கல்முனை ஸாஹிராக் கல்லூரி, நிர்வாக செயற்பாடுகளில் பிரதி கல்வி பணிப்பாளர் தலையீடுவதாக குற்றச்சாட்டு
(ஸஹிரியன்)
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் நிர்வாக செயற்பாடுகளில் பிரதி கல்வி பணிப்பாளரொருவர் அடிக்கடி தலையீடுகளை மேற்கொள்வதாக கல்லூரியின் ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கல்முனை வலயக் கல்வி பணிமனையிலுள்ள பிரதிக் கல்வி பணிப்பாளர் ஒருவரே குறித்த நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
குறித்த பிரதி கல்வி பணிப்பாளர் கல்லூரிக்கு அடிக்கடி விஜயம் செய்து பாடசாலை அதிபர் மற்றும் பதில் அதிபர் ஆகியோரிடம் தேவையற்ற கேள்விகளை கேட்பதாகவும் தெரிய வருகின்றனது.
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் நேர்முக பரீட்சைக்கு விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டுள்ளன. இந்த அதிபர் நேர்முக பரீட்சைக்கு குறித்த பிரதிக் கல்வி பணிப்பாளர் விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த திங்கட்கிழமை கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு விஜயம் செய்த குறித்த பிரதி கல்வி பணிப்பாளர் கல்லூரியின் முகாமைத்து குழுக் கூட்டத்திலும் கலந்துகொண்டுள்ளார்.
இதன்போது கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினை குறித்த பிரதி கல்வி பணிப்பாளர் கடுமையாக விமர்ச்சித்ததாக கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பதில் அதிபரான எம்.எஸ்.எம்.ஹம்சா பாடசாலைக்கு சமூகமளிக்காத நாட்களில் நான்காம் நிலையிலுள்ள எம்.எஸ். முகம்மட் பதில் அதிபராக செயற்படுவார் என குறித்த பிரதி கல்வி பணிப்பாளர் பாடசாலையின் சம்பவ திரட்டு புத்தகத்தில் எழுதியுள்ளார்.
பிரதி அதிபரான ஏ.கபூர் மூன்றாவது நிலையிலுள்ள நிலையில் நான்காம் நிலையிலுள்ள உப அதிபரான எம்.எஸ். முகம்மட், பதில் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்லூரியின் ஆசிரியர்களுடன் கலந்துரையாடாமலேயே பிரதி கல்வி பணிப்பாளரினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கல்லூரியின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இது பிரதி கல்வி பணிப்பாளரின் தான்தோன்றித்தனமான செயற்பாடாகும் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
முக்கிய குறிப்பு - இதுவிடயத்தில் சம்பந்தப்பட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏதேனும் விளக்கங்களை வழங்கினால் அல்லது மாற்றுக்கருத்துக்களை முன்வைத்தால் அதனை பதிவேற்றம் செய்ய எமது இணையம் காத்திருக்கிறது.
Post a Comment