுதிகளில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னேர் அகினோ உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment