Header Ads



தென் ஆப்ரிக்காவுக்கு தடைபோட்ட பாகிஸ்தான்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அபுதாபியில் நடந்த முதல் டெஸ்டில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) சென்றுள்ள பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அபுதாபியில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 249, பாகிஸ்தான் 442 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. டிவிலியர்ஸ் (11), ஸ்டைன் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

டிவிலியர்ஸ் ஆறுதல்:

நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்க அணியின் ஸ்டைன் (7) ஏமாற்றினார். அடுத்து வந்த டுமினி (0), டுபிளசி (9) சொற்ப ரன்னில் வெளியேறினர். பொறுப்பாக ஆடிய டிவிலியர்ஸ், டெஸ்ட் அரங்கில் தனது 33வது அரைசதம் அடித்தார். எட்டாவது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த போது, ஜுனைடு கான் பந்தில் டிவிலியர்ஸ் (90) சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். சயீத் அஜ்மல் "சுழலில்' பிலாண்டர் (10), மார்னே மார்கல் (0) சிக்கினர். ராபின் பீட்டர்சன் (47*) ஓரளவு ஒத்துழைப்பு கொடுக்க, இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 232 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. பாகிஸ்தான் சார்பில் சயீத் அஜ்மல் 4, ஜுனைடு கான் 3, ஜுல்பிகர் பாபர் 2, முகமது இர்பான் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

சுலப இலக்கு:

40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கோடு இரண்டாவது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசோத் (0), அசார் அலி (3), மன்சூர் (4) சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றினர். பின் இணைந்த யூனிஸ் கான், கேப்டன் மிஸ்பா ஜோடி பொறுப்பாக ஆடியது. ராபின் பீட்டர்சன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய மிஸ்பா, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இரண்டாவது இன்னிங்சில், பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிஸ்பா (28), யூனிஸ் கான் (9) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் பிலாண்டர் 2, ஸ்டைன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் அக்., 23ம் தேதி துபாயில் துவங்குகிறது. பாகிஸ்தான் வீரர் மன்சூர், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

முற்றுப் புள்ளி

ஐ.சி.சி., ரேங்கிங்கில் "நம்பர்-1' இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்க அணி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கேப்டவுனில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து தொடர்ச்சியாக 15 போட்டியில் தோல்வி அடையாமல் இருந்தது. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் செஞ்சுரியனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. நேற்று பாகிஸ்தானிடம் வீழ்ந்ததன் மூலம், தென் ஆப்ரிக்காவின் தோல்வி அடையாத பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.