Header Ads



பிடிவாதத்தை தளர்த்துகிறது சுவிட்சர்லாந்து

இந்தியர்களின் பல லட்சம் கோடி  ரூபாய் கறுப்பு பணம் பற்றிய தகவலை தர சுவிட்சர்லாந்து அரசு முன்வந்துள்ளது. யார் யார் வரி கட்டாமல் பணத்தை வங்கியில் போட்டுள்ளனர் என்ற பட்டியலை கேட்டால் தர தயாராக உள்ளது. உலகின் ரகசிய வங்கி கணக்கு என்றாலே, சுவிட்சர்லாந்து வங்கிகள் பற்றி தான் நினைவு வரும். மேலும், கறுப்பு பணத்தை போட்டு வைக்க இங்கு வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் பணமும் பத்திரமாக இருக்கும். அவர்கள் பற்றிய தகவலை வங்கி யார் கேட்டாலும் தராது என்பதால் ரகசியம் காக்க உத்தரவாதம் உள்ளது. 

உலகின் பணக்காரர்கள் எல்லாம் அந்தந்த நாட்டில் வரி கட்டாமல் சுவிஸ் வங்கிகளில் பணத் தை போட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து பல பணக்காரர்களும் வரிஏய் ப்பு செய்து கறுப்பு பண த்தை சுவிஸ் வங்கிகளில் போட்டுள்ளனர். இந்த பணம் இரண்டரை லட்சம் கோடியை தாண்டும் என்று பாஜ உட்பட பல கட்சிகளும் பெரும் கோஷமெழுப்பின. 

இதைத்தொடர்ந்து தான், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தது. சுவிஸ் வங்கிகளில் சமீப காலமாக போடப்பட்ட விதிகளின் படி, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  அதனால், இந்தியர்களின் கறுப்பு பணம் வெகுவாக குறைந்து விட்டது. கடந்த 2006 ம் ஆண்டில் இருந்தே இந்த நிலை காணப்படுகிறது. 2006 ,2010 இடையே சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்து விட்டது   என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 

சுவிஸ் வங்கிகளில் போடப்பட்ட இந்தியர்கள் கறுப்பு பணத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வலுத்ததை தொடர்ந்து மத்திய அரசும் சுவிட்சர்லாந்து அரசுடன் பேச்சு நடத்தியது. தேவைப்படும் போது உரிய தகவல்களை தர தயார் என்பது போல கூறியிருந்தது. எனினும், குறிப்பிட்டவரின் கணக்கு பற்றிய தகவல் மட்டும் தான் தர  முடியும் என்பதால் கறுப்பு பணம் வெளிக்கொண்டு வருவதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. 

எனினும், இந்தியா போன்றே மற்ற சில நாடுகளும் சுவிட்சர்லாந்து அரசிடம் இது தொடர்பாக பேசி வந்தன. தங்கள் நாட்டில் வரி ஏய்ப்பு செய்து விட்டு, சுவிஸ் வங்கிகளில் பணத்தை போட்டு வைப்பதால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க சுவிஸ் வங்கி கணக்குகள் தொடர்பான தகவல்களை தர வேண்டும் என்று கூறியிருந்தன. 
சுவிட்சர்லாந்து அரசு , இந்த விஷயத்தில் தன் பிடிவாதத்தை தளர்த்த வேண்டிய கட்டாயம் சமீபத்தில் ஏற்பட்டது. 

வரி தொடர்பான நிர்வாக தகவல்களை பரஸ்பரம் தரும் ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அளவில் பல நாடுகள் இடையே பேச்சு நடந்தது. அதில் இந்தியா, சுவிட்சர்லாந்து உட்பட 58 நாடுகள் பங்கேற்றன. அதில் சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டு வைப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தில் 48 நாடுகளும் கையெழுத்திட்டன. இதில் சுவிட்சர்லாந்தும் கையெழுத்திட்டது. 

சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்கு வைப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்கு இந்த ஒப்பந்தம் முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது. பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சி தொடர்பான ஆராய்ச்சியாளர் பாஸ்கல் செயின்ட் ஆமன்ஸ் கூறுகையில்,‘ஒப்பந்தத்தில் சுவிட்சர்லாந்து கையெழுத்திட்டது பெரும் திருப்புமுனையான விஷயம். வரி ஏய்ப்புக்கு எதிராக பல நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு இந்த ஒப்பந்தம் புது தெம்பை தந்துள்ளது’ என்றார். 

சுவிஸ் வங்கிகளில் உலகம் முழுக்க உள்ள பணக்காரர்கள் 90 லட்சம் கோடி கறுப்பு பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். இதில் இந்தியர்களின் கறுப்பு பணம் இரண்டரை லட்சம் கோடியை தாண்டும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது. ஆனால் மத்திய அரசோ, 80 ஆயிரம் கோடி ரூபாய் தான் என்று கூறி வருகிறது.

எக்ஸ்ட்ரா தகவல்

இரண்டாவது உலகப்போருக்கு முன்னால், ஜெர்மனி கொடுங்கோலன் ஹிட்லரின் நாஜிப்படைகள் அட்டூழியத்துக்கு யூதர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் பணத்தை பாதுகாப்பாக வைக்கவே, முதன் முதலில் சுவிஸ் வங்கிகள் அமல்படுத்தியது தான்  ரகசிய வங்கி கணக்குகள். அதுவே, பின்னர், பல நாட்டு கோடீஸ்வரர்களும் பல ஆயிரம் கோடிகளை பதுக்குவதற்கு வழி வகுத்தது.

No comments

Powered by Blogger.