Header Ads



நமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி செய்வதற்கான யுகத்தை உருவாக்கியுள்ளோம் - ஜனாதிபதி மஹிந்த

அரசாங்கம் வெறுமனே அபிவிரு த்தியை மட்டுமன்றி நாட்டு மக்களின் எதிர்காலம் மற்றும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கான பின்புலத்தையும் உருவாக்கியுள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்த யுகத்தை மாற்றி எமக்கானதை நாமே உற்பத்தி செய்யும் யுகமொன்றை நாட்டில் உருவாக்கியுள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விஞ்ஞான, தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்குத் தேவையான வளங்களையும் ஒத்துழைப்புகளையும் வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி :- நெனோ தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி அதிக விளைச்சலைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் எனவும் குறிப்பிட்டார்.

அரச மற்றும் தனியார் முதலீட்டோடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நெனோ தொழில்நுட்பப் பூங்கா மற்றும் நெனோ தொழில்நுட்ப நிறுவனத்தினை நேற்றைய தினம் ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரி வித்ததாவது :-

வேறு நாடுகளில் தங்கியிருக்காமல் நமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி செய்வதற்கான யுகத்தை நாம் உருவாக்கியுள்ளோம்.

நெனோ தொழில் நுட்பத்தை உபயோகித்து அதிக விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியுமென துறைசார்ந்த நிபுணர்கள் எமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். பசளையைக் குறைவாக உபயோகித்து இதன் மூலம் அதிக விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்தமுறை ஆராயப்பட்டு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது விவசாயத் துறையில் எமக்குக் கிடைத்துள்ள முன்னேற்றமாகும்.

நவீன வகையில் சிந்திப்பதற்கு விவசாயிகளுக்கு வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளன. விஞ்ஞான தொழில்நுட்பத் துறையில் நாம் அந்த அளவில் முன்னேறி வந்துள்ளோம்.

நாம் எதிர்கால பரம்பரைக்காக முக்கியமான நிறுவனமொன்றை உருவாக்கியுள்ளோம். கடந்த காலங்களில் ஒவ்வொரு துறை சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. நெனோ தொழில் நுட்பம் தொடர்பான ஆய்வுக்கு நிறுவனம் ஒன்றை நிறுவியுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். எதிர்கால சந்ததிக்கான சேவையைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்பதே எமது நம்பிக்கையாகும்.

கடந்த காலங்களில் எமது கல்வி முறையில் பல்கலைக்கழகம் முக்கியத்துவம் பெறுகிறது. அதன் பின்னர் தேசிய ரீதியான முன்னேற்றத்துக்கு பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆசியாவின் அறிவின் கேந்திரமாக இலங்கையை உருவாக்க நாம் மஹிந்த சிந்தனை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த இலக்கை வெற்றிகொள்ள நாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் நாம் அதிகமானவற்றை சாத்தியமாக்கியுள்ளோம்.

வெல்லஸ்ஸவில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை உருவாக்கி தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளையும் கற்பித்து கணனி அறிவில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளோம். இதற்கான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வர்த்தகம், வாணிபம், விஞ்ஞானத் துறைகளோடு நம் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த வகையில் அரசாங்கம் 600 மில்லியன் ரூபாவை ஒதுக்கி தனியார் துறையின் பங்களிப்புடன் நெனோ தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அறிவை வளர்க்கும் மூன்று நிறுவனங்களை நாம் உருவாக்கி அவற்றை பாதுகாத்து செயற்படுத்தி வருகிறோம். மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுக்க இவை உறுதுணையாக அமையும். பிள்ளைகளுக்கும் நவீன தொழில்நுட்பம் சம்பந்தமான உணர்வை ஏற்படுத்த இந்த பூங்காவை பயன்படுத்துமாறு நான் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவைப் பணித்துள்ளேன்.

எமது பிள்ளைகளைக் கேட்டால் டாக்டராகவும் பொறியியலாளராகவும், ஆசிரியராகவும் வருவதே எமது பிள்ளைகளின் இலட்சியம் உள்ளது. விஞ்ஞானியாக வருவதற்கான உணர்வு எமது பிள்ளைகளிடம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

இலங்கையராகிய நாம் புதிய மாற்றங்களை விரும்புகின்றவர்கள். தொழில்நுட்ப அறிவைப் பெறுவதிலும் எமது மக்கள் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். நெனோ தொழில்நுட்பத்தின் உபயோகத்துடன் சர்வதேச விருது வென்ற இளைஞர்களைக் காண முடிவது எமது நாட்டிற்குக் கிடைத்த பெருமையாகும். அதனால் இத்துறையினை முன்னேற்றுவதற்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது.

மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். அப்போது அரிசியின் விலை 100 ரூபாவாக இருந்தது. இந்தியாவிலிருந்து அரிசி பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், அப்போதைய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மியன்மாரிலிருந்து அரிசி கொள்வனவு செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதேபோன்று தேங்காய் 60 ரூபாவாக விற்ற காலம் அது. இதுபோன்ற யுகம் ஒன்றை நாம் கடந்துள்ளோம். இப்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி முன்னேற்றுவதில் அரசாங்கம் தனியார் துறையோடு இணைந்து முன்னேறி வருவதானது எமக்குக் கிடைத்த வெற்றியாகும். தனியார் துறையும் அரசாங்கமும் ஒன்றிணைந்து முன்னேற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளமை நாட்டிற்கான வெற்றியாகும்.புதிய கண்டுபிடிப்புகள் மூலமும் பாரிய பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும். எம்மிடமுள்ள வளங்கள் மற்றும் நிதியை நாட்டிற்குள்ளேயே பாதுகாப்பதற்கு இதன் மூலம் செயற்பட முடியும் என்பதும் எமது நம்பிக்கையாகும்.

இத்தகைய செயற்பாடுகளில் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களைப் பாராட்டுவதோடு, ஆசியாவின் அறிவின் கேந்திரமாக இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் நவீன தொழில் நுட்பத்தின் பயன்கள் முக்கியமானது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.