Header Ads



“அரசியல் வாதிகள் சமூகத்தை விற்றுப்பிழைக்க நமது சமூகத்தின் அப்பாவித்தனமே காரணம்”

“பயங்கரமான சமூகத் தீமையென எமதுமார்க்கம் தடைசெய்துள்ள சூதாட்டத்தினை இந்நாட்டில் அனுமதிக்கும் சட்ட மூலங்களுக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் அரசியல் வாதிகளை வரவேற்று கௌரவப்படுத்துகின்ற நம் சமூகத்தின் அப்பாவித்தனம் பெரும் கவலையளிக்கிறது. இந்த அரசியல் அப்பாவித்தனத்தை மூலதனமாக்கியே சமூகத்தை விற்றுப் பிழைக்கும் அரசியலை இவர்கள் இன்னமும் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதனை நாம் ஏன் இன்னமும் உணரவில்லை?” இவ்வாறு பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

அண்மையில் காத்தான்குடியில் நடாத்தப்பட்ட PMGG யின் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். PMGG தலைமையிலான அரசியல் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் ஐயூப் அவர்களும் PMGG யின் பலமுக்கியஸ்தர்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது....

“நமது முஸ்லிம் சமூகம் படுமோசமான வகையில் அரசியல் ரீதியான அப்பாவித்தனத்தில் இருக்கிறது. நமது மார்க்கத்திற்கும் இந்த நாட்டிற்கும் நமது சமூகத்திற்கும் விரோதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற அரசியல் வாதிகளுக்கு கௌரவப் பட்டங்களை வழங்கி சந்தோசப்படுகின்ற நிலையிலேயே நம் சமூகம் இன்னும் இருக்கிறது. இந்த நிலைமை சமூகம் எவ்வளவு தூரம் அப்பாவித்தனமாக இருக்கிறது என்பதனை மிகத்தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த அப்பாவித்தனமானது, சில சந்தர்ப்பங்களில் நம்மை நீதி தவறியும் பாரபட்சமாகவும் நடந்துகொள்ளவும் செய்து விடுகிறது.
இஸ்லாத்தின் பார்வையில் இவ்வாறு நடந்து கொள்வதானது, மிகவும் பாரதூரமான பாவமான ஒன்றாகும் என்பது கூட நமக்கு மறந்துபோய் விட்டது.
சமூகத்தின் இந்த அப்பாவித்தனத்தைத்தான் நமது அரசியல் வாதிகள் தமது வியாபார அரசியலுக்கான அடிப்படை மூலதனமாகக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய எமது சமூகத்தின் அவலங்களுக்கு இதுவும் ஒரு அடிப்படைக் காரணம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

நம் சமூகம் எவ்வளவு தூரம் அப்பாவித்தனமாகவும் பாரபட்சமாகவும் நடந்துகொள்கிறது என்பதற்கு ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சில மாதங்களுக்கு முன்னர் எமது பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் சகோதரி BBC தமிழோசைக்கு சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்

‘இந்நாட்டில் விபச்சாரம் சட்டபூர்வமான தொழிலாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்’ என்ற கருத்துப்பட அவர் கூறியதாக சொல்லப்பட்டது. இவரின் இந்தக் கருத்தானது பாரிய எதிரலைகளை நம் சமூகத்தில் தோற்றுவித்தது. உலமாக்கள், தஃவா அமைப்புக்கள், பிரமுகர்கள் மற்றும் இன்னும் பலர் இதனை பயங்கரமாகக் கண்டித்தனர்.  பல அச்சுறுத்தல்களும் இவருக்கு விடுக்கப்பட்டன. இது தொடர்பான கண்டனங்களின் சூடு தணிவதற்கு பல வாரங்கள் சென்றன.

ஒரு முஸ்லிம் சகோதரி மார்க்கத்திற்கு முற்றிலும் விரோதமான இது போன்ற ஒரு கருத்தைக் கூறியிருப்பாராயின் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும், சூதாட்ட சட்ட மூலம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்காக வந்தபோது ,எதுவித தயக்கமுமின்றி முஸ்லிம் அரசியல் வாதிகள் இதற்கு ஆதரவளித்ததனை எமது சமூகம் கண்டிக்கவில்லை. மாத்திரமின்றி இதனைக் கண்டுகொள்ளவும் இல்லை.

இந்த முஸ்லிம் சகோதரியினது கருத்தினாலும், இந்த அரசியல் வாதிகளினது நடவடிக்கைகளினாலும் ஏற்பட்ட விழைவுகளை ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது முஸ்லிம் அரசியல் வாதிகளின் குறித்த நடவடிக்கைகள் மிகவும் பாரதூரமானவை.

ஏனெனில், குறித்த முஸ்லிம் சகோதரியின் கருத்து ஒரு தனிநபர் கருத்தாக பதிவுசெய்யப்பட்டதே தவிர இந்நாட்டில் ஒரு சட்டமாக அது மாறமுடியாது. ஆனால் சூதாட்டநிலையங்களை அனுமதிக்கும் சட்ட மூலத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் நமது முஸ்லிம் அரசியல் வாதிகள் சூதாட்டம் என்கின்ற சமூக மார்க்கத் தீமைக்கு மாத்திரமின்றி மது,விபச்சாரம் போன்ற ஏனைய கொடிய பாவங்களையும் அங்கீகரித்திருக்கிறார்கள். ஏனெனில் கெசினோ சூதாட்ட நிலையங்களில் சூதாட்டம் மாத்திரம் நடைபெறுவதில்லை. மதுப்பாவனை, விபச்சாரம் என்கின்ற பாவகாரியங்களும் சேர்த்தே அந்த இடத்தில் நடைபெறுகின்றன.

கடந்த 2010 நவம்பர் மாதம் இந்த சூதாட்டசட்ட மூலம் வாக்கெடுப்பிற்கு வந்தபோது முக்கிய அரசியல் வாதிகள் எவ்வித அல்லாஹ்வின் பயமோ அல்லது கூச்சமோ இன்றி இந்த சட்ட மூலத்திற்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்பதனை பாராளுமன்ற ஹென்சாட் பதிவுகள் நிரூபிக்கின்றன.

அமைச்சர்களான பௌசி,மற்றும் அதாவுல்லாஹ் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ். பாராளுமன்ற உறுப்பினர்களான அஸ்வர் மற்றும் உனைஸ் பாறூக் ஆகியோர் கெசினோசட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தோராவர்.

உண்மையில் நம் சமூகம் இதற்கு காட்டிய எதிர்வினைகள் என்ன..? இவர்களின் தவறை சுட்டிக்காட்டி கண்டிப்பதற்கும் கேள்விகேட்பதற்கும் ஏன் நமது சமூகம் முன்வரவில்லை...?

இங்கு அதிர்ச்சியும் கவலையும் கொள்ளவேண்டிய விடயம் என்னவென்றால் இது போன்ற அரசியல் வாதிகளை அழைத்து நம் சமூகத்தில் கௌரவப்பட்டங்கள் வழங்கப்படுகின்றன. பாராட்டும் விருதுகளும் வழங்கப்படுகின்றன.

சுருக்கமாகச் சொன்னால் ஒரு சமூகத் தீமையை சட்டபூர்வமாக்க வேண்டும் என வெறும் கருத்து மாத்திரம் தெரிவித்த ஒருவரை காரசாரமாகக் கண்டித்த எம் சமூகம், மூன்று சமூகத் தீமைகளை சட்டபூர்வமாக்குவதற்கு ஆதரவு வழங்கிய அரசியல்வாதிகளை அழைத்து பாராட்டிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் நம் சமூகத்தின் படுமோசமான அப்பாவித்தனமும் பாரபட்சமும் என நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.

