இரண்டு கண்டங்களை இணைக்கும் சுரங்க ரயில் திட்டம் துருக்கியில் ஆரம்பம்
துருக்கி நாட்டின் பிரதான நுழைவாயில் பகுதியாக விளங்கும் பாஸ்பரஸ் வளைகுடா பகுதியில் கடலுக்கு அடியில் இரண்டு கண்டங்களை இணைக்கும் குகை ரயில் திட்டத்தை இன்று அந்நாட்டு அரசு துவக்கியது. மொத்தம் 13.6 கி.மீ. தூரம் கொண்ட இந்த குகை ரயில்பாதையின் ஒரு பகுதி போஸ்போரஸ் வளைகுடாவில் கடல்மட்டத்தில் இருந்து 200 அடி ஆழத்தில் அமைக்கப்படுகின்றது.
இது அந்நாட்டில் செயல்படும் இஸ்லாமிய அரசின் பல மெகாத் திட்டங்களுள் ஒன்றாகும். மூன்று பில்லியன் யூரோக்கள் திட்ட மதிப்பீட்டில் நடைபெறும் இந்தத் திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சி நவீன துருக்கியின் 90ஆவது ஆண்டு நிறைவு விழாவையும் இணைத்து கொண்டாடப்படும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.
துருக்கி அரசு இரண்டு விழாக்களையும் இணைத்து கொண்டாடும் என்று அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் பினாலி இல்டிரிம் தெரிவித்தார். துருக்கி குடியரசின் 90ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன் ஒன்றரை நூற்றாண்டு கனவுத்திட்டமான இஸ்தான்புல்லின் சுரங்க ரயில் திட்டமும் இணைந்து கொண்டாடப்படும் என்று அவர் கூறினார்.
சுரங்க ரயில்பாதையுடன் மர்மரே திட்டம் எனப்படும் இந்தத் திட்டத்தில் ஐரோப்பியா மற்றும் ஆசியா ஆகிய இரண்டு கண்டங்களையும் தற்போது இணைக்கும் புறநகர் ரயில்பாதைளின் 76 கி.மீ. தூரத்தை மேம்படுத்தும் திட்டமும் அடங்கியுள்ளது.
கடந்த 1860களில் ஓட்டோமான் சுல்தான் அப்துல் மெட்ஜித்தின் எண்ணத்தில் உதித்த இந்தத் திட்டத்தை நிறைவேற்றப் போதுமான தொழில்நுட்பங்கள் அந்தக் காலத்தில் இல்லாததினால் அவரால் இதனை செயல்படுத்த முடியவில்லை. எனினும் இதற்கான சாத்தியங்கள் இருந்ததும், இத்தகைய திட்டம் குறைவான மதிப்பீட்டில் நிறைவேற்றப்படக்கூடிய வாய்ப்புகள் இருந்ததும் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டன.
எனவே, 1980களில் வளர்ச்சி பெற்ற இந்தத் திட்டத்திற்கு துருக்கியின் பிரதமரான ரிசெப் தயிப் எர்டோகன் கடந்த 2004 ஆம் ஆண்டில் புத்துயிர் அளித்தார். இத்துடன் 16 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தலைநகருக்கு மூன்றாவதாக ஒரு விமான நிலையம், சர்வதேச நீர்வழிப் போக்குவரத்தை எளிதாக்கும் வண்ணம் பாஸ்பரஸ் வளைகுடாவிற்கும் மற்றொரு கால்வாய்க்கும் இடையிலான மூன்றாவது பாலம் போன்றவையும் இந்த மெகாத் திட்டத்தில் அடங்கும். இரண்டு மில்லியன் மக்கள், நெரிசல் நிறைந்த இரண்டு பாலங்கள் வழியே கடந்து செல்லவேண்டியிருக்கும் இஸ்தான்புல்லில் போக்குவரத்து மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது.
735 மில்லியன் யூரோ கடனுதவியை ஜப்பானிய வங்கி வழங்க இருப்பதால் அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே இந்தத் துவக்க விழாவில் கலந்துகொள்கின்றார்.
Post a Comment