முதலமைச்சர் விக்கேஸ்வரன் எல்லைமீறிப் போனால் உரிய நடவடிக்கையெடுப்போம் - மேர்வின் சில்வா
வடமாகாணத்தில் ஜனநாயக அடிப்படையில் புதிய நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் அமைதியின்மை தோற்றுவிக்கப்படுமாக இருந்தால் அரசா ங்கம் ஒரு செக்கன்கூட பொறுத்திராமல் நடவடிக்கையெடுக்கும் என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த அமைச்சர் மேர்வின் சில்வா அஙகு பிரதேச மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து பேசுகையில்,
வடமாகாணத்தில் வீதிகள் பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை விஸ்தரித்துள்ளோம். அதேபோன்று அந்த மக்களின் நலன் கருதி தேர்தலையும் நடத்தினோம். அம்மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை விரும்பி வாக்களித்தது ஜனநாயகமாகும்.
அந்த வகையில் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியாவார். அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற முடியுமென்பது அவருக்குத் தெரியும்.
இந்நிலையில், அவர் மத்திய அரசாங்கத்தை ஒதுக்கிவிட்டு வெளிநாட்டு ஆலோசனைகளுக்கு ஏற்ப செயற்படுவாரானால் அவர்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.
மக்கள் நலத் திட்டங்களுக்கு எமது அரசாங்கம் நேசக்கரம் நீட்டும் சமாதான சுபீட்சமான சூழ்நிலைக்காகக் கைகொடுப்போம். அவர்கள் ஜனநாயகத்தை விட்டு வெளியே போனாலும் சிறிது தூரம் நாங்கள் சமாதானக் கரம் நீட்டுவோம்.
ஆனால் எல்லைமீறிப் போனால் 30 செக்கன்கள் அல்ல ஒரு செக்கன் கூட பொறுமை காக்க மாட்டோம். தனிமனிதனுக்கெதிராக உரிய நடவடிக்கையெடுப்போம்.
அதன் போது தமிழ் மக்களது ஒரு துளி இரத்தம் கூட சிந்தமாட்டாது. இதை மேர்வின் சில்வா நேரடியாகவே கூறுகிறேன்.
இராணுவத் தளபதி போன்று விடுதலைப் புலிகள் அமைப்பின் படைத் தளபதியாகவே கருணா அம்மான் செயற்பட்டார். அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமிழ் சமூகத்தினது நலனைக் கருத்திற்கொண்டு அவர் எம்மோடு இணைந்துகொண்டார்.
அவர் ஜனாதிபதியுடன் இணைந்தமை ஒரு பாக்கியமாகும். இதனால் தான் இன்று எமது நாட்டில் 30 வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சமாதானம், சுபீட்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
Post a Comment