பள்ளிவாசல்களைவிட பதவி இருப்புகளே முக்கியமாக இருக்கின்றது - மனோ கணேசன்
ஒரு வருடத்துக்கு மேல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்த, தம்புள்ளை அம்மன் ஆலயத்தை இறுதியாக பாதுகாப்பு தரப்பினரே பின்னணியில் இருந்து உடைத்து தரைமட்டம் ஆக்கியுள்ளார்கள். நாடு முழுக்க இப்போது நகர அமைப்பு கட்டுமான வேலைகளை செய்து வரும் பாதுகாப்பு தரப்பினரே, கட்டிடங்களை உடைக்கும் பாரிய இயந்திரங்களை பாவித்து இந்த பாவ காரியத்தை செய்து முடித்துள்ளனர்.
உலகின் கவனத்தை இலங்கை மீது திருப்பியுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாடு இலங்கையில் இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெற உள்ள இந்த தருணத்திலேயே பாதுகாப்பு தரப்பினர் இப்படி நடந்து கொண்டுள்ளார்கள். சிறுபான்மை மக்களின் மத நம்பிக்கைகளை உதாசீனம் செய்யும் இந்த நாட்டு அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மைக்கு இதைவிட வேறு புதிய சான்றுகள் தேவையில்லை என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஐம்பது 50 வருட வரலாறு கொண்ட இந்த ஆலயத்தை உடைத்து நொறுக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பில் நான் இன்று இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதரங்களுக்கும் அறிவித்துள்ளேன். இத்தகைய பாவ காரியங்கள் செய்பவர்கள்தான் எங்களை வேறு வழியில்லாமல், சர்வதேச சமூகத்தின் உதவியை நாட செய்கிறார்கள் என்பதை இந்நாட்டில் வாழும் நல்லெண்ணம் கொண்ட சிங்கள பெளத்த மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பொதுநலவாய மாநாட்டுக்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வருவாரேயானால், அவர் தம்புள்ளைக்கு சென்று உடைக்கப்பட்ட அம்மன் ஆலய வளாகத்தை பார்வையிட வேண்டும் எனவும் அவருடன் சேர்ந்து பொதுநலவாயத்தின் தலையாய நாடான பிரித்தானியாவின் பிரதமர் கமரூனும் செல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் விக்கிரமபாகு கருணாரத்ன, அசாத் சாலி ஆகியோருடன் கலந்துகொண்ட மனோ கணேசன் சிங்கள மொழியில் மேலும் கூறியதாவது,
இந்த ஆலயம் மற்றும் சுற்றுவட்டார காணி, தம்புள்ளை பெளத்த புனித நகர் திட்ட அபிவிருத்துக்கு தேவையென பாதுகாப்பு அமைச்சின் நகர அபிவிருத்தி சபையின் புனித நகர் திட்ட இயக்குனர் எம். ஏ. தயானந்த, 31/10/2012 அன்று எழுத்து மூலம் இந்த ஆலயத்துக்கும், சுற்றி குடியிருக்கும் மக்களுக்கும் அறிவித்துள்ளார். அத்துடன் இவர்களுக்கு மாற்று காணியாக, நகர எல்லைக்குள் தற்போதைய இடத்தில் இருந்து சுமார் 150 மீற்றர் தூரத்திலுள்ள பொல்வத்தை என்ற இடத்தில் காணி தரப்படும் என்றும் அந்த எழுத்து மூலமான அறிவித்தலில் தயானந்த தெரிவித்துள்ளார். தம்புள்ளை ஆலய நிர்வாகமும், இந்த ஆலயத்தை சுற்றி வாழும் சுமார் 40 குடும்பங்களும், பெளத்த புனிதநகர் திட்டத்துக்கு இடம் விட்டு மாற்று இடங்களுக்கு செல்ல தயாராக இருக்கிறார்கள் என்பதை சிங்கள பெளத்த மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
நகர அபிவிருத்தி சபை உறுதியளித்தபடி பொல்வத்தை காணியில் குடியேறி வாழ்வதற்கும், அம்மன் கோவில் கட்டி மத வழிபாடுகளை செய்வதற்கும் இந்த மக்களுக்கு அரசாங்கம் உடனடியாக இடம் தர வேண்டுமேன்பதுவே இது தொடர்பாக எங்கள் கோரிக்கை.
ஆனால், இன்று பாதுகாப்பு அமைச்சின் நகர அபிவிருத்தி சபை தான் முன்னர் கூறியபடி பொல்வத்தை காணியை இந்த மக்களுக்கு வீடு கட்டி வாழவும், கோவில் கட்டி வழிபடவும் தர மறுகின்றது. இதுதான் இன்றைய பிரச்சினைக்கு காரணம். இதை சிங்கள பெளத்த மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது இந்த மக்களுக்கு பணம் கொடுத்து வாடகை வீடுகளில் வாழும்படி பாதுகாப்பு அமைச்சு சொல்கிறது. அத்துடன் தம்புள்ளையிலிருந்து 20 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஹபரணை சாலையில் திகம்பொத என்ற காட்டு யானைகள் வாழும் வனப்பகுதியில் சென்று வீடு கட்டி, கோவில் கட்டி வாழ சொல்கிறார்கள். தம்புள்ளை நகரில் நீண்ட காலமாக தொழில் செய்து, பிள்ளைகளை படிக்க வைத்து வாழும் இந்த மக்கள் திடீரென 20 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டில் சென்று காட்டு யானைகளுடன் குடித்தனம் நடத்த முடியாது என்பது பாதுகாப்பு அமைச்சுக்கு விளங்கவில்லை.
இது இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சுக்கு விளங்காததில் எமக்கு ஆச்சரியம் இல்லை. இது அரசாங்கத்தில் குடியிருக்கும் மிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க அரசியல்வாதிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் கூட புரிவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
இந்த நாட்டு அரசாங்கம் ஒரு சிங்கள பெளத்த அரசாங்கம் அல்ல. இது சிங்கள பெளத்தத்தை தம் தேவைக்கு பயன்படுத்தி இன, மத வாதத்தை கிளப்பும் அரசாங்கம் ஆகும். இந்த அரசாங்கத்தில் இன்று அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க அரசியல்வாதிகளும், இடதுசாரிகளும் இந்த மதவாதங்களுக்கு துணை போகின்றார்கள். இவர்கள் அனைவரும் ஒருசேர எழுந்து நின்று இத்தகைய ஆலய, பள்ளி, தேவாலய உடைப்புகளுக்கு எதிராக உறுதியாக தமது நிலைப்பாடுகளை அரசு தலைமைக்கு தெரிவிப்பார்களாயின், இன்றிய சர்வதேச சூழலில் அரசுக்குள்ளே அது ஒரு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். அதன்மூலம் இத்தகைய அநீதிகள் ஒரே இரவிலேயே முடிவுக்கு வரும். ஆனால் அம்மன் கோவில்களைவிட, பள்ளிகளைவிட, தேவாலயங்களைவிட தங்கள் பதவி இருப்புகளே இவர்களுக்கு முக்கியமாக இருக்கின்றது.
Post a Comment