அள்ளுப்பட்டு போய்விடுவோமோ, என்ற ஆபத்தில் இருக்கின்றோம் - ரவூப் ஹக்கீம்
எல்லோரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டுமென்று எல்லோரும் கூறினாலும், குறுகிய அரசியல் நோக்கம் அதற்கு தடையாக இருந்து கொண்டிருக்கின்றது. இந்த குறுகிய நோக்கில் இருந்து விடுபடா விட்டால், முழு நாடுமே மிகப் பெரிய ஆபத்தில் மாட்டிக் கொள்ளும்.இவ்வாறு மு.காவின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் மருதமுனையில் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூருக்கு நடைபெற்ற சேவை நலன் பாராட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
முன்னாள் அமைச்சர் மன்சூரின் ஊழலில்லாத அரசியல் வாழ்க்கை இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது. இந்த நிலையில், இங்கு சிங்கப்பூரின் அரசியல் பற்றியும், பொருளாதாரம் பற்றியும், இனபாகுபாடு இல்லாத அரசியல் பற்றியும் பேராசிரியர் நுஹ்மான் தொட்டு விட்டுப் போனார்.
சிங்கப்பூர் ஒரு கட்சி அரசியலை கொண்ட நாடு என்பதனையும் அவர் சொல்லத் தவறவில்லை. அது மட்டுமல்ல அங்கு பத்திரிகை சுதந்திரமும் இல்லை. பத்தரிகைகளில் அரசியல்வாதிகள் பெரிதாக விமர்சிக்கப்பட மாட்டார்கள்
ஆனால் எங்கள் நாட்டிலே அரசியல்வாதிகளை விமர்சிக்கும் சுதந்திரம் பத்திரிகைகளுக்கு இருக்கின்றது. எங்கள் நாட்டில் பத்திரிகை சுதந்திரம் வரவேற்கத்தக்க வகையிலாவது இருக்கின்றதென்று ஆறுதடையலாம்.
ஆனால், அதுவும் அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்டுள்ளதென்ற குற்றச்சாட்டுக்களும் இல்லாமலில்லை. யுத்த காலத்தில் பத்தரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற விடயம் சர்வதேச ரீதியான விமர்சனங்களுக்கு காரணமாக இருந்ததென்பது நாங்கள் மறக்க முடியாத விசயங்கள்தான்.
இந்த நாடு சந்தித்த சாபக்கேடுகளில் ஒன்றுதான் அரசாங்கங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பது. அதனால்தான் அரசியல் அஸ்தமனங்களும் இடம்பெறுகின்றன. அது தனிப்பட்டவர்களை பாதிப்பதென்பது தவிர்க்க முடியாத விசயமாகும். இதில் நாங்களும் அள்ளுப்பட்டு போய்விடுவோமோ என்ற ஆபத்தில் நாங்கள் இருக்கின்றோம்.
1970, 1977களில் நடந்தது இப்போது 2010 லும் நடந்திருக்கின்றது. அரசியல் யாப்புக்களை மாற்றுவதற்கு தன்னிச்சையாக அரசாங்கங்கள் எத்தனிக்கின்ற போது ஏற்படும் ஆபத்துக்கள் இருக்கின்றன. அந்த விபத்துக்களில் நிறை அஸ்தமனங்களும் நடைபெற்றுள்ளன.
2009ம் ஆண்டில் யுத்த வெற்றியின் பின்னர் ஏற்பட்டுள்ள இந்த ஆபத்தை தவிர்ப்பதற்கு நான் நண்பர் கரு ஜயசூரியாவுடன் பெரும் போராட்டத்தையே செய்தவன். கடந்த பொதுத் தேர்தலை நாங்கள் சந்தித்த போது ஐ.தே.கவும், முஸ்லிம் காங்கிரஸும் ஒன்றாக இருந்தோம்.
ஜனாதிபதித் தேர்தலின் தோல்வி எங்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. ஆனால், எங்களுக்கு இருந்த சவால் இரண்டாவது தடவையாக வந்துள்ள இந்த ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்துவிடக் கூடாதென்பதாகும்.
பொதுத் தேர்தலில் ஐ.தே.கவுடன் யானைச் சின்னத்தை மறந்து விட்டு, தயவு செய்து அன்னச் சின்னத்தில் வாருங்கள் என்று கேட்டோம். ஆனால், கரு ஜயசூரிய போன்றவர்கள் யானைச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டுமென்று விடாப்பிடியாக இருந்தார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி கொண்டவர்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்து விடும். அவ்வாறு இல்லாமல் மூன்றில் இரண்டிற்கு எட்டிய தொகை கிடைத்து விட்டால் மீதமானவர்களை மற்றக் கட்சிகளில் இரந்து கவர்ந்து விடுவார்கள் என்று நாங்கள் சிந்தித்தோம். எங்களைப் போன்ற கட்சிகளை துண்டாக்கி அழித்து விடுவார்கள் என்று எண்ணினோம்.
அரசாங்கத்தில் விரும்பத்தகாத ஒருவராக என்னைப் பலரும் பார்க்கலாம். இலங்கை –- இந்திய ஒப்பந்தம் முஸ்லிம்களை பாதித்தது. இதனால்தான், முஸ்லிம் காங்கிரஸிற்கு எழுச்சி ஏற்பட்டது. இந்த எழுச்சியால் முன்னாள் அமைச்சர் மன்சூரும் பாதிக்கப்பட்டார்.
ஒப்பந்தத்தில் பிரச்சினையில்லை. ஒப்பந்தத்திற்கு பின்னரான சூழல்தான் காரணமாகும். ஒரு ஜனாதிபதி ஒரு ஒப்பந்தத்தின் மூலமாக இரவோடு இரவாக வடக்கையும், கிழக்கையும் இணைத்தமை முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
ரணில் விக்கிரமசிங்க அரசியல் அஞ்ஞாத வாச நிலைக்கு போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவரின் இந்நிலைக்கு விடுதலைப் புலிகள் தான் காரணமாகும். வடக்கு முழுவதிலும் தேர்தல் பகிஷ்கரிப்பைச் செய்தார்கள்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ், முஸ்லிம்கள் மாத்திரமல்ல. சிங்கள தேசிய தலைமைகளில் நேர்மையாக சிந்திக்கின்ற தலைமைகளும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். அவசரமாக மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் யாப்பு திருத்தங்களை ஆதரிக்காக ஓர் அணியாக உருவாக வேண்டும்.
அது இல்லாமல் இந்த நாட்டிற்கு விமோசனமில்லை என்ற ஆபத்தைத்தான் நாங்கள் எதிர் நோக்கியுள்ளோம். எல்லோரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டுமென்று கூறினாலும், குறுகிய அரசியல் நோக்கம் அதற்கு தடையாக இருந்து கொண்டிருக்கின்றது.
இந்த குறுகிய நோக்கில் இருந்து விடுபடாவிட்டால், முழு நாடுமே மிகப் பெரிய ஆபத்தில் மாட்டிக் கொள்ளும். அரசியல்வாதிகளின் சேவைகளில் குறைகளை காண முடியாது. ஆனால், மேலாதிக்கவாதிகளின் அரசியல் போக்கு என்பது எங்களை இனத்துவ அரசியல் சிந்தனைக்குள் பலவந்தமாக தள்ளியிருக்கின்றது.
எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற உணர்வு எங்களை இந்த திக்கிலே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இவற்றை எல்லாம் கடந்து ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதென்பது இலகுவான காரியமல்ல.
அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டியிலே எந்த தார்மீகத்தைப் பற்றியும் சிந்திக்காதுள்ள போக்கிற்கு எதிராக அது அரச அணியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி அனைவரும் ஒன்றுபட்டு அரணாக போராடுகின்ற கட்டத்தினை எட்டியிருக்கின்றோம்.
Post a Comment