இன்னுமொரு விடயத்தையும் நாம் சொல்லியாகவேண்டும்.

நமது பிரதேசத்தில் அபிவிருத்தி என்கின்ற போர்வையில் பொதுமக்களின் பணம் எவ்வாறு கொள்ளையடிக்கப்படுகிறது என்பதனையும் அதன் மூலம் எவ்வாறான அநீதிகள் எம் சமூகத்திற்கு இழைக்கப்படுகிறது என்பதனையும் நாம் கடந்த 7 வருடங்களாக மிகவும் ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டிவருகிறோம். இதற்குப் பொறுப்பான அரசியல் வாதிகள் யார்..? என்பதனையும் நாம் தெளிவாக சுட்டிக்காட்டி வருவதோடு இவற்றை தடுத்து நிறுத்துவதற்கு நம் சமூகத்தின் சகல தரப்பாரும் முன்வர வேண்டும் எனவும் அழைத்துவருகிறோம்.


பொதுச் சொத்துக்களை சுறண்டிச் சாப்பிடுபவர்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு எவ்வளவு கடுமையானது என்பதுவும் அவ்வாறானவர்களோடு நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதனையும் மார்க்கம் நமக்கு தெளிவாகச் சொல்லித் தந்திருக்கிறது.

இந்நிலையில் எமதூரின் பெருமை மிக்க மார்க்கக் கல்வி நிறுவனம் ஒன்று பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதில் முன்னிற்கும் அரசியல் வாதிகளை அழைத்துப் பாராட்டி கௌரவித்திருக்கின்றார்கள். இது எமக்கு கவலையளிக்கிறது.

சமூகத்தீமைகளைக் கண்டிப்பதில் முன்னிற்க வேண்டியவர்களே அத்தீமைகளுக்குப் பொறுப்பானவர்களை அழைத்துபாராட்டினால் எப்படி நம் சமூகத்தில் மாற்றங்கள் உருவாகும்..? இவ்வாறு செய்வதானது, இஸ்லாத்தின் பார்வையில் பாரதூரமான தவறாகும். என்பதனைஎல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்.

இது போன்ற சம்பவங்கள் அனைத்தும் நம் சமூகத்தின் அரசியல் ரீதியான அப்பாவித்தனத்தையும்,அநீதியான நிலைப்பாடுகளையுமே எடுத்துக் காட்டுகின்றன. இந்நிலையிலிருந்து நம் சமூகம் மீளாதவரை நம் சமூகத்தில் எந்த நல்லமாற்றங்களையும் உருவாக்க முடியாது என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. நம் முஸ்லிம் அரசியல்வாதிகள் அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதை விடுத்து அவர்களது அரசியல் தலைவர்களை குறிப்பாக ஜனாதிபதியை திருப்திப் படுத்துவதற்குத்தான் முந்தியடித்துக் கொள்வார்கள்.

    ReplyDelete
  2. Yousuf//கண்ணா! லட்டு தின்ன ஆசையா? அதட்கும் கொடுப்பின வேனும் கண்ணா? பெண்களின் குரலும் அவ்ரத் என்ற உண்மையை உரக்க ஜும்மா கொத்துபாவில் பகிறங்கமாக பயப்படாமல் எத்திவைத்த சங்கை பொருந்திய உலமாவை உங்கள் கூட்டத்தில் உள்ள வைத்தியர் அவர்களின் மர்கஸில் என்னமோ எங்கையோ நுளைவதுபோல் நுளைந்து கண்டமாதிரியும் கர்சனை புறிந்த அன்றில் இருந்து உந்த ஊரின் உலமாக்கள் உங்கள் கூட்டத்தைவிட்டும் வெறுத்து ஒதுங்கிவிட்டர் அதனால் அவர்கள் நிலையங்களில் உங்களுக்கு பாராட்டு விழா நடக்கவில்லையே என்று ஆதங்கப்படாதீர்கள் ஏனெனில் அது நடக்காது? அல்லாஹ்வுக்கு மிக வெறுப்பானது சூதாட்டம்,விபச்சாரம்,மதுபோன்ற விடயங்கள் இல்லை இணைவைத்தல் என்ற சிர்க்காகும் கல்வி என்ற வியாபாத்தின் பெயரால் இணைவைப்பாளர்கள் வாணிவிழா என்ற பெயரால் அல்லாஹ் அல்லாத அர்ப படைபினங்களுக்கு இணைவைத்து சர்ஸ்வதி பூஜை நடத்தி வழிபட சொந்த இடத்தைகொடுத்து வியாபாரம் இனிதே நடைபெற வழிகோளும் நாம் அடுத்தவர் தவறுகளை மட்டும் சுட்டிகாட்டுவது நியாயம்தானா? சூதாட்டமும் பாவமும் முஸ்லிம்களுக்கே தடை செய்யப்பட்டவை இணைவைப்பாளர்களுக்கு இந்த உலகம் சுவர்கம் அவர்களுக்கு அணுபவிக்க சகல உரிமைகளும் உண்டு அதட்கு அவர்கள் செய்யும் காரியங்களில் பங்களிப்பு செய்வது இணைவைத்தல் பாவதிட்கு பங்களிப்பு செய்யும் பாவத்தைவிட கொடுமையானதல்ல?முஸ்லிம் என்பதட்காக ஏனைய மக்கள் அணுபவிப்பதட்கு முட்டுகட்டையாக நாம் இருக்க கூடாது? அந்நியநாட்டு அரசு என்பதே சகல பாவகாரியங்களினூடேயும் வருமானத்தை பெற்றுத்தான் அரசை நடாத்திசெல்லும் அரச சேவையில் உள்ள அணைவரும் அந்த கழப்பான வருமானங்களில் இருந்துதான் ஊதியம் பெறுகின்றனர்? மது,சிகரட் வரிகள் உல்லாச ஹோட்டல் வரிகளினால்தான் அரசுக்கு கூடிய வருமானம் கிடைக்கின்றன? அதனால் வரவு செலவுத்திட்டதை முஸ்லிம் என்பதட்காக எதிர்க வேண்டுமா?அரச வருமானத்தில் பாவத்தையும் ஹராத்தையும் கணக்கிட்டால் இந்தநாட்டு வீதியில் நடமாடவும் கூடாது இந்த நாட்டு கல்வி கூடங்களில் கல்வி கட்கவும் முடியாது இந்த நாட்டு அரச சேவையில் எந்த முஸ்லிமும் பணியாற்றவும் முடியாது? ஆக ஹராத்தோடு ஹலால் சேர்ந்து வருமானம் ஈட்டும் இந்த நாட்டில் முஸ்லிம்கள் வாழவும் முடியாது? கடலில் புதிதாக ஒரு தீவை கண்டுபிடித்து அங்கேதான் குடிஏறவேண்டி இருக்கும்?அதனால் அடுத்தவர்களை மட்டம் தட்டி நாம் பெரியால் ஆக கண்டதையெல்லாம் மார்கத்தின் பெயரால் முப்தியாட்டம் தீர்பாளர்களாக பிரச்சாரம் பண்ணுவதைவிடுத்து மக்கள் மணங்களில் குடிகொள்ளும் நல்லவற்றை பேசி அரசியல் செய்ய முன்வாருங்கள் உருப்படுவீர்கள் இல்லையெனில் 25000 மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் நீங்கள் எங்கள் பிரதிநிதிகள் அல்ல என்று உங்களை நிராகரித்து வாக்களித்த நிலையிலும் நாங்கள் வடமாகாணத்தில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்த ஆசனத்தை பெற்றிருக்கிறோம் என்ற கோமாளித்தனமான கூப்பாடாகத்தான் உங்கள் அரசியல் என்றும் இருக்கும்?//

    ReplyDelete

Powered by Blogger.