O/L முன்னோடிப் பரீட்சையை நவராத்திரிக்கு பின் நடாத்துவது குறித்து பரிசீலிக்கலாம் - கல்விப் பணிப்பாளர் நிஸாம்
வலயக் கல்விப் பணிப்பாளர்களினூடாக அவர்களின் விதந்துரைப்புடன் எமக்கு கோரிக்கை முன் வைக்கப்படுமாயின் க.பொ.த சாதாரண தர முன்னோடிப் பரீட்சையை நவராத்திரி பூசைக்கு பின்னான திகதிக்கு மாற்றுதல் தொடர்பில் பரிசீலிக்க முடியுமென்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், க.பொ.த சாதாரண தர முன்னோடிப் பரீட்சையை நவராத்திரி பூசைக்கு பின்னான திகதிக்கு மாற்றுமாறு இந்து அமைப்புக்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தர முன்னோடிப் பரீட்சையை நவராத்திரி பூசைக்கு பின்னான திகதிக்கு மாற்றுமாறு மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம், மட்டக்களப்பு – அம்பாரை மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம் ஆகிய மாகாண கல்விப் பணிப்பாளருக்கு விடுத்த கோரிக்கைக்கு பதில் அளிக்கும் முகமாக அந்த அமைப்புக்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தத்திலேயே மேற்படி கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
க.பொ.த சாதாரண தர முன்னோடிப் பரீட்சை தொடர்பாக மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே உரிய வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டு, முன்னோடிப் பரீட்சைக்கான இறுதிக் கட்ட வேலைகளும் முடிவடைந்துள்ளன.
இது பற்றி வலயக் கல்வி அலுவலகங்களோ அல்லது பாடசாலைகளோ எதுவிதக் கோரிக்கைகளையும் விடுக்கவில்லை. அத்துடன் மேற்படி 09 நாட்களும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு நவராத்திரி விழா செய்வதாகவும் எமக்கு அறிவிக்கவில்லை.
எவ்வாறாயினும், தங்கள் கோரிக்கையினை சம்பந்தப்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்களினூடாக, அவர்களின் விதந்துரையுடன் எமக்கு அனுப்பி வைப்பின், இதுபற்றி பரிசீலிக்கக் கூடியதாக இருக்கும் என்பதை தயவுடன் அறியத் தருகின்றேன்.
மேலும், இப்பரீட்சை மூலம் பின்தங்கிய மாணவர்கள் இனங் காணப்பட்டு, அவர்களுக்கான விசேட வகுப்புக்கள் ஒழுங்கு செய்து எதிர்வரும் க.பொ.த (சா.த) பரீட்சையில் அவர்களைச் சித்தியடையச் செய்வதே இம்முன்னோடிப் பரீட்சையின் நோக்கமாகும். விசேட வகுப்புக்கள் வைப்பதற்கு குறைந்தது ஒன்றரை மாத காலமாவது தேவைப்படும் என்பதனாலேயே இப்பரீட்சை 2013.10.07 திகதி முதல் 2013.10.11ஆம் திகதி வரை நடாத்த தீர்மானித்தோம். சரஸ்வதி பூசை நடைபெறும் இறுதித் தினமான 2013.10.15ஆம் திகதிக்கு பின் வரும் 2013.10.17ஆம் திகதி மட்டுமே பாடசாலை நாளாகும்.
2013.10.21ஆம் திகதிக்கு முதல் நாடளாவிய ரீதியில் தரம் 11 மாணவர்களுக்கு மாதிரி பரீட்சை வினாத்தாள் தொடர்பான செயலமர்வினை மத்திய கல்வி அமைச்சு நடாத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment