Header Ads



துனிசியாவில் ஆட்சி மாற்றத்திற்கு ஒப்புக்கொண்ட அரசு

துனிசியாவில் பல ஆண்டு காலங்களாக நடைபெற்றுவந்த சர்வாதிகார ஆட்சி கடந்த 2011-ம் ஆண்டில் ஏற்பட்ட புரட்சி மூலம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது. அரபு வசந்தம் என்றழைக்கப்பட்ட இந்த ஜனநாயக மாற்றம் கடந்த ஆண்டு, இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டபோது நெருக்கடிக்கு உள்ளானது.

இந்த அரசியல் தேக்கத்திற்கு முடிவு கட்டுவிதமாக ஆளும் கட்சியான என்னஹ்டா, ஆட்சி மாற்றத்திற்கான முடிவை ஏற்றுக் கொண்டது. தலைநகர் டுனிசில் அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் புதிய உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது. இதன்படி, புதிய தேர்தல் நடைபெறும்வரை இடைக்கால ஆட்சி அமைத்திட தற்போதைய அரசு ஒப்புக்கொண்டது.

இந்த ஒப்பந்தமானது தற்காலிகமாக துனிசியாவில் அமைதியை நிலை நிறுத்த உதவும். எனினும், கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் தொடர்ந்து பதவியில் இருந்த இஸ்லாமிய மிதவாதக் கட்சியான என்னஹ்டாவிற்கு இது பின்னடைவாகவே கருதப்படுகின்றது. 

கடந்த பிப்ரவரி மாதம் முக்கிய இடதுசாரித் தலைவரான சோக்ரி பெலைடும், பின்னர் ஜூலை மாதத்தில் மற்றொரு முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான முகமது பிராம்மியும் கொல்லப்பட்டவுடன் இந்தத் தாக்குதல்கள் தீவிரமடைந்தன. இந்தக் கொலைகளை என்னஹ்டா கட்சி அரசு மறுத்தபோதிலும், இஸ்லாமியர்களை அந்தக் கட்சி கட்டுப்படுத்தத் தவறியதாக எதிர்க்கட்சிகள் குறை கூறின.

நேற்று என்னஹ்டா மற்றும் தேசிய சால்வேஷன் முன்னணி தலைமையிலான எதிர்க் கட்சி ஆகிய இரண்டுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை யுஜிடிடி தொழிற்சங்க யூனியன் மூலம் நடைபெற்றது. இதன்மூலம், புதிய அரசாங்கம் இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவானது. இந்தப் புதிய அரசாங்கம் வரவிருக்கும் தேர்தல்களை மேற்பார்வையிடும் என்பதுவும் இந்த ஒப்பந்தம் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.

No comments

Powered by Blogger.