Header Ads



வளவாளர்களுக்கு குறித்த காலத்தில் வேதனம் வந்து சேர்வதில்லை என விசனம்

(ஐயெம் பைரூஸ்)

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மொழிகள் மூலம் சமூகத்தை ஒன்றிணைக்குத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் 'பாஷா சங்கம' (மொழிச் சங்கம்) மூலம் சிங்களச் சமூகத்திற்கு தமிழும், தமிழ் சமூகத்திற்கு சிங்களமும் கற்பிக்கும் வளவாளர்களுக்கு குறித்த காலத்தில் வேதனம் வந்து சேர்வதில்லை என வளவாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேற்படி வகுப்புக்கள் சிறப்பாக நடைபெற்று நிறைவுற்றிருக்கின்ற போதும், வளவாளர்களுக்கான ஊதியம் மாத்திரம் பூரணமாக வந்து சேர மறுக்கின்றது எனவும், குறித்த ஆண்டில் நிதித் தட்டுப்பாடு காரணமாக காலக்கிரமத்தில் வேதனம் வழங்கப்படும் என வளவாளர்களுக்கு தேசிய மொழிகள் பயிற்சி நிறுவனத்திலிருந்து கடிதம் வந்திருப்பதாகவும் வளவாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

பிரதேச செயலகங்கள் மூலமே முன்னர் வளவாளர்கள் தெரிவு செய்யப்பட்டு தேசிய மொழிப் பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் பாஷா சங்கள வளவாளர்களாக நியமிக்கப்பட்டனர். என்றாலும், பின்னர், தலைமையகத்திற்கு மீண்டும் வளவாளர்களின் தகவல்கள், சுயவிபரக் கோவை கோரப்பட்டுள்ளது. அவர்கள் தகைமையின் அடிப்படையில் வளவாளர்களை நியமிக்கவுள்ளதாக அறிவித்தல் வழங்கியுள்ளார்கள்.

எதுஎவ்வாறாயினும், புதிதாக வளவாளர்களாக தெரிவு செய்வதற்கு ஏற்கனவே தேசிய மொழிக் கற்கை நிறுவனத்தில் பயிற்சியைப் பெற்றவர்களுக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளபோதும், ஏற்கனவே வேதனம் சரியாக காலக் கிரமத்தில் வழங்க நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக பதில் கடிதம் அனுப்பாமல் இருக்கின்றனர் வளவாளர்கள் எனவும் வளவாளர்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தேசிய மொழிக் கற்கை நிறுவனம் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி வெகுசீக்கிரம் வளவாளர்களுக்குரிய வேதனத்தைக் காலக் கிரமத்தில் வழங்குமாயின் திறமையான பல வளவாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது அவ்வளவாளர்களின் கருத்தாகும்.

No comments

Powered by Blogger.