தொடரும் ஐ.தே.கட்சி நெருக்கடி
(பேராசிரியர் கீதபொன்கலன்)
ஒரு வகையில் இலங்கை ஜனநாயகத்தின் நெருக்கடி ஐக்கிய தேசியக் கட்சியின் நெருக்கடியில் பிரதிபலிப்பது போலவும் ஐ.தே.கட்சியின் நெருக்கடி ஜனநாயகத்தில் பிரதிபலிப்பது போலவும் இப்போது ஆகிவிட்டது. நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல்கள் வெளிப்படையாக பெரிதுபடுத்திக் காட்டிய ஒரு விடயம் அல்லது மீண்டும் உறுதிபடுத்திய ஒரு விடயம் பிரதான எதிர்க்கட்சி எந்த அளவிற்கு நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்பது ஆகும். ஒரு வகையில் நோக்குகையில் தென்னிலங்கையின் இரண்டு மாகாணங்களில் மட்டுமல்ல வடக்கிலும் கூட கட்சியின் நிலையும் எதிர்காலமும் கவலைக்கிடமாக ஆகியுள்ளமைபை சுட்டிக்காட்டப்படலாம்.
வடமாகாணத்தைப் பொறுத்தவரை தமிழ் உளவியலையும் அண்மைக்கால வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், ஐ.தே.கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கக் கூடிய ஒரு சாத்தியம் இருக்கவே செய்தது. அவ்வகையில் இரண்டு காரணங்கள் முக்கியமானவை. ஒன்று தமிழ் அரசியல் உளவியல் பொதுவாக ஐ.தே.கட்சியைப் பொறுத்தவரை ஒரு “மென்மையான மூலையை’ கொண்டிருந்ததாகவே கொள்ள வேண்டியிருந்தது. இதற்கான அடிப்படையான காரணம் சுதந்திரக் கட்சியுடன் ஒப்பிடுகையில் சுதந்திரக் கட்சி அதிக இனவாதக் கட்சியாகவே பார்க்கப்பட்டது. இப் புரிந்துணர்வை ஏற்றுக் கொள்ளாதவர்களும், ஆழமாகப் பார்க்கையில் ஐ.தே.கட்சியே கூடுதல் இனவாதத்தைக் கொண்டிருந்தது என்று வாதிடுவோரும் இருக்கவே செய்தனர். இருப்பினும், பொதுவாக, சாதாரண அரசியல் மட்டத்தில் ஐ.தே.கட்சி ஒரு அளவிற்கு மிதமானதாகவே பார்க்கப்பட்டது.
இதன் காரணமாகவே 2005ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க தமிழ் வாக்குகளை ஏறத்தாழ முழுமையாகவே பெற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன், இறுதி யுத்தத்தின் கொடுமைகளும் அக்கிரமங்களும் அரசாங்கத்துக்கு எதிரான பாரிய எதிர்ப்புணர்வை ஏற்படுத்தி இருந்தது. இதன் காரணமாக வட மாகாணத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புக்கு அடுத்த படியாக கூடுதல் வாக்குகளை பெறக்கூடிய உள்ளார்ந்த இயலுமை இருக்கவே செய்தது. இருப்பினும், முடிவு அவ்விதம் இருந்திருக்கவில்லை. கட்சியினால் மூன்றாவது இடத்தைக்கூட பிடித்துக் கொள்ள முடியவில்லை கூட்டமைப்பின் ராட்சத முப்பது ஆசனங்களுக்கு அடுத்த படியாக முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டது. வட மாகாணத்தில் ஐ.தே.கட்சி அவசியமே இல்லாத கட்சி என்பது போல் ஆகிவிட்டமை ஒரு வகையில் துரதிர்ஷ்ட வசமானதே.
மாகாணத்தில் வெறும் மூவாயிரம் வாக்குகளை மட்டுமே கட்சி பெற்றுக் கொண்டமைக்கு பல காரணங்கள் இருக்கக் கூடும். இருப்பினும் முக்கியமான ஒன்று, தேர்தலுக்கு முன்னரேயே ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியை விட்டுக் கொடுத்துவிட்டது. இந்த விட்டுக்கொடுப்பு நீண்ட கால நலனை அடிப்படையாகக் கொண்டது என்று கருதுபவர்களும் இருக்கக்கூடும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக இந்தவிட்டுக் கொடுப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். கோட்பாட்டு ரீதியாக, கூட்டமைப்பு பெற்றுள்ள 80 வீத வாக்குகளுடன் ஐ.தே.கட்சி, கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமாயின் அது அரசாங்கத்துக்கு பாரிய ஒரு சவாலாக அமைந்துவிடும். இருப்பினும் இன்றைய நிலையில் இருந்து நோக்குகையில் இது செயற்பாட்டு இயலுமையுடைய ஒரு திட்டமாகத் தோன்றவில்லை. ஏறத்தாழ சமமான அல்லது இறுக்கமான ஒரு போட்டியிலேயே தமிழ் மக்களின் வாக்குகள் முடிவை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.
அறுபதுக்கு முப்பது என்ற சமன்பாட்டில் அல்ல. ஐ.தே.கட்சி பெறக்கூடிய இருபதுகளுடன் தமிழ் வாக்குகள் அதிக பயனுடையதாக இருக்கப் போவதில்லை. எனவே, புத்திசாலித்தனமாக இருந்திருக்கக் கூடியது, கட்சி வடக்குத் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதுடன், தீவிரமாக போராடுவது. வடக்கில் கட்சி எதிர்க்கட்சியாகவோ அல்லது அர்த்தமுடைய சில ஆசனங்களைப் பெற்றுக் கொண்டிருக்குமாயின் அது தேசிய அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்திருக்கும். தெற்கைப் பொறுத்தவரை மத்திய மற்றும் வடமேல் மாகாணம் ஆகிய இரண்டிலுமே கட்சி முன்னர் இருந்த ஆசனங்களிலும் குறைவான இடங்களையே வெற்றி கொண்டுள்ளது. அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற பொருளாதார மற்றும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கட்சியினால் இருபது சத விகிதமான வாக்குகளை மட்டுமே பெறக் கூடியதாக இருப்பது கட்சியினுள்ளான நெருக்கடியை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. இந்நெருக்கடிக்குத் தீர்வு ஐ.தே.கட்சியினுள்ளான மாற்றம் ஒன்றினால் மட்டும் ஏற்பட்டு விடப்போவதில்லை.
மாற்றம் மூன்று கோணங்களில் இருந்து ஏற்படுகின்றபோது மட்டுமே தேசிய ரீதியான மாற்றம் ஏற்படலாம். அவை சமூகம், ஆளும் கட்சி, ஐ.தே.க என்பவையாகும். இதன் கருத்து ஐ.தே.கட்சியினுள் பழுது பார்த்தல் ஒன்று அவசியம் அல்ல என்பது அல்ல. எனினும் இப்போது பேசப்படுவது போல் தலைமைத்துவ மாற்றம் ஒன்று மட்டும் அரசாங்க விமர்சகர்களின் ஆதங்கத்தை தீர்த்து விடுமா என்பது சந்தேகத்திற்கிடமானதே. இப்போதுள்ள நிலையில் கட்சியினும், தலைமைத்துவம், கொள்கைகள், தந்திரோபாயம் உள்ளடங்களாக முழுமையான சீர்திருத்தம் ஒன்று முன்னெடுக்கப்படாத வரை கட்சியின் எதிர்காலம் தொடர்பிலோ அல்லது நாட்டின் ஜனநாயகம் தொடர்பிலோ நம்பிக்கை ஏற்படக்கூடிய சாத்தியம் குறைவானதே. இதற்கு முன்னரும் கூட, சற்றுக் காலத்திற்கு முன் ஐக்கிய தேசியக் கட்சியின் நெருக்கடி பற்றி எழுதுகின்றபோது, அரசாங்கத்தின் சிங்களத் தேசியவாதத்துடன் போட்டியிடக் கூடிய கடும்போக்கு வாதம் ஒன்றை கட்சி அரவணைத்துக் கொள்ளும்வரை ஆளும் கட்சிக்கு சவாலாகவோ அல்லது உறுதியான எதிர்க்கட்சியாகவோ வருவது கடினமானதே என்று இப்பகுதியில் சுட்டிக்காட்டியதாக ஞாபகம்.
இந்த வாதம் இப்போதும் கூட பொருத்தமானதாக இருக்கலாம். இவ்விதமான ஒரு போக்கு புதிய தலைமை ஒன்றின் கீழ் ஏற்படக்கூடிய சாத்தியமும் அது சிறுபான்மையினருக்கு எதிராக பாதகமானதாக அமைந்துவிடக் கூடிய சாத்தியமும் இல்லாமல் இல்லை. இருப்பினும், கட்சி என்ற கோணத்தில் இருந்து நோக்குகையில் இத்தகைய ஒரு மாற்றம் அதற்கு பயனுடையதாக இருக்கும். அதேசமயம் உடனடி நிலையில் தலைமைத்துவ மாற்றம் என்பதும் கூட முற்றிலும் தவறான ஒரு வாதமாக இருக்க முடியாது. ஏனெனில், இப்போது இருக்கின்ற தொடர்கின்ற யதார்த்தத்தை மாற்றக்கூடிய இயலுமை தற்போதைய தலைமைக்கு இல்லை என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டதாயிற்று. எனினும் பிரச்சினை என்னவெனில், பொறுப்பை ஏற்றுக்கொள்ளக் கூடிய இரண்டாம் மட்ட தலைமைத்துவம் ஒன்று ஐ.தே.கட்சியினுள் உள்ளதா என்பது. இல்லை என்பதற்கான காரணம் விடுதலைப் புலிகளதும் ரணில் விக்ரமசிங்காவின் கொள்கைள் மட்டுமே என்று கூறிவிட முடியாது.
