தரம் 1 மாணவர் அனுமதியின் போதான பண அறவீட்டுக் கலாசாரத்தை ஒழிப்போம்
(அபூதனா)
கடந்த ஒக்டோபர் 1 ம் திகதி சர்வதேச சிறுவர் தினமாகும்.உலகம் முழுதும் இத்தினம் விமரிசையாகக் கொண்டாடப் பட்டது.எமது நாட்டில் இது தொடர்பான கலை நிகழ்வுகள்,பொதுக்கூட்டங்கள்,விழிப்புணர்வு ஊர்வலங்கள் யாவும் நடைபெற்றதை இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.இவ் ஊர்வலங்களில் கொண்டு செல்லப்பட்ட சுலோகங்களின் பால் எனது கவனம் ஈர்க்கப்படுகிறது.
கல்வி சிறுவர்களின் அடிப்படை உரிமை.....
எமது கல்வியைத் தடை செய்யாதீர்......
(.சின்னஞ் சிறுவர்கள்)
படிப்பது இராமாயணம் இடிப்பது இராமர் கோயில்
கல்வி, என்பது சிறுவர்களின் அடிப்படை உரிமை. இதில் கைவைப்பது போல தரம் ஒன்றுக்கு மாணவர்களைச் சேர்க்கும்போது பச்சிளம் பாலகர்களின் கல்வியைப் பணயம் வைத்துக் கொண்டு , பாடசாலையில் சேர்வதென்றால் குறிப்பிட்ட ரூபாய்கள், டொனேசன் தரப்பட வேண்டுமென ,பாடசாலை அதிபர்கள் கோருகின்றனர்.இத்தொகை 5000.00 ---தொடக்கம் 100000 .00 ரூபாய்கள் வரை அறவிடப்படுகிறது. இதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கல்வி அமைச்சின் சுற்று நிருபம் கூறுகிறது.{வசதிகள் சேவைக் கட்டணத்தைத் தவிர்ந்த வேறு எந்த பண அறவீடும் செய்வது தண்டனைக்குரிய குற்றமென்று.மேலும் வசதி குறைந்த பிள்ளைகளுக்கு வசதிக் கட்டணத்தில் சலுகைகளும் உள்ளன.
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. திட்டம் போட்டு திருடுர கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.
வருடாவருடம் இலட்சக்கணக்கான பணத்தைத் திரட்டும் சீசனாக தரம் 1 இற்கான அனுமதிக்காலப் பகுதி விளங்குகின்றது.இவ்வளவு பெரும் பணத்தொகையை செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழைப்பெற்றோரைப்பற்றி யாராவது,கவலைப்படுகிறோமா? சமுர்த்தி பெறும் குடும்பத்தினரின் நிலைமையை அறிந்து குடிநீர் இணைப்புக்காக சலுகை வழங்கப்படும் போது. ஏன் சமுர்த்திக் குடும்பங்களின் பிள்ளைகளை பணம் அறவிடாமல் பாடசாலைகளில் அனுமதிக்க முடியாது.
பாடசாலைகள் டொனேசன் பெறும் தந்திரோபாய வழிமுறைகள்
1.நேரடியாகப் பணத்தைப்பெறல்
2.பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களைப் பயன்படுத்தி பணம் அறவிடல்
3.பாடசாலையால் வழங்கப்படும் வங்கிக் கணக்கில் நாம் சொல்லும் பணத்தொகையை வைப்பிலிட்டுவிட்டு நகல் வைப்புச்சீட்டுடன் பாடசாலைக்கு அனுமதிக்கான பிள்ளையுடன் வருமாறு வற்புறுத்தல்(இது நியாயமா?)
4.சில தளபாடங்களை வாங்கித் தருமாறு வற்புறுத்தல்
5.தனிப்பட்ட சலுகைகளையும்.உதவிகளையும் எதிர்பார்த்தல்
6.பாலியல் இரீதியான இலஞ்சங்களை மறைமுகமாகப் பெறல்
இலங்கையில் இலஞ்ச ஊழல் மலிந்த துறையாக கல்வித்துறை திகழ்வதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகிறது.அரசியல் வாதிகளின் செல்வாக்கு தன்னிடம் இருப்பதால் தன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாதென சிலர் மனப்பால் குடிக்கின்றனர்.
இலஞ்ச ஊழலில் ஈடுபடுவோருக்கு மகிந்த அரசில் புகலிடமில்லை.விரைவில் அவர்கள் இலஞ்ச ஊழல் பிரிவினரின் மாய வலையில் அகப்படுவார்கள்.முறைப்பாடு கிடைக்கும் பிரதேசத்தில் முகாமிட்டு குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தும் பணியை ஆணைக்குழு விரைவில் முடுக்கிவிட வேண்டும்.
சில பாடசாலைகள் தரம் 1 இற்கான விண்ணப்பப் படிவத்துடனேயே டொனேசன் பணத்தைப் பெற்றுவிட்டனர்.மேலும் பல பாடசாலைகள் மாணவர் அனுமதியின் போது பணம் அறவிட காத்துக்கிடக்கின்றனர்.
பாடசாலை அதிபர்களின் வாதம் பாடசாலையைக் கொண்டு நடாத்த அதிக பணம் தேவைப்படுகிறது.இதை எப்படி நாம் ஈடுசெய்வது .இதற்காகத்தான் நாம் தரம் ஒன்று அனுமதியின் போது பணம் அறவிடுகிறோம்.இதில் என்ன? பிழை இருக்கிறது.நாம் இப்பணத்தை பாடசாலை அபிவிருத்திக்குத்தானே பாவிக்கிறோம்.
உங்கள் வாதம் இதுவென்றால் அரசிடம் தைரியமாக எழுத்துமூலமாக முன்வைத்து ஒரு சுற்று நிருபத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் .
இதைத் தடுப்பதற்கு பின் வருவோர் தமது தீவிர கவனத்தைச் செலுத்துவது.சிறந்த பலனைத் தரும்.
1.கல்வி அமைச்சர்
2.மாகாண ஆளுனர்கள்
3.மாகாண கல்வி அமைச்சர்கள்.
4.மாகாணக் கல்விப்பணிப்பாளர்கள்
5.வலயக் கல்விப் பணிப்பாளர்கள்
6.பிரதேச நீதவான்கள்
7.மனிதவுரிமை ஆர்வலர்கள்
8.சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள்
9.இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர்
10.ட்ரான்ஸ்பெரன்சி இன்டநெஷனல் நிறுவனத்தினர்
11.பிரதேச பொலிஸ் அதிகாரிகள்
12.கிராம அதிகாரி;கள்
13.சமுர்த்தி அதிகாரிகள்
14.அரச சார்பற்ற அமைப்புக்கள்
15.ஊடகவியலாளர்கள்
16.சக்தி,வசந்தம்,சிரச,ஹிறு போன்ற தொலைக்காட்சிகள்
குறிப்பு....பாடசாலை அபிவிருத்திக்குப் பணம் தேவையென்றால் எஸ்.டி.சி. ஐக்கூட்டி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பெற்றோரின் விருப்பத்துடன் சட்டரீதியாகப் பணத்தைத் திரட்டிக்கொள்ளலாமே. தரம் 01 அனுமதியின் போதான பணஅறவீட்டு(டொனேசன்)கலாசாரத்தை ஒழிப்போம். இது ஒரு அறப்போராட்டம் அனைவரும் திரண்டு எழுவீர்.
Post a Comment