லிபியாவிலுள்ள ரஷ்யத் தூதரகம் மீது தாக்குதல்
லிபியாவின் விமானப்படை அதிகாரி ஒருவர் ரஷ்யப் பெண் ஒருவரால் கொல்லப்பட்டதாகத் தகவல் வந்ததை அடுத்து நேற்று லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இருந்த ரஷ்யத் தூதரகம் தாக்கப்பட்டது. ஆயுதமேந்திய கும்பல் ஒன்று தூதரகத்தின் சுவர் ஏறிக் குதித்து அங்கிருந்த கதவினை உடைத்து வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலவரத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் லிபிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
லிபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது அப்டெலசிஸ் லிபிய பணியாளர்களால் தூதரகத்தைக் காப்பாற்ற முடியவில்லை என்று தெரிவித்ததை முன்னிட்டு இன்று ரஷ்யா தனது தூதரகத்தை மூடுவதாக அறிவித்தது. அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் பத்திரமாக லிபியா எல்லையைத் தாண்டி துனிசியாவிற்கு சென்று விட்டதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தகவல் தொடர்பாளர் அலெக்சாண்டர் லுகாஷெவிக் தெரிவித்தார். லிபிய அதிகாரிகள் ரஷ்ய சொத்துகளை பாதுகாத்து அங்கு விரைவில் பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதத்தில் நிலைமைகளை சீரமைக்க முயற்சி செய்வதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சில மூத்த அதிகாரிகள் மட்டும் துனிசியாவில் தங்கி லிபியாவுடனான தொடர்புகளை மேற்கொள்ளுவார்கள் என்றும் மற்றவர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் லுகாஷெவிக் தெரிவித்தார். ரஷ்யாவின் குடிமக்கள் தற்சமயம் லிபியாவிற்கு வருகை தருவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் ரஷ்யத் தூதரகம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார்
Post a Comment