அதற்கான காரணம் அரசாங்கம் ஐ.தே.கட்சியில் இருந்து உறுப்பினர்களை எவ்விதம் கொள்வனவு செய்தார்கள் என்பதும் தான். தயாசிரி ஜயசேகரவுக்கு தலைமைத்துவத்தை எட்டக்கூடிய உள்ளார்ந்த இயலுமை இருக்கவே செய்தது. இப்பின்னணியில் இருந்து ஐ.தே.கட்சியைப் பார்க்கின்றபோது, இரண்டாம் மட்டத்தில் கட்சிக்கு இருக்கின்ற ஒரே தெரிவு சஜித் பிரேமதாசா மட்டுமே ஆகும். இருப்பினும், பிரேமதாசாவால் நிலைமையை மாற்றி அமைத்துவிட முடியும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அதை நிரூபிப்பதற்கு பிரேமதாசாவால் இன்னும் முடிந்திருக்கவில்லை. ஜனாதிபதி பதவி எவ்விதம் தானாக வந்து தன் மடியில் விழும் என்று விக்ரம சிங்கா கருதுகின்றாரோ அதேபோல் கட்சிப் பதவி தானாக வந்து தன் மடியில் விழும் என்று பிரேமதாசா கருதுகின்றார். அவ்வகையில் இருவருக்கும் இடையில் (இவ் விடயத்தில்) அதிக வேறுபாடு இல்லை. எவ்வாறாயினும், எதிர்வரும் தென்மாகாண சபைத் தேர்தலில் பிரேமதாசா முதலமைச்சர் வேட்பாளராக, களமிறங்க வேண்டும் என்கிற அபிப்பிராயம் ஒன்று முன்வைக்கப்பட்டது. இந்த யோசனை எந்த மட்டத்திலும் இருந்து தோற்றம் பெற்றது என்பது தெளிவானது அல்ல. இருப்பினும், அது மோசமான யோசனை அல்ல. அது சிறிய ஒரு மட்டத்தில் தனது தலைமைத்துவ இயலுமையை நிரூபிப்பதற்கு பிரேமதாசாவுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும். இவ்விடயத்தில் தான் சந்திரிகா குமாரதுங்காவிடம் இருந்து முன் உதாரணங்களைப் பெறப் போவதில்லை என்று பிரேமதாசா இப்போது கூறியுள்ளார்.
இருப்பினும், மாகாணசபை தேர்தல் ஒன்றில் பெறப்பட்ட மாபெரும் வெற்றியே சந்திரிகாவை இறுதியில் அதிகாரத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது என்பது மறக்கப்படுவதற்கில்லை. சஜித் பிரேமதாசா சந்திரிகாவிடம் இருந்து பாடம் கற்க விரும்பாவிடினும் மோடியிடம் இருந்தாவது கற்கலாம். மோடிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புகளும் இருந்த போதும், அவர் சமூக மற்றும் மாநில மட்டத்தில் பெற்ற வெற்றி இன்று தேசிய அளவிற்கு அவரை உயர்த்தி உள்ளது. நாளை இந்தியாவின் பிரதமராக அவர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனினும், சஜித் இவ் உதாரணங்களின் அடிப்படையில் மாகாண சவாலை ஏற்றுக் கொள்வார் என்று தோன்றவில்லை. ஏனெனில், மாகாண மட்டத்தில் தனது திறமையை நிரூபிக்க முடியும் என்கின்ற நம்பிக்கை பிரேமதாசாவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. தென்மாகாணத் தேர்தலின் பின்னர் (நிச்சயமாக தோல்வியடைவோம் என்று தெரிவதன் காரணமாக) ரணிலை தாக்குவதற்கான திட்டம் மட்டுமே இருக்கக்கூடும். ஒரு மாற்று தந்திரோபாயமாக விக்ரமசிங்கா செய்யக்கூடியது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு சஜித்தை நிர்ப்பந்திப்பதாகும்.
The UNP party is non under the current leadership but the only party can produce result and relief for the country and her people unfortunately under total mess.Let hope soon get settle
ReplyDelete