மத்திய மாகாணசபையின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தெரிவில் குழப்பம்
(Sfm) மத்திய மாகாணசபையின் இன்றைய கூட்டத்தொடரின் போது, மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் யார்? என்ற குழப்ப நிலை ஏற்பட்டது.
மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் ரஞ்சித் அலுவிஹாரவை நியமிக்குமாறு முன்னதாக கட்சியின் பொது செயலாளர் அறிவித்திருந்த போதும், இன்றைய தினம் கட்சியின் சில உறுப்பினர்கள் லக்கீ ஜெயவர்தனவின் பெயரை முன்மொழிந்தனர்.
மாகாணசபையின் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமான போது, சபை முதல்வராக ஏ.மதியுகராஜா நியமிக்கப்பட்டதுடன், அரசாங்க தரப்பு பிரதான அமைப்பாளராக அனுராத ஜயரத்ன தெரிவானார்.
எனினும் சபையின் எதிர்கட்சித் தலைவராக இருவரின் பெயர்கள் வழங்கப்பட்டிருப்பதாக சபையின் தவிசாளர் மகிந்த அபேகோன் தெரிவித்தார்.
ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியால் வழங்கப்பட்ட ரஞ்சித் அலுவிஹாவின் பெயருக்கு மேலதிகமாக, லக்கீ ஜெயவர்தனவின் பெயரை, ஐக்கிய தேசிய கட்சியின் 16 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு வழங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
எனினும் மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் யார் என்பது அடுத்தக் கூட்டத்தொடரின் போது அறிவிக்கப்படும் என்றும் தவிசாளர் மகிந்த அபேகோன் தெரிவித்தார்.
Post a Comment