அம்பாறை நிலநடுக்கம் - அச்சமடைய தேவையில்லை, ஆனால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது
(Tn) அம்பாறை பாணமவிலிருந்து சுமார் 400 கிலோ மீற்றர் ஆழ் கடலில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பாக தொடர்ந்தும் நில அதிர்வு மையம் கண்காணித்து வருவதாக புவியியல் மையத்தின் பிரதி பணிப்பாளர் டொக்டர் பேர்னார்ட் பிரேம் தெரிவித்தார்.
தெற்கில் தேவேந்திர முனையிலிருந்து 500 கிலோ மீற்றர் ஆழ் கடல் பகுதி நில அதிர்வுக்கான செயற்பாட்டுப் பகுதியாக கருதப்படுகிறது.
இப்பகுதியில் ஏற்படும் அதிர்வுகளின் அலைத் தாக்கமே பாணம கடல் பகுதி யில் ஏற்பட்ட 4.5 ரிச்டர் அதிர்வு என டொக்டர் பிரேம் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே போன்று பாணம பகுதி கடலில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்நில அதிர்வுகள் அடுத்து இன்று வரை நீண்ட கால கண்காணிப்பு பணிகளை புவியியல் மையல் நடத்தி வந்தது. இந் நில அதிர்வுகளால் பாதிப்புகள் எதுவும் கிடையாது என்பதுடன் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று மற்றுமொரு அதிர்வு உடனடியாக ஏற்படும் என்பதை கூற முடியாது என்று தெரிவித்த அவர் புவியியல் மையம் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கைக்குரிய பூமி பிரதேசத்தில் தெற்கு கடலில் ஏற்பட்டு வரும் பாரிய வெடிப்பின் பிரதிபலிப்பாகவே பாணமவில் இடம் பெற்றுள்ள நில நடுக்கத்தைப் பார்க்க முடிகின்றதென புவியியல் வல்லுனர் பேராசிரியர் சி. பி. திசாநாயக்க தெரிவித்தார். தாம் இது தொடர்பில் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், பாணமவில் 4.5 ரிச்டர் அளவு நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் முன்னர் இடம் பெற்றுள்ள நிலநடுக்கங்களை விட இது அதிகமாகவே உள்ளதாகவும் தெரிவித்தார். பாணமவில் இடம்பெற்ற தைப் போன்று எதிர்வரும் காலங்களில் அம்பாறை, மொனராகலை, உடவளவை போன்ற பகுதிகளிலும் நில நடுக்கங்களை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் எதிர்வு தெரிவித்தார். நேற்று முன்தினம் அம்பாறை மாவட்டத்தில் பாணம பிரதேசத்தில் 4.5 ரிச்டர் அளவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்தது.
கடலுக்கடியில் 400 கிலோ மீற்றர் தூரத்திலேயே இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்தப் பணியகம் அறிவித்திருந்தது. இது தொடர்பிலான பின்னணி பற்றி வினவிய போதே பேராசிரியர் திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இத்தகைய அனர்த்தங்கள் தொடர்பில் 2012 ஆம் ஆண்டு முதலே தாம் தகவல்களை வெளியிட்டு வந